Do not have a Cplus account?  Create an account

Log In

Stay logged in.
Can not access your account?

Google+

Sign in and start sharing with Google+

Only shared with the right people

Share some things with friends, others with some families but do not share anything to your boss!

Make your conversations come alive

Hangout make conversations come alive stockings photos, emoticons even group video calls for free!

Make your photos look better than ever

Automatic backup, organize, and improve your photos!

Do you know?

You can sign in to your Google+ account using your existing Google?

Results for keyword ""

Sign Up
Hangouts

மணல் கூரை

மணல் கூரை | தமிழ் பண்பாட்டுக் கூரை!

GO TO TOP


You are not connected. Please login or register

View previous topic View next topic Go down  Message [Page 1 of 1]

1சங்க காலத்தில் நிலப்பிரபுத்துவ சமூகம் Empty சங்க காலத்தில் நிலப்பிரபுத்துவ சமூகம் Sat May 25, 2013 6:02 pm

மணல் கூரை

மணல் கூரை
மணல் கூரை

மணல் கூரை

பதிவுகள் : 378

பதிவின் தரம் : 376

பதிவு விருப்பம் : 268

இணைந்தது : 06/04/2013


V.I.P MEMBER

V.I.P MEMBER
கணசமூகம் படிப்படியாக வளர்ந்து மாற்றமடைந்து அடிமைச் சமூகம் என்ற நிலையை எட்டியது. அதனால், கணசமூகத்து மக்கள் இதுவரை அறிந்திராத பொய், களவு, வஞ்சனை சூது முதலிய அனைத்து விதமான தீமைகளும் சமூகத்தில் வந்து ஒட்டிக் கொண்டன. கணசமூகத்தின் நியதிகள் உடைக்கப்பட்டன. நடைமுறைகளும் பழக்க வழக்கங்களும் மீறப்பட்டன. சுயநல உணர்வு தலை தூக்கியது. சமத்துவ உணர்வு தகர்க்கப்படட்டது. பகுத்துண்ணும் பண்பு துடைத்தெறியப்பட்டது. இம்மாற்றத்தால் ஏற்பட்ட பண்பாட்டுச் சிதைவுகளை இலக்கியங்கள் நமக்குக் காட்டுகின்றன.

‘பொய்யும் களவும் தோன்றிய பின்னர்

ஐயர் யாத்தனர் கரணம் என்ப” என்று

பொய் களவு முதலிய தீமைகள் அடிமைச்சமூகத்தில் புதிதாகத் தோன்றியதற்குத் தமிழ் இலக்கண நூல்கள் சான்றளிக்கின்றன.

‘முளவு மாத்தொலைச்சிய முழுச்சொலாடவர்

உடும் பிழுதறுத்த வொடுங்காய்ப் படலைச்

சீறில் முன்றிற் கூறு செய்திடுமார்

கொள்ளி வைத்தகொழு நிணம்”; என்றும்

‘உள்ளது

தவச் சிறிதாயினும் மிகப் பல ரென்னாள்

நீணெடும் பந்தர் ஊண் முறை யூட்டும்

இற்பொலி மகடூஉ “ என்றும்

கணசமூகமாக வாழ்ந்த மக்கள் தமக்குக் கிடைத்த சிறிதளவு உணவையும் தம்முள் வேறுபாடின்றிச் சமமாகப் பங்கிட்டு உண்ட பாங்கினை நமக்குப் பெருமிதத்துடன் காட்டிய சங்க இலக்கியங்கள,

‘சுவைக்கினிதாகிய குய்யுடையடிசில்

பிறர்க்கீவின்றித் தம் வயிறருத்திய’ ( புறநானூறு 127 )

செல்வர்களின் சுயநலம் மிக்க இழிசெயலைக் காட்டவும் தவறவில்லை.

உபரி உற்பத்தியைச் சமூகத்தின் நலனுக்குப் பயன்படுத்தாமல் பங்கிட்டுக் கொள்ளாமல் தனிநபர்களான சமூகத்தலைவர்கள் தம் சுய நலத்துக்காக – சுகபோக வாழ்க்கைக்காக அபகரித்துக் கொண்டனர். சமூகத்தலைவர்கள் ஆண்டைகள் ஆயினர். சக மனிதர்களை அடிமைகளாக்கி ஒடுக்கினர். அதனால் சமூகத்தில் எதிர்ப்பு தோன்றியது. குழப்பம் ஏற்பட்டது. தமிழகத்தில் ஸ்பார்டாகஸ் போன்ற அடிமைப்போராளிகள் தோன்றி அடிமைகளைத்திரட்டிப் புரட்சி நடவடிக்கைகளில் ஈடுபடாவிட்டாலும் கொள்ளையடித்தல் முதலிய செயல்களில் அவர்கள் ஈடுபட்டனர். பாதிக்கப்பட்டவர்கள் பலாத்காரத்தில் இறங்கினர். இந்நிகழ்வுகளைச்சங்க இலக்கியங்கள் பதிவு செய்துள்ளன. பாலை நில மக்களின் தொழில் என்று இலக்கிய நூல்களும், இலக்கண நூல்களும் வருணிக்கின்ற ஆறலைத்தல் சூறை கோடல் என்பவை இவ்வகைப்பட்ட எதிர்ப்புச் செயல்களேயாகும். ‘வேலொடு நின்றான் இடு என்றதுபோலும்” என்று வள்ளுவரும் இதைப்பற்றிக்கூறியுள்ளார். ‘கைப்பொருள் வவ்வும் களவேர் வாழ்க்கை” (வழிப் போவாரைக் கூப்பிடும்படி வெட்டி அவர் கையில் உள்ள பொருள்களைக் கொள்ளை கொள்ளும் களவே உழவு போலும் வாழ்க்கையைப் பொருளாக உடைய கொடியோர்) என்று பெரும்பாணாற்றுப்படை ( 40 ) அது பற்றிக் கூறுகிறது.

‘தொடுதோலடியர் துடிபடக் குழீஇக்

கொடுவில்லெயினர் கொண்டியுண்ட

உணவில் வெறுங் கூட்டுள்ளகத்திருந்து

வளைவாய்க் கூகை நண்பகல் குழறவும்”

( கொடிய வில்லையுடைய வேடர்கள் செருப்பணிந்த கால்களை உடையவராய்த் துடியொலிப்பத்திரண்டு கொள்ளை கொண்ட நெல், பின் இல்லையான வறிய கூடுகளின் உள்ளேயிருந்து கூகைகள் குழறும் ) என்று பட்டினப்பாலை ( 265-68 ) கூறுகிறது.

குறிஞ்சி முல்லை நிலங்களில் வாழ்ந்த மக்கள் வறட்சியும் உணவுப்பற்றாக்குறையும் ஏற்பட்ட காலங்களில் மிகு விளைச்சல் கண்ட மருத நிலப்பகுதிகளுக்குச் சென்று நெல்லைக் கொள்ளையடித்து வந்ததனை மேற்குறித்த பட்டினப்பாலை அடிகள் கூறுகின்றன. இத்தகைய செயல்கள் அடிக்கடி நிகழ்ந்தன. அதனால் மருநிலத்தை ஆண்ட மன்னர்களின் கண்ணுறக்கம் காணாமல் போயிற்றாம். இது குறித்து ஆவூர் கிழார் அமைவுறக்கூறும் செய்தி நம் கவனத்துக்கு உரியதாகிறது. அவரது பாடல் இது.

உடுதூர் காளை யூழ் கோடன்ன

கவை முட் கள்ளிப் பொரியரைப் பொருந்திப்

புதுவரகரிகாற் கருப்பைபார்க்கும்

புன்றலைச் சிறா அர் வில்லெடுத்தார்ப்பபிற்

பெருங்கட் குறு முயல் கருங்கலனுடைய

மன்றிற் பாயும் வன்புலத்ததுவே.

கரும்பி னெந்திரஞ் சிலைப்பினயல

திருஞ்சுவல் வாளை பிறழுமாங்கண்

தண்பணை யாளும் வேந்தர்க்குக்

கண்படையீயா வேலோனூரே – புறநானூறு – 322

(நிலத்தை உழுததனால் ஓய்ந்த நடை கொண்டு செல்லும் காளையின் கொம்புபோல் கவைத்த முட்களையுடைய கள்ளி மரத்தின் பொரிந்த அடிப்பகுதியைப் பொருந்தியிருந்து புதிது விளைந்த வரகையரிந்த அரிகாலின் கண் வந்து மேயும் எலியைப் பிடிப்பதற்குச் செவ்வி பார்க்கும் புல்லிய தலையையுடைய சிறுவர்கள் கையில் வில்லை எடுத்துக்கொண்டு ஆரவாரிப்பாராயின் , பெரிய கண்களையுடைய குறுமுயல் கரிய புறத்தையுடைய மட்கலங்கள் உருண்டு உடைந்து கெட மன்றிலே பாய்ந்தோடும் வன் புலத்தின் கண்ணே உள்ளது, கரும்பாட்டும் ஆலை ஒலிக்குமாயின் அயலதாகிய நீர் நிலையில் உள்ள பெரிய பிடரையுடைய வாளை மீன்கள் துள்ளிப்பாயும் அழகிய இடத்தையுடைய குளிர்ந்த மருத நிலத்து ஊர்களை ஆட்சி செய்யும் அரசர்களுக்குக் கண்ணுறக்கத்தை எய்தாமைக்கு ஏதுவாகிய அச்சத்தைத் தரும் வேலையுடையானது ஊர் )

‘வேலோனது ஊர் வன்புலத்தது ஆயினும் தண்பணை ஆளும் வேந்தர்க்குக் கண்படை ஈயா’ என்னும் புலவரின் கூற்று, எயினரது கொள்ளை மற்றும் குழப்பங்களில் இருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டிய கட்டாயம் தண்பணை ஆளும் வேந்தர்க்கு ஏற்பட்டதை உணர்த்துகிறது. சுரண்டலையும் சுரண்டும் வர்க்கத்தையும் பாதுகாத்திட ஓர் அமைப்பு தோற்றுவிக்கப்பட வேண்டிய அவசியம் அவர்களுக்கு ஏற்பட்டது. அரசு தோற்றுவிக்கப்பட்டது.

அடிமைச் சமூகத்தில் ஆணாதிக்கம் தலை தூக்கியது. தாய்த்தலைமை தூக்கியெறிப்பட்டது. பெண், அடிமை நிலைக்குத் தள்ளப்பட்டாள், தனிச்சொத்துடைமை ஏற்பட்டது. இது குறித்து முன்னர்க் கூறப்பட்டுள்ளது.

தமிழகத்தில் நிலப்பிரபுத்துவம் கால் பதித்துத் தலையெடுக்கத் தொடங்கிய காலகட்டத்தில் ஆரியர்களின் வருகையும் நிகழ்ந்தது. கலை கலாச்சார தத்துவார்த்த பண்பாட்டு தளங்களில் நிலப்பிரபுத்துவத்துக்கு ஆதரவான நிலையினை ஆரியப்பார்ப்பனர் மேற்கொண்டு ஒழுகலாயினர். அத்துறைகளில் எதிர்நிலையினை மேற்கொண்டு செயல்பட்ட பூதவாதிகள், உலகாயதர், சமணர், பௌத்தர் முதலியவர்களுக்கு எதிராகவும்பார்ப்பார் செயல்பட்டனர்.

சங்க காலத்தில் தமிழ் மன்னர்களுக்கும் ஆரியப் பார்ப்பனர்களுக்கும் இடையிலான நெருக்கமான உறவுக்குச் சங்க இலக்கியங்கள் சான்றளிக்கின்றன. ‘நின் முன்னோரெல்லாம் பார்ப்பார் நோவன செய்யலர்’ என்று சோழன் நலங்கிள்ளிக்குப்புலவர் தாமப்பல் கண்ணனார் கூறுவது ( புறநானூறு : 43 ) நம் கவனத்துக்குரியதாகிறது.

‘ஆன்ற கேள்வி யடங்கிய கொள்கை

நான் மறை முதல்வர் சுற்றமாக

மன்ன ரேவல் செய்ய மன்னிய

வேள்வி முற்றிய வாள் வாய் வேந்தே’ - புறநானூறு : 26

( அமைந்த கேள்வியையும் ஐம்புலனும் அடங்கிய விரதங்களையும் நான்கு வேதத்தையும் உடைய அந்தணர் சுற்றமாக வேந்தர் அதற்கேற்ப ஏவல் செய்ய, நிலைபெற்ற வேள்வியைச் செய்து முடித்த வாளினையுடைய வேந்தே ) என்று, தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியன் வேள்விகள் செய்தது பற்றியும் அவனுக்கு வேதியர்கள் அரசியல் சுற்றமாக அமைந்திருந்தமை குறித்தும் மாங்குடிகிழார் பாடியுள்ளார்.

‘நற்பனுவல் நால்வேதத்

தருஞ்சீர்த்திப் பெருங்கண்ணுறை

நெய்ம்மலியாவுதி பொங்கப் பன்மாண்

வீயாச் சிறப்பின்வேள்வி முற்றி

யூப நட்ட வியன் களம் பல கொல்’ – புறநானூறு : 15

( குற்றமில்லாத நல்ல தரும நூலினும் நால்வகைப்பட்ட வேதத்தினும் சொல்லப்பட்ட எய்தற்கரிய மிக்க புகழையுடைய சமிதையும் பொரியும் முதலாகிய பெரிய கண்ணுறையோடு நெய்மிக்க புகை மேன்மேற் கிளரப் பல மாட்சிமைப்பட்ட கெடாத தலைமையையுடைய யாகங்களை முடித்துத் தூண் நடப்பட்ட அகன்ற வேள்விச்சாலைகள் பல ) என்று பல்யாக சாலை முதுகுடுமிப் பெருவழுதி என்னும் பாண்டிய மன்னன் பெயருக்கேற்பப் பலயாகங்கள் செய்தது குறித்து நெட்டிமையார் பாhடியுள்ளார்.

பணியியரத்தை நின் குடையே முனிவர்

முக்கட் செல்வர் நகர் வலஞ்செயற்கே

இறைஞ்சுக பெரும நின்சென்னி சிறந்த

நான் மறை முனிவரேந்து கை முன்னே - புறநானூறு : 6

( நினது கொற்றக்குடை முனிவராற் பரவப்படும் மூன்று திரு நயனத்தையுடைய செல்வரது கோயிலை வலம் வருவதற்குத் தாழ்க, பெரும, நினது முடி, மிக்க நான்கு வேதத்தையுடைய அந்தணர் நின்னை நீடு வாழ்க என்று எடுத்த கையின் முன்னே வணங்குக) என்று, புலவர் காரிகிழார் அம்மன்னனுக்கு அறிவுறுத்துகிறார். இம்மன்னர்களையல்லாது, ராஜசூயம் வேட்ட பெருநற்கிள்ளி, கரிகாற்பெரு வளத்தான் முதலிய பெருமன்னர்களும் வேள்விகள் பல செய்தனர் என்று இலக்கியங்கள் கூறுகின்றன.

வேள்விகள் செய்யும் போது அரசர்கள் பார்ப்பார்க்கு ஏராளமான பொன்னும் பொருளும் விளைநிலங்களுகம் தானமாக வழங்கினர். அவ்வாறு வழங்கும்போது தாரை வார்த்துக் கொடுத்தனர். அதற்காக அரசர்கள் பார்ப்பார் கையில் வார்த்த நீர் கடல் வரை பரவியது என்று புலவர்கள் பாடியுள்ளனர்.

‘கைபெய்த நீர் கடற்பரப்ப

ஆமிருந்த அடைநல்கி”

( பார்ப்பார்க்குக் கொடுக்குங்கால் அரசர்கள் அவர்கள் கையில் பெய்த நீர் கடலளவு பரந்து செல்லுமாறு வளம் மிகுந்த மருதநிலத்து ஊர்களைக் கொடுத்தனர் ) என்று புறநானூறு ( 362 ) பேசுகிறது.

வேதத்துக்கு மாறுபட்ட கருத்துடையவர்களின் வளர்ச்சியைத் தடுக்க வேண்டும் என்ற நோக்குடன் பார்ப்பார் செயல் பட்டதனை ஆவூர் மூலங்கிழார் தம் பாடலில் குறிப்பிட்டுக் கூறியுள்ளார். பூஞ்சாற்றூர்ப் பார்ப்பான் கவுணியன் விண்ணந்தாயன் என்பவனைப் புலவர் ஆவூர் மூலங்கிழார் பாடிய பாடலில்’ அவன் பழைய நூலாகிய வேதத்துக்கு மாறுபட்ட கருத்துடையோரது மிகு வளர்ச்சியைத் தடுத்துச் சாய்ப்பதற்காக வேள்விகளைச் செய்தாரது மரபில் வந்தவன்” என்று புகழ்கிறார்.

‘நன்றாய்ந்த நீணிமிர்சடை

முது முதல்வன் வாய்போகா

தொன்றுபுரிந்த வீரிரண்டின்

ஆறுணர்ந்த வொரு முது நூல்

இகல் கண்டார் மிகல் சாய்மார்

மெய்யன்ன பொய்யுணர்ந்து

பொய்யோராது மெய் கொளீஇ

மூவேழ் துறையும் முட்டின்று போகிய

உரைசால் சிறப்பின் உரவோன் மருக’ - புறநானூறு : 166 என்பது புலவர் ஆவூராரின் கூற்று.

(முதிய இறைவனாகிய சிவபெருமானது வாக்கை விட்டு நீங்காது அறமொன்றையே மேவிய நான்கு கூறையுடைத்தாய் ஆறங்கத்தாலும் உணரப்பட்ட ஒரு பழைய நூலாகிய வேதத்துக்கு மாறுபட்ட நூல்களைக் கண்டோராகிய புத்தர் முதலாயின புறச் சமயத்தாரது மிகுதியைச் சாய்க்க வேண்டிய அவரது மெய் போன்ற பொய்யை உளப்பட்டறிந்து அப்பொய்யை மெய்யென்று கருதாமல் உண்மைப் பொருளை அவர்களுக்கு ஏற்பச் சொல்லி இருபத்தொரு வேள்வித்துறையையும் குறையின்றாகச் செய்து முடித்த புகழமைந்த தலைமையுடைய அறிவுடையோர் மரபிலுள்ளவன்’ ) என்பது உரைகாரர் இவ்வடிகளுக்குக் கூறும் பழைய உரை ஆகும்.

இங்கு, இகல் கண்டார் என்பதற்கு ‘வேதத்துக்கு மாறுபட்ட நூல்களைக் கண்டோராகியபுத்தர் முதலிய புறச்சமயத்தார்” என்று பழைய உரைகாரர் கூறுகிறார்.

நலங்கிள்ளி என்ற சோழ மன்னைக் கண்டு உறையூர் முது கண்ணன் சாத்தனார் என்ற புலவர் சில அறிவுரைகளைக் கூறிவாழ்த்தினார். ‘நின் நாண்மகிழிருக்கை பாண்முற்றுக , நின் மார்பு மகளிர் தோள் புணர்க, நின் அரண்மனை முற்றத்தின் கண்முரசு இனிதே முழங்குக, நீ கொடியோரைத் தெறுதலும் செவ்வியோர்க்கு அளித்தலும் செய்வாயாக, நின் சுற்றம் மகிழ்வோடு வாழ்வதாக, நீ சேர்த்துப் பாதுகாத்த நின் செல்வம் புகழ்ச்சிக்கு உரியதாகுக”. என்று அவனை வாழ்த்தும் புலவர் ,’நல்லதன் நலனும் தீயதன் தீமையும் இல்லை என்பார்க்கு நீ இனனாகிலீயர் ( நல்வினையினது நன்மையும் தீவினையினது தீமையும் இல்லை என்பார்க்கு நீ நட்பாகா தொழிக ) என்று சோழன் நலங்கிள்ளிக்கு அறிவுரை கூறுகிறார்.’ இல்லை என்போர் நாத்திகர்” என்று புறநானூற்றின் பழைய உரைகாரர் இதற்கு விளக்கம் கூறுகிறார். ‘நாத்திகரோடு நட்புக் கொள்ளலாகாது” என்று புலவர் அரசனுக்கு ஆலோசனை கூறுகிறார். இங்கு கருத்து முதல்வாதிகள் நாத்திகர்களை அச்சுறுத்தி ஒதுக்கி வைக்கும் செயலை நாம் காண்கிறோம்.

சுரண்டும் வர்க்கத்தக்கும் சுரண்டலுக்கும் ஆதரவாகவும் எதிராகவும் ஆன கருத்துப் போர்கள் சுரண்டல் தோன்றிய காலத்திலேயே தோன்றிவிட்டன, சங்க காலத்திலும் அப்போர் நிகழ்ந்தது. அதில் சுரண்டும் வர்க்கத்துக்கு ஆதரவான நிலையினையே கருத்து முதல் வாதிகள் மேற்கொண்டனர். அவர்களுக்கு , சுரண்டும் வர்க்கத் தலைவர்களான அரசர்கள் பொன்னும் பொருளும் விளைநிலங்களும் ஏராளமாகக் கொடுத்து ஆதரித்தனர். கருத்துப்போரில் தமக்கு ஆதரவாகச் செயல்பட்ட கருத்து முதல்வாதிகளுக்கு அள்ளிவழங்கியது போலவே பகைவர்களுக்கு எதிராக ஆயுதமேந்திப் போரிட்ட போர் வீரர்களுக்கும் படைத்தலைவர்களுக்கும் பொன்னும் பொருளும் விளைநிலங்களும் அரசர்கள் அள்ளிவழங்கினர். அது போலவே அரசர்கள் மண்ணாசை காரணமாக, குறிஞ்சி முல்லை நிலங்களில் கணசமூகமாக வாழ்ந்த மக்களை அழிக்கவும் அடக்கி ஒடுக்கவும் அடிமைப்படுத்தவும் பெரிதும் முயன்றனர். மறக்கள வழி மறக்கள வேள்வி முதலான புறத்துறைப் பாடல்கள் இதற்குச் சான்றளிக்கின்றன. இப்போர்களில் துணை நின்ற வீரர்கட்கும் படைத் தலைவர்கட்கும் அரசர்கள் பட்டமும் பதவியும் கொடுத்துப் பெருமைப்படுத்தியதுடன் ஏராளமான விளை நிலங்களையும் வளவயல்களையும் தானமாக வழங்கினர்.

‘துறைநணி கெழுமிய கம்புள் ஈனும்

தண்ணடை பெறுதலு முரித்தே வைநுதி

நெடுவேல் பாய்ந்த மார்பின்

மடல்வன் போந்தையின் நிற்கு மோர்க்கே’

( கூரிய நெடுவேல் தைத்து நிற்கும் மார்புடனே மடல் நிறைந்;த வலிய பனைமரம் போல நிற்கும் போர்வீரரர்க்கு, நீர்த்துறையில் இருக்கும் புதர்களில் கம்புட் கோழிகள் முட்டைகளை ஈனும் மருதநிலத்து ஊர்களைப் பெறுதலும் உரியதாம் ) என்று போர்வீரரர்களுக்கு நீர் வளம் மிக்க மருதநிலங்கள் வழங்கப்பட்டதனைப் புறநானூறு

( 297) கூறுகிறது.

மேற்குறித்;த புறநானூற்றுப் பாடல்கள், பார்ப்பார்க்கும் போர்வீரார்களுக்கும் நீர்வளம் மிக்க வயல் நிலங்கள் தானமாக வழங்கப்பட்ட செய்தியைக் கூறுகின்றன. பொதுவில் இருந்த நிலம் தனியுடைமை ஆக்கப்பட்டது : தனிச் சொத்துடைமையும் நிலப்பிரபுத்துவமும் தோன்றின.

ஏடறிய வரலாற்றுக் காலத்தில் உலகம் முழுவதிலும் அமைந்திருந்தது போலவே தமிழகத்திலும் ஆதி பொதுவுடைமைச் சமூகம் அமைந்திருந்தது. ஆனால் தமிழகத்தின் பூகோளச் சூழல் காரணமாக. குறிஞ்சி முல்லை நிலங்களை விட மருத நிலத்தில் சமூக மாற்றம் முன்னதாக நிகழ்ந்தது. அடிமைச் சமூகமும் நிலப்பிரபுத்துவ சமூகமும் தோன்றின.

வைகைக் கரையில் மதுரையைத் தலைநகராகக் கொண்டு பாண்டிய அரசு தோன்றியது : காவிரிகடலோடு கலக்கும் இடத்தில் புகார்நகரைத் தலைநகராகக் கொண்டு சோழப் பேரரசு தோன்றியது.

‘வர்க்க விரோதிகளைக் கட்டுக்குள் வைக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்து அரசு தோன்றியதால் அது மிகவும் வலிமை வாய்ந்த பொருளாதார ரீதியில் ஆதிக்கம் செலுத்தும் வர்க்கத்தின் அரசாக அமைகிறது.” என்ற எங்கல்ஸ் அவர்களின் கூற்றை மெய்ப்பிக்கும் விதத்தில் சுரண்டும் வர்க்கத்தின் பாதுகாவலனாகவே அரசுகள் அன்று விளங்கின: இன்றும் விளங்குகின்றன.

-வெ.பெருமாள்சாமி

View previous topic View next topic Go down  Message [Page 1 of 1]

Permissions in this forum:
You cannot reply to topics in this forum

Style of Google. Code by SkinOne