Do not have a Cplus account?  Create an account

Log In

Stay logged in.
Can not access your account?

Google+

Sign in and start sharing with Google+

Only shared with the right people

Share some things with friends, others with some families but do not share anything to your boss!

Make your conversations come alive

Hangout make conversations come alive stockings photos, emoticons even group video calls for free!

Make your photos look better than ever

Automatic backup, organize, and improve your photos!

Do you know?

You can sign in to your Google+ account using your existing Google?

Results for keyword ""

Sign Up
Hangouts

மணல் கூரை

மணல் கூரை | தமிழ் பண்பாட்டுக் கூரை!

GO TO TOP


You are not connected. Please login or register

View previous topic View next topic Go down  Message [Page 1 of 1]

1புகார்க் காண்டம் - கனாத்திறம் உரைத்த காதை Empty புகார்க் காண்டம் - கனாத்திறம் உரைத்த காதை Wed May 08, 2013 4:56 am

மணல் கூரை

மணல் கூரை
மணல் கூரை

மணல் கூரை

பதிவுகள் : 378

பதிவின் தரம் : 376

பதிவு விருப்பம் : 268

இணைந்தது : 06/04/2013


V.I.P MEMBER

V.I.P MEMBER
அஃதாவது - கண்ணகி நல்லாள் தன் தோழியாகிய தேவந்தி என்னும் பார்ப்பன மகளின்பால் தான் முன்னாளிரவு கண்ட கனவினது தன்மையைக் கூறிய செய்தியைக் கூறும் பகுதி என்றவாறு. இதன்கண் தேவந்தியின் வரலாறும் கோவலன் கண்ணகியை எய்தியதும் பிறவும் கூறப்படும்.

2புகார்க் காண்டம் - கனாத்திறம் உரைத்த காதை Empty Re: புகார்க் காண்டம் - கனாத்திறம் உரைத்த காதை Wed May 08, 2013 4:57 am

மணல் கூரை

மணல் கூரை
மணல் கூரை

மணல் கூரை

பதிவுகள் : 378

பதிவின் தரம் : 376

பதிவு விருப்பம் : 268

இணைந்தது : 06/04/2013


V.I.P MEMBER

V.I.P MEMBER
(கலி வெண்பா)

அகநகர் எல்லாம் அரும்புஅவிழ் முல்லை
நிகர்மலர் நெல்லொடு தூஉய்ப் பகல்மாய்ந்த
மாலை மணிவிளக்கம் காட்டி இரவிற்குஓர்
கோலம் கொடிஇடையார் தாம்கொள்ள, மேல்ஓர்நாள்:
மாலதி மாற்றாள் மகவுக்குப் பால்அளிக்கப் 5

பால்விக்கிப் பாலகன் தான்சோர மாலதியும்
பார்ப்பா னொடுமனையாள் என்மேல் படாதனவிட்டு
ஏற்பன கூறார்என்று ஏங்கி மகக்கொண்டு
அமரர் தருக்கோட்டம் வெள்யானைக் கோட்டம்
புகர்வெள்ளை நாகர்தம் கோட்டம் பகல்வாயில் 10

உச்சிக் கிழான்கோட்டம் ஊர்க்கோட்டம் வேல்கோட்டம்
வச்சிரக் கோட்டம் புறம்பணையான் வாழ்கோட்டம்
நிக்கந்தக் கோட்டம் நிலாக்கோட்டம் புக்குஎங்கும்
தேவிர்காள் எம்உறுநோய் தீர்ம்அன்று மேவிஓர்
பாசண்டச் சாத்தற்குப் பாடு கிடந்தாளுக்கு, 15

ஏசும் படிஓர் இளங்கொடியாய் ஆசுஇலாய்
செய்தவம் இல்லோர்க்குத் தேவர் வரம்கொடார்
பொய்உரையே அன்று பொருள்உரையே கையிற்
படுபிணம்தா என்று பறித்துஅவள்கைக் கொண்டு
சுடுகாட்டுக் கோட்டத்துத் தூங்குஇருளில் சென்றுஆங்கு 20

இடுபிணம் தின்னும் இடாகினிப்பேய் வாங்கி
மடியகத்து இட்டாள் மகவை, இடியுண்ட
மஞ்ஞைபோல் ஏங்கி அழுதாளுக்கு அச்சாத்தன்
அஞ்ஞைநீ ஏங்கி அழல்என்று முன்னை
உயிர்க்குழவி காணாய்என்று அக்குழவி யாய்ஓர் 25

குயில்பொதும்பர் நீழல் குறுக அயிர்ப்புஇன்றி
மாயக் குழவி எடுத்து மடித்திரைத்துத்
தாய்கைக் கொடுத்தாள்அத் தையலாள், து஡ய
மறையோன்பின் மாணியாய் வான்பொருள் கேள்வித்
துறைபோய் அவர்முடிந்த பின்னர் இறையோனும் 30

தாயத்தா ரோடும் வழக்குஉரைத்துத் தந்தைக்கும்
தாயர்க்கும் வேண்டும் கடன்கழித்து மேயநாள்
தேவந்தி என்பாள் மனைவி அவளுக்குப்
பூவந்த உண்கண் பொறுக்கென்று மேவித்தன்
மூவா இளநலம் காட்டிஎம் கோட்டத்து 35

நீவா எனஉரைத்து நீங்குதலும், தூமொழி
ஆர்த்த கணவன் அகன்றனன் போய்எங்கும்
தீர்த்தத் துறைபடிவேன் என்றுஅவனைப் பேர்த்துஇங்ஙன்
மீட்டுத் தருவாய் எனஒன்றன் மேல்இட்டுக்
கோட்டம் வழிபாடு கொண்டிருப்பாள் வாட்டருஞ்சீர்க் 40

கண்ணகி நல்லாளுக்கு உற்ற குறைஉண்டுஎன்று
எண்ணிய நெஞ்சத்து இனையளாய் நண்ணி
அறுகு சிறுபூளை நெல்லொடு தூஉய்ச் சென்று
பெறுக கணவனோடு என்றாள், பெறுகேன்
கடுக்கும்என் நெஞ்சம் கனவினால் என்கை 45

பிடித்தனன் போய்ஓர் பெரும்பதியுள் பட்டேம்
பட்ட பதியில் படாதது ஒருவார்த்தை
இட்டனர் ஊரார் இடுதேள்இட்டு என்தன்மேல்
கோவலற்கு உற்றதுஓர் தீங்குஎன்று அதுகேட்டுக்
காவலன் முன்னர்யான் கட்டுரைத்தேன் காவலனோடு 50

ஊர்க்குஉற்ற தீங்கும்ஒன்று உண்டால் உரையாடேன்
தீக்குற்றம் போலும் செறிதொடீஇ தீக்குற்றம்
உற்றேனோடு உற்ற உறுவனொடு யான்உற்ற
நல்திறம் கேட்கின் நகைஆகும், பொற்றொடிஇ
கைத்தாயும் அல்லை கணவற்கு ஒருநோன்பு 55

பொய்த்தாய் பழம்பிறப்பில் போய்க்கெடுக உய்த்துக்
கடலொடு காவிரி சென்றுஅலைக்கும் முன்றில்
மடல்அவிழ் நெய்தல்அம் கானல் தடம்உள
சோமகுண்டம் சூரிய குண்டம் துறைமூழ்கிக்
காமவேள் கோட்டம் தொழுதார் கணவரொடு 60

தாம்இன் புறுவர் உலகத்துத் தையலார்
போகம்செய் பூமியினும் போய்ப்பிறப்பர் யாம்ஒருநாள்
ஆடுதும் என்ற அணிஇழைக்குஅவ் ஆய்இழையாள்
பீடுஅன்று எனஇருந்த பின்னரே, நீடிய
காவலன் போலும் கடைத்தலையான் வந்துநம் 65

கோவலன் என்றாள்ஓர் குற்றிளையாள், கோவலனும்
பாடுஅமை சேக்கையுள் புக்குத்தன் பைந்தொடி
வாடிய மேனி வருத்தம்கண்டு, யாவும்
சலம்புணர் கொள்கைச் சலதியொடு ஆடிக்
குலம்தரு வான்பொருள் குன்றம் தொலைந்த 70

இலம்பாடு நாணுத் தரும்எனக்கு என்ன,
நலம்கேழ் முறுவல் நகைமுகம் காட்டிச்
சிலம்புஉள கொண்மின் எனச்சேயிழை கேள்இச்
சிலம்பு முதலாகச் சென்ற கலனொடு
உலந்தபொருள் ஈட்டுதல் உற்றேன் மலர்ந்தசீர் 75

மாட மதுரை யகத்துச்சென்று என்னோடுஇங்கு
ஏடுஅலர் கோதாய். எழுகென்று நீடி
வினைகடைக் கூட்ட வியம்கொண்டான் கங்குல்
கனைசுடர் கால்சீயா முன்.

(வெண்பா)

காதலி கண்ட கனவு கருநெடுங்கண்
மாதவிதன் சொல்லை வறிதாக்க - மூதை
வினைகடைக் கூட்ட வியம்கொண்டான் கங்குல்
கனைசுடர் கால்சீயா முன்.

3புகார்க் காண்டம் - கனாத்திறம் உரைத்த காதை Empty Re: புகார்க் காண்டம் - கனாத்திறம் உரைத்த காதை Wed May 08, 2013 4:58 am

மணல் கூரை

மணல் கூரை
மணல் கூரை

மணல் கூரை

பதிவுகள் : 378

பதிவின் தரம் : 376

பதிவு விருப்பம் : 268

இணைந்தது : 06/04/2013


V.I.P MEMBER

V.I.P MEMBER
உரை

1-4 : அகனகர் ........... தாங்கொள்ள

(இதன்பொருள் Smile பகல் மாய்ந்த மாலை கொடி இடையார்தாம் - அற்றை நாள் ஞாயிறு மேற்றிசையிற் சென்று மறைந்த அந்தி மாலைப் பொழுதிலே பூங்கொடி போலும் துவள்கின்ற நுண்ணிடையையுடைய மகளிர்கள்; அகல் நகர் எல்லாம் அரும்பு அவிழ் முல்லை நிகர் மலர் நெல்லொடு தூஉய் - தத்தம் அகன்ற மனையிடங்களின் எல்லாம் நாளரும்புகளாகி இதழ் விரிகின்ற செவ்வியையுடைய முல்லையினது ஒளியுடைய மலர்களை நெல்லோடே விரவித் தூவி; மணி விளக்கங் காட்டி - அழகிய விளக்குகளை ஏற்றி வைத்து இல்லுறை தெய்வத்தை வணங்கிய பின்னர்; இரவிற்கு ஓர் கோலம் கொள்ள - அற்றை யிரவின்கண் தத்தம் காதற் கொழுநரோடு கூடி மகிழ்தற் பொருட்டு அச் செயலுக்கேற்ற கோலங்களைக் கொள்ளா நிற்ப; என்க.

(விளக்கம்) முன்னைக் காதையில், புகர் அறு கோலம் கொள்ளுமென்பது போல் கொடிமிடை சோலைக்குயிலோன் என்னும் படையுள் படுவோன் பணிமொழி கூற, அந்நகரத்தே வாழும் கொடியிடையார் அகல் நகர் எல்லாம் தூஉய் விளக்கங் காட்டி அக்குயிலோன் பணிமொழிக் கிணங்கி இரவிற்குக் கோலங் கொள்ளா நிற்ப என முன்னைக் காதையொடு இயைபு காண்க.

1. அகல் நகர் - அகன்ற மனை. மலரின் செவ்வி கூறுவார், அரும்பவிழ் நிகர் மலர் என்றார். முல்லை மாலைப்பொழுதில் மலர்தல் இயல்பு. 2 - நிகர் மலர் - ஒளியையுடைய மலர். நீர்வார் நிகர் மலர் எனப் பெருங்கதையினும், நிகர்மலர் எனக் குறுந்தொகை (311: 6) யினும், மணிமேகலை (3: 15)யினும், அகநானூற் (11: 12)றினும் வருதல் காண்க. மாலைப் பொழுதில் மகளிர் மலர்தூவி விளக்கேற்றி வைத்து இல்லுறை தெய்வத்தை வணங்குதல் தமிழ் நாட்டு வழக்கம் - இதனை: நெல்லும் மலரும் தூஉய்கை தொழுது மல்லல் ஆவண மாலையயர எனவரும் நெடுநல்வாடை (33-4) யானு முணர்க. பகல் - ஆகுபெயர்; ஞாயிறென்க. 3. மணியும் விளக்கமும் காட்டி என்பர் அடியார்க்கு நல்லார். மணி - அழகெனவே அமையும். மணிகள் பதித்த அகல்களாகிய விளக்கங்கள் எனினுமாம். விளக்கங்காட்டி என்றது விளக்கேற்றி என்றவாறு. முல்லைமலர் தூவி என்றமையால் தெய்வம் தொழுது என்பது குறிப்பாயிற்று. இரவிற்கோர் கோலம் என்றது இடக்கரடக்கு. இரவிற்கோர் கோலங்கோடலாவது - மகரக்குழை முதலிய பேரணிகலன்களைக் களைந்து ஒற்றைவடம் முதலிய நொய்யன அணிதலும் பட்டு நீங்கித் துகிலுடுத்தலும் தத்தம் கொழுநர் விரும்பும் மணம் மலர் முதலியனவே அணிதலும் பிறவுமாம் என்க.

இனி, (4) மேலோர் நாள் என்பது தொடங்கி (40) கோட்டம் வழிபாடு கொண்டிப்பான் என்பது காறும், தேவந்தியின் வரலாறு கூறப்படுகின்றது.

4 - 8 : மேலோர்நாள் ............ கூறாரென்றேங்கி

(இதன்பொருள் Smile மேல் ஓர் நாள் - முன்னர்க் கழிந்தொழிந்த நாள்களுள் வைத்து ஒரு நாளிலே; மாலதி மாற்றாள் மகவுக்குப் பால் அளிக்க - மாலதி என்னும் பெயருடைய பார்ப்பனி தனது மாற்றாளீன்ற குழவிக்குப் பாலடையினாலே பாலூட்டிய பொழுதில்; பால் விக்கிப் பாலகன்றான் சோர - ஊழ்வினை அங்ஙனம் இருந்தவாற்றால் அப்பாலானது மிடற்றின்கண்ணின்று விக்குதலாலே அக்குழவி அவள் கையிலே இறந்து படாநிற்ப; மாலதியும் பார்ப்பானொடு மனையாள் என்மேல் படாதன இட்டு ஏற்பன கூறார் என்று ஏங்கி - அது கண்ட அம் மாலதி தானும் ஐயகோ! இதற்கு யான் என்செய்கோ! இஃதறிந்தால் என் கணவனாகிய அப்பார்ப்பனனும் அவன்றன் மனைவியும் வஞ்சகமற்ற என்மேல் அடாப்பழி யேற்றி என்னைத் தூற்றுத லொழித்து; உலகம் ஏற்றற்குரியனவாகிய வாய்மைகளைக் கூறுவாரல்லரே அங்ஙனமாயின் அப்பழியை யான் எங்ஙனம் போக்குவேன் என்று தன்னுள் வருந்தி ஏங்கி; என்க.

(விளக்கம்) 5. மாற்றாள் - கணவனுடைய மற்றொரு மனைவி. மாற்றாள் மகவிற்குப் பாலளிக்க என்றமையால் மாலதி மகப் பேறற்றவள் என்பதும் அக்காரணத்தால் அவள் கணவன் மற்றொருத்தியை மணந்திருந்தான் என்பதும் பெற்றாம்.

தன் கணவன் தன்பாலன்பின்றி ஒழுகுபவன் மாற்றாளும் அத்தகையள் என்பது தோன்ற அவர்களை ஏதிலார் போன்று பார்ப்பானொடு மனையாள் என்றாள். அவர்கள் பால்விக்கிப் பாலகன் சோர்ந்தமையைக் கூறார்; பொறாமையால் இவள் கொலை செய்தனள் என்றே என்மேற் படாத பழியையே கூறுவார் என்பாள் என் மேல்படாதன இட்டு என்றாள். படாதன விட்டு எனக் கண்ணழிப்பர் அடியார்க்கு நல்லார். ஏற்பன - வாய்மை நிகழ்ச்சிகள். வாய்மைக் கேற்பன எனினுமாம். செயலறவினால் ஏங்கி என்க.

4புகார்க் காண்டம் - கனாத்திறம் உரைத்த காதை Empty Re: புகார்க் காண்டம் - கனாத்திறம் உரைத்த காதை Wed May 08, 2013 5:00 am

மணல் கூரை

மணல் கூரை
மணல் கூரை

மணல் கூரை

பதிவுகள் : 378

பதிவின் தரம் : 376

பதிவு விருப்பம் : 268

இணைந்தது : 06/04/2013


V.I.P MEMBER

V.I.P MEMBER
மாலதியின் பேதைமைச் செயல்கள்

8 - 15 : மகக் கொண்டு .......... கிடந்தாளுக்கு

(இதன்பொருள் Smile மகக் கொண்டு-அக் குழவியினுடம்பைப் பிறர் அறியா வண்ணம் தன் கையி லேந்திக்கொண்டு; அமரர் தருக் கோட்டம்-தேவர் தருவாகிய கற்பகம் நிற்குங் கோயிலும்; வெள்யானைக் கோட்டம் - இந்திரன் ஊர்தியாகிய ஐராவதம் என்னும் வெள்யானை நிற்கும் கோயிலும்; புகர் வெள்ளை நாகர் தம் கோட்டம் - அழகினையுடைய வெண்மையான திருமேனியை யுடைய பலதேவர் எழுந்தருளிய கோயிலும்; பகல் வாயில் உச்சிக் கிழான் கோட்டம் - கீழ்த்திசையிலே தோன்றுகின்ற ஞாயிற்றுத் தேவனுக்கியன்ற கோயிலும்; ஊர்க் கோட்டம் - அம் மூதூரின் காவற்றெய்வமாகிய சம்பாபதி எழுந்தருளிய கோயிலும்; வேல் கோட்டம் - வேற்படை ஏந்தும் முருகன் கோயிலும்; வச்சிரக்கோட்டம் - இந்திரன் படைக்கலமாகிய வச்சிரம் நிற்கும் கோயிலும்; புறம்பணையான் வாழ் கோட்டம் - நகர்ப்புறப் பகுதியிடத்தே வாழும் இயல்புடைய மாசாத்தன் கோயிலும் - நிக்கந்தக் கோட்டம் - அருகன் கோயிலும்; நிலாக் கோட்டம் - திங்கட் கடவுளுக்கியன்ற கோயிலும்; புக்கு எங்கும் - என்று கூறப்பட்ட இக் கோயில்தோறும் சென்று புகுந்து; தேவிர்காள் எம் உறு நோய் தீர்ம் என்று - தெய்வங்களே எமது மிக்க இத்துன்பத்தைத் தீர்ந்தருளுங்கோள் என்று கூறி இரப்பவும்; அவருள் ஒருவரேனும் அவட்கிரங்கி அதனைத் தீரா தொழிதலாலே; மேவி ஓர் பாசண்டச் சாத்தற்குப் பாடுகிடந்தாளுக்கு - பாசண்டச் சாத்தன் என்கின்ற ஐயனார் கோயிலுக்குச் சென்று ஆங்கும் தன் துயர் கூறி வரங்கிடந்தாளாக; அம்மாலதி முன்னர்; என்க.

(விளக்கம்) 9 - அமரர் தரு - கற்பகத்தரு. வெள்யானை - ஐராவதம். 10. புகர் - அழகு. வெள்ளை நாகர் - பலதேவர். 10 - 11 - பகல் வாயில் உச்சிக்கிழான் - பகல்தோற்றுகிறவாயிலாகிய கீழ்த்திசை கீழ்த்திசையிற் றோன்றுகின்ற உச்சிக்கிழான் என்க. உச்சிக்கிழான் என்பது ஞாயிற்றிற்கொரு பெயர் என்க. ஊர்க்கோட்டம் என்றது அவ்வூர்க் காவற் றெய்வம் ஆகிய சம்பாபதியின் கோயில் என்றவாறு. இது மணிமேகலையிற் கண்டது. இனி, இதனை ஊர் என்பதற்கு இறைவன் எழுந்தருளியிருக்கும் கைலாயம் எனப் பொருள் கொண்டு கைலாயம் நிற்கும் கோயில் என்பர் பழைய வுரையாசிரியரிருவரும் வேல் நிறுத்தப்பட்டிருக்கும் கோயில் எனினுமாம். இதனை ஆகுபெயராக்கி முருகன்கோயில் எனினுமாம். 12 - வச்சிரக்கோட்டம் வச்சிரப்படை நிறுத்தப்பட்ட கோயில். ஈண்டுக் கூறப்பட்ட தருக்கோட்டம், வெள் யானைக்கோட்டம், வெள்ளை நாகர் கோட்டம், வேற்கோட்டம், வச்சிரக்கோட்டம் என்பன இந்திரவிழாவூரெடுத்த காதையினும் ஓதப்பட்டமை யுணர்க. புறம்பணையான் என்பது, மாசாத்தன் என்னுந் தெய்வத்திற் கொருபெயர். இத்தெய்வத்திற்கு ஊரின் புறப்பகுதியிலேயே கோயில் எடுத்தலின் அப்பெயர் வழங்கிற்றுப் போலும். இத்தெய்வத்தைச் சாதவாகனன் என்பர். அடியார்க்கு நல்லார் அரும்பதவுரையாசிரியர் மாசாத்தன் என்பர். இவையும் மேலே பாசண்டச் சாத்தன் என்பதும் ஐயனார் என்னும் ஒரே தெய்வத்தின் பெயர்களாகும். ஆகவே - மாலதி மேற்கூறிய கோயில்களிலெல்லாம் புக்கு தேவிர்காள் எம்முறுநோய் தீர்மின் என வேண்டினளாக அவற்றுள் ஒன்றேனும் அத்துயர் தீர்க்க முன் வராமையால் மீண்டும் புறம்பணையான் வாழ் கோட்டம் மேவி அக்கோட்டத்தே வாழும் அத்தெய்வத்திற்குப் பாடு கிடந்தாள் என்பதாயிற்று என்க.

இனி, எம்முறுதுயரம் தீர்ம் என்புழி தீர்ம் என்று ஈற்றுமிசை யுகரம் கெட்டது என்பர் அடியார்க்கு நல்லார். எனவே அது செய்யும் என்னும் வாய்பாட்டு வினைமுற்றென்பது அவர் கருத்தாதல் பெற்றாம். அங்ஙனமாயின் இது பல்லோர் படர்க்கை முன்னிலை தன்மையிற், செல்லாதாகும் செய்யும் என் முற்றே எனவரும்விதிக்கு முரணாகும். ஆகவே தீர்மின் என்னும் முன்னிலைப் பன்மை ஏவன் முற்றின் மின் என்னும் விகுதி மெய்நிற்கக் கெட்டதென்று கோடலே பொருந்தும். அல்லது தீர்மினென மேவி என இதற்குப் பாட வேற்றுமையுண்டெனக் காட்டப்படுதலின் அப்பாடமே கொள்ளலும் பொருந்துவதாம்.

15 - பாசண்டம் தொண்ணூற் றறுவகைச் சமயசாத்திரத் தருக்கக் கோவை என்ப. இவற்றிற்கு முதலாயுள்ள சாத்திரங்களைப் பயின்றானாகலின் மகாசாத்திரன் என்பது அவற்குப் பெயராயிற்று என்பர் அடியார்க்கு நல்லார். எனவே, சாத்திரன் என்பதே சாத்தன் என மருவி வழங்குவ தென்பது அவர் கருத்தாதல் பெற்றாம். இப்பெயர்க்கு வேறு காரணங் கூறுவாறு முளர். இனி, சாத்தன் என்னும் இத்தெய்வ வழிபாடு இச் செந்தமிழ் நாட்டில் ஊர்தோறும் நிகழ்ந்து வருவதும் கருதற் பாலதாம். இத்தெய்வத்திற்குப் பெரும் பாலும் ஊர்க்குப் புறம்பாகவே கோயிலெடுத்தலும் மரபாகும். கிடந்தாளுக்கு - கிடந்தாளிடத்து, கிடந்தாளுக்குத் தோன்றி என ஒரு சொல் வருவித்து முடித்தலுமாம்.

இடாகினிப் பேயின் செயல்

16 - 22 : ஏசும்படியோர் ..... மகவை

(இதன்பொருள் Smile சுடுகாட்டுக் கோட்டத்து இடுபிணம் தின்னும் இடாகினிப் பேய் - அப்புகாரிலுள்ள சுடுகாட்டுக் கோட்டம் என்னும் நன்காட்டிலே மாந்தர் வாளாது போகட்டுப் போகின்ற பிணங்களைத் தின்று ஆங்குறைகின்ற இடாகினி என்னும் ஒரு பேயானது; தூங்கு இருளில் ஆங்கு ஏசும்படி ஓர் இளங்கொடி யாய்ச் சென்று - செறிந்த இருளினூடே அம்மாலதி பாடு கிடக்கு மிடத்தே அவள் செயலைப் பழித்து அறிவுறுத்துவாள் போன்ற ஓர் இளநங்கை யுருக்கொண்டு சென்று அவளை நோக்கி; ஆசுஇலாய் செய் தவம் இல்லோர்க்குத் தேவர் வரம் கொடார் - குற்றமற்றவளே ! கேள்! செய்தவ மில்லோர்க்குத் தேவர் வரங்கொடார் என்னும் மூதுரைதானும்; பொய் உரை அன்று பொருள் உரையே - பொய்யான மொழியன்று அஃதுண்மையான மொழியே காண்! ஆதலால், நீ இவ்வாறு பாடுகிடத்தல் பயனில் செயலே யாம்; கையில் படு பிணம் தா என்று - அப்பிணத்தைப் பார்க்க விரும்புவாள் போன்று நங்காய்! நின் கையிலேயே இறந்துபட்ட அக்குழவிப் பிணத்தை என்கையிற் றருவாயாக! என்று கூறி; பறித்தவள் கைக்கொண்டு - அம்மாலதி கொடாளாகவும் வலிந்து பறித்துத் தன் கையாற் பற்றி; வாங்கி மகவை மடியகத்து இட்டாள் - அக்குழவிப் பிணத்தை இழுத்து விழுங்கினள்; என்க.

(விளக்கம்) ஏசுதல் - இகழ்தல் - இகழ்ந்து அறிவுறுத்துவாள்போன்று ஓர் இளநங்கையுருவம் கொண்டு சென்று என்க. படி - உருவம். உலகத்து அழகுடைய மகளிரை யெல்லாம் பழிக்கும் உருவமைந்த ஓர் இளங் கொடியாய் எனினுமாம். ஆசிலாய் என்றது நீ குற்றமற்றவளாயினும் தவமுடையை அல்லையாதலின் வரங்கொடார் என்றற்கு. பொய்யுரையன் றென்றதனை வற்புறுத்தற்கு மீண்டும் பொருளுரையே என்று விதந்தாள். தா என்றது யானும் காண்குவன் தா என்பது பட நின்றது. பறித்தவள் : முற்றெச்சம். வினையாலணையும் பெயரனினுமாம்.

20. சுடுகாட்டுக் கோட்டம் - இது சக்கரவாளக் கோட்டம் எனவும் கூறப்படும். இதன் வரலாற்றை மணிமேகலையில் சக்கரவாளக் கோட்டமுரைத்த காதைக்கண் விளக்கமாக வுணர்க. இடுபிணம் - சுடுதலும் தொடுகுழிப் படுத்தலும் தாழ்வயின் அடைத்தலும் தாழியிற் கவித்தலும் ஆகிய சிறப்புத் தொழில் யாதொன்றுமின்றிப் பிணத்திற்குரியவர் வாளாது எயிற் புறத்தே கிடத்திப் போகும் பிணம் என்க. பிணமும் நரி முதலிய உயிரினங்கட்கிரையாகும் என்பது பற்றி இவ்வாறு வாளாது இட்டுப் போதலும் அக்காலத்து ஒருவகைச் சமயவொழுக்கமாம் என்றுணர்க. இவ்வாறிட்ட பிணத்தையே ஆசிரியர் சாத்தனார், வழுவொடு கிடந்த புழுவூண் பிண்டம் என்று கூறி அவற்றை நரி முதலியன தின்பதனைத் தமது நூலில் அழகுறக் கூறுகின்றனர். அவற்றை ஆண்டுக் காண்க.

தூங்கிருள் - செறிந்த இருள். மன்னுயிர் யாவும் தூங்குதற்கியன்ற நள்ளிருள் எனினுமாம். மடி - வயிறு. படியை மடியகத்திட்டான் (நான்மணி - கடவு -2) - என்புழியும் அஃதப் பொருட்டாதலறிக. பாலகன் என்பது காலவழக்கு என்ப.

22 - 28 : இடியுண்ட .......... தையலாள்

(இதன்பொருள் Smile இடியுண்ட மஞ்ஞைபோல் ஏங்கி அழுதாளுக்கு அதுகண்டு பெருந்துயர் கொண்டு ஆற்றாதவளாகி இடியோசை கேட்ட மயில் அஞ்சி அகவுமாறுபோலே அழாநின்ற அம்மாலதிக்குப் பரிந்து; அச்சாத்தன் அஞ்ஞை நீ ஏங்கி அழல் - அத்தெய்வம் தாயே நீ ஏக்கறவு கொண்டு அழாதே கொள்! நின்னுறு துயர் யாம் துடைக்குதும்; முன்னை உயிர்க்குழவி காணாய் - நீ செல்லும் வழியிடத்தே அக்குழவியை உயிருடன் காண்பாய்காண்! என்று - என்றுகூறி ஆற்றுவித்துப்பின்னர்; அக் குழவியாய் ஓர் குயில் பொதும்பர் நீழல் குறுக - அச் சாத்தன்றானே இறந்துபட்ட அக்குழவி யுருக்கொண்டு சென்று அவள் செல்லும் வழிமுன்னர்க் குயில்கள் கூவுதற் கியன்றதொரு மாஞ்சோலையிடத்தே சென்று கிடந்தழா நிற்ப; அத் தையலாள் மாயக்குழவி அயிர்ப்பின்றி எடுத்து - அச்சாத்தன் அருளியவாறே அம்மாலதிதானும் வழியிற் கிடந்தழும் அவ்வஞ்சக் குழவியைக் கண்டு அஃது அத் தெய்வத்தாலுயிருடன் மீட்டுக் கொடுத்த தன் குழவியே என்பதில் சிறிதும் ஐயமின்றி அன்புடன் எடுத்து ; மடி திரைத்துத் தாய் கைக்கொடுத்தாள் - தான் புடைவையினது மடியாகிய முன்றானையாலே மறைத்துக் கொடுபோய் யாதொன்றும் நிகழாததுபோன்று அக்குழவியை யீன்ற தாயாகிய தன் மாற்றாள் கையிலே கொடுத்தனள்; என்க.

(விளக்கம்) 22 - இடி. -இடியோசை. உண்டற்குரிய அல்லாப் பொருளை உண்டன போலக் கூறலு மரபே (தொல் பொருளியல் 19) என்னும் மரபு பற்றி இடியோசை கேட்பதனை, இடியுண்ட என்றார். நெருக்குண்டேன் தள்ளுண்டேன் நீள் பசியினாலே சுருக்குண்டேன் என வருதலும் காண்க.

23. மஞ்ஞை - மயில். 24. அஞ்ஞை - அன்னை. அழல் - அழாதே. காணாய் - காண்பாய். 26. - குயிற் பொதும்பர் - குயில் கூவும் சோலை. சிறப்புப் பற்றி மாஞ்சோலை என்க. அயிர்ப்பு - ஐயம். தன் குழவியே என்பதில் ஐயமின்றி என்றவாறு. 27. மாயம் - வஞ்சம். மடியின் கட்டிரைத்து என்க. வயிற்றிலே அணைத்து என்பாருமுளர்.

5புகார்க் காண்டம் - கனாத்திறம் உரைத்த காதை Empty Re: புகார்க் காண்டம் - கனாத்திறம் உரைத்த காதை Wed May 08, 2013 5:01 am

மணல் கூரை

மணல் கூரை
மணல் கூரை

மணல் கூரை

பதிவுகள் : 378

பதிவின் தரம் : 376

பதிவு விருப்பம் : 268

இணைந்தது : 06/04/2013


V.I.P MEMBER

V.I.P MEMBER
அம்மாயக் குழவியின் செயல்

28 - 32 : தூய ............ மேயநாள்

இதன்பொருள்: தூய மறையோன் பின் (ஆய்) - இவ்வாற்றால் அச்சாத்தன்றானும் மாலதி கணவனாகிய புலன் அழுக்கற்ற அந்தணனுக்கு வழித்தோன்றலாகி; மாணியாய் - பின்னர் மறைபயிலும் பிரமசரிய நிலை எய்தியவனாகி; வான் பொருள் கேள்வித் துறைபோய் - மெய்ப்பொருளை யுணர்தற்குக் காரணமான கல்வி கேள்விகளில் மிக்கவனாகிக் கற்றாங்கு அறநெறிக்கண் பிறழாதொழுகி; அவர் முடிந்த பின்னர் - அம்மறையோன் முதலிய முதுகுரவர்கள் இறந்த பின்னர்; இறையோனும் - கடவுளாகிய அச்சாத்தன்றானும்; தந்தைக்குந் தாயார்க்கும் வேண்டும் கடன் கழித்து - அத்தந்தைக்கும் தாயர் இருவருக்கும் மகன் செய்யக்கடவ இறுதிக் கடன்களைச் செய்துமுடித்து; தாயத்தாரோடும் வழக்கு உரைத்து - பொருள்பற்றித் தன் தாயத்தாரோடு உண்டான வழக்கின்கண் அறங்கூறவையைத் தேறித் தன்பக்கல் வெற்றியுண்டாக வேண்டுவன கூறி வென்று; மேய நாள் - இல்லறத் தினிதமர்ந்து வாழும் நாளிலே என்க.

(விளக்கம்) 29 - மாணியாய் என்பதன்கண் அமைந்த ஆக்கச் சொல்லை மறையோன் பின்னாய் என முன்னும் கூட்டுக. மறையோன் பின்னாய் - மறையோனுக்கு வழித்தோன்றலாகி என்க. பின் -வழி. வான்பொருள் - மெய்ப்பொருள். வான்பொருள் நல்லாசிரியர்பாற் கேட்டுணர்தற்பாலதாகலின் கேள்வி மட்டுமே கூறினரேனும் கல்வி கேள்வி எனக் கல்வியையும் கூறிக் கொள்க. மாணி - பிரமசாரி. மாணி எனவே அந்நிலைக்குரிய வான்பொருட்கேள்வியையும் விதந்தார். 30- துறை போதல் - அறநெறியிலொழுகுதல் - தந்தையும் தாயரும் முடிந்த பின்னர் அவ்வப் பொழுதில் வேண்டும் கடன் கழித்து என்றவாறு. செய்யுளாதலின் அவர் முடிந்த பின்னர் எனச் சுட்டுச் சொல் முன்னர் வந்தது. தந்தை தாயர் முடிந்த பின்னர் அவர்க்குக் கடன் கழித்து என்க. இருவர் ஆதலின் தாயர் என்றார்.

இனி அடியார்க்கு நல்லார், வரந்தரு காதைக்கண்,

தேவந்திகையைத் தீவலஞ் செய்து
நாலீராண்டு நடந்ததற் பின்னர்
மூவா விளநலங் காட்டியென் கோட்டத்து
நீவா வென்றே நீங்கிய சாத்தன் (84-7)

எனவருஞ் சாத்தன் வரலாற்றைக் கருத்துட் கொண்டு, ஈண்டு, மேயநாள் என்பதற்கு எட்டுயாண்டு தன் மனைவியோடே கூடிநடந்தபின் ஒரு நாளிலே எனவுரை வகுத்தனர்.

33 - 40 : தேவந்தி ....... கொண்டிருப்பாள்

இதன்பொருள்: மனைவி தேவந்தி என்பாள் - அச்சாத்தன் இல்லறம் மேற்கொண்ட காலத்தே அவனுக்கு மனைவியாயமைந்தவள் தேவந்தி என்னும் பார்ப்பனியாவள்; அவளுக்கு - (வாய்மை கூறி மீண்டும் தன் தெய்வத்தன்மையை எய்த நினைத்த அச் சாத்தன்றானும்) மக்களினத்தாளாகிய அத் தேவந்தியினுடைய; பூ வந்த உண்கண் பொறுக்க என்று மேவி - மலர்போன்ற மையுண்ட கண்கள் பொறுத்துக் கொடற்பொருட்டு அவ்வளவிற்றாகத் தன்னொளியைப் படைத்துக் கொண்டு அவள்பாற் சென்று; தன் மூவா இளநலம் காட்டி - தெய்வமான தனக்கியல்பான மூவாமையுடைய இளமையினது அழகினை வெளிப்படுத்துக் காட்டியருளி; நீ எம் கோட்டத்து வா என வுரைத்து - அவள் குறிப்புணர்ந்து இனி நீ எமது கோயிலுக்கு வந்து எம்மைக் காண்பாயாக! என்று தேற்றி; நீங்குதலும் - அம்மாய வுருவினின்றும் நீங்கித் தெய்வமாய் மறைந்தொழியவும்; தூமொழி - தூயமொழியையுடைய அத் தேவந்திதானும்; ஆர்த்த கணவன் எங்கும் தீர்த்தத் துறைபோய்ப் படிவேன் என்று அகன்றனன் - அத்தெய்வத்தின் செயலைப் பிறர் அறியாமைப் பொருட்டும் அவன் கோயிலுக்குத் தான் எப்பொழுதும் போதற்கும் ஊரவர்க்கு ஒரு காரணம் காட்டுவாள்; தெய்வமே ! அளியேனைக் கட்டிய கணவன்றான் இந்நாவலந் தீவிடத்தே எவ்விடத்துஞ் சென்று ஆங்காங்குள்ள புண்ணியத் தீர்த்தங்களிலெல்லாம் ஆடி வருகுவேன் என்று சொல்லி என்னைத் துறந்துபோயினன்; அவனைப் பேர்த்து மீட்டு இங்ஙன் தருவாய் என - அவன் நெஞ்சத்தை மாற்றி மீளவும் இவ்விடத்தே கொணர்ந்து தந்தருள்வாயாக என்று பலருமறிய வாய்விட்டு வேண்டுதலாகிய; ஒன்றன் மேலிட்டு - ஒரு போலிக் காரணத்தைக் காட்டி; கோட்டம் வழிபாடு கொண்டிருப்பாள் - நாள்தோறும் அச்சாத்தன் கோயிலுக்குச் சென்று வழிபாடு செய்யுந் தொழிலைக் கடனாக மேற்கொண்டிருப்பவள்; என்க.

(விளக்கம்) 33 - அச்சாத்தனுக்கு மனைவியாக வாய்த்தவள் தேவந்தி என்னும் பெயருடையாள் ஆவள், என அறிவுறுத்தவாறாம். 34- பூ வந்த உண்கண் என்புழி வந்த என்பது உவமவுருபின்பொருட்டு மக்கள் கண் தெய்வயாக்கையினது பேரொளியைப் பொறாதாகலின் அவள் கண் பொறுக்குமளவிற்றாய்ச் சாத்தன் தன்மேனி யொளியைச் சுருக்கி அவளெதிர்மேவி தனக்குரிய மூவா இளநலம் காட்டி என்றவாறு. அந்தரத் துள்ளோர் அறியா மரபின் வந்து என அடிகளார் ஆறாங் காதையிற் கூறியதும் இக்கருத்துடையதேயாம். ஆசிரியர் சாத்தனார் தாமும் கரந்துரு வெய்திய கடவுளாளரும் (மணிமேகலை: 1- 66) என்றோதுதலு மறிக. ஈண்டுத் தேவந்தி பலருமறியக் கூறும் இம்மொழிகள் பொய்மையேயாயினும் இவற்றால் இவை யாதொன்றும் தீமை பயவாமையின் வாய்மை யிடத்தவேயாம் எனத் தேவந்தியின் தூய்மையை வலியுறுத்துவார் அடிகளார் அவளை (36) தூமொழி என்றே சுட்டும் நயமுணர்க. 37-ஆர்த்த கணவன் - என்னெஞ்சத்தைப் பிணித்த கணவன் எனினுமாம்.

39. ஒன்றன் மேலிட்டு ஒரு காரியத்தைத் தலைக்கீடாகக் காட்டி. வழிபாடு கொண்டிருப்பாள் - பெயர்.

6புகார்க் காண்டம் - கனாத்திறம் உரைத்த காதை Empty Re: புகார்க் காண்டம் - கனாத்திறம் உரைத்த காதை Wed May 08, 2013 5:02 am

மணல் கூரை

மணல் கூரை
மணல் கூரை

மணல் கூரை

பதிவுகள் : 378

பதிவின் தரம் : 376

பதிவு விருப்பம் : 268

இணைந்தது : 06/04/2013


V.I.P MEMBER

V.I.P MEMBER
தேவந்தி கண்ணகியின்பாற் சென்று கூறுதல்

40 - 44 : வாட்டருஞ்சீர் ........ என்றாள்

இதன்பொருள்: வாடு அருஞ்சீர் கண்ணகி நல்லாளுக்கு உற்றகுறை உண்டு என்று எண்ணிய நெஞ்சத்து இனையள் ஆய் - எக்காலத்தும் யாவரானும் குறைக்க வொண்ணாத பெரும்புகழையுடைய கண்ணகியாகிய நல்ல தன் தோழிக்குக் கணவன் பிரிதலாலே எய்தியதொரு துன்பமுண்டென்று நினைத்த தன்னுடைய நெஞ்சத்தினூடே எப்பொழுதும் துன்பமுடையவளாய் அவள் தன் துன்பந் தீர் தற்பொருட்டு; நண்ணி அறுகு சிறுபூளை நெல்லொடு தூய் - அச்சாத்தன் கோயிலை நண்ணி அறுகம்புல்லையும் சிறுபூளைப் பூவையும் நெல்லோடு விரவி அச்சாத்தன் றிருவடிக்கண் தூவித் தெய்வமே என் றோழியின் துயர்துடைத்தருளுதி என வேண்டிக் கைதொழுது பின்னர்; சென்று - கண்ணகிபாற் சென்று வாழ்த்துபவள்; கணவனோடு பெறுக என்றாள் - அன்புடையோய் நீ நின்னைப் பிரிந்த கணவனோடு கூடி வாழ்வு பெறுவாயாக! என்று வாழ்த்தினள் என்க.

(விளக்கம்) 40 - வள்ளல் மறவர் முதலியோர் பெற்ற புகழெல்லாம் தம்மின் மிக்கார் தோன்றியவழி, குறைவனவாம். கற்புடைமையில் கண்ணகியின் மிக்கார் தோன்றவியலாமையான் அவள் புகழ் என்றும் குறையாத புகழ் என்பார், வாட்டருஞ் சீர் என்றார். அஃதாவது - பிறராற் குறைக்க வொண்ணாத திண்ணிய புகழ். வாடு - வாட்டென விகார மெய்திற்றெனினுமாம். 41 - கண்ணகி நல்லாளுக் குற்ற குறையை எண்ணிய பொழுதெல்லாம் அவள் நெஞ்சம் துன்புறும் என்பது தோன்ற கண்ணகி....இளையவாய் என்றார். இனைதல் - ஈறுகெட்டு இனை என நின்றது. இனைதல் - துன்புறுதல். கண்ணகி இம்மைச் செய்தது யானறி நல்வினை என்பாள் கண்ணகி என்றொழியாது கண்ணகி நல்லாள் என்றாள். எனவே, அக் குறை உம்மைச் செய்த தீவினையின் பயனாதல் வேண்டும். உம்மை வினைப்பயன் தெய்வத்தாற் றீரற்பாலது என எண்ணி அவள் பொருட்டுத் தானும் தெய்வத்தை வேண்டுவாள் அறுகு முதலிய தூவி வேண்டினள் என்க. பின்னரும் இக் கருத்துண்மையால் கண்ணகியைப் புண்ணியத் துறை மூழ்கவும் காமவேள் கோட்டந் தொழவும் இத் தேவந்தி அழைப்பதூஉம் காண்க.

கண்ணகி தான்கண்ட கனவினைத் தேவந்திக்குக் கூறுதல்

44 - 54 : பெறுகேன் ........... நகையாகும்

இதன்பொருள்: (52) செறிதொடீஇ - அதுகேட்ட கண்ணகி தேவந்தியை நோக்கி, செறித்த வளையலையுடையோய்; பெறுகேன் - தூயையாகிய நின் வாழ்த்துரை பொய்யாதாகலின் நீ வாழ்த்தியாங்கு யான் என் கணவனோடு ஏனைய நலங்களும் பெறுவேண்காண்; அதுநிற்க! ஈதொன்று கேள்! என் நெஞ்சம் கனவினால் கடுக்கும் என் நெஞ்சமானது நேற்றிரவு வைகறைப் பொழுதிலே யான் கண்டதொரு கனவு காரணமாக அத்தகைய நலத்தை யான் எய்துவேனோ? எய்தேனோ? என்று பெரிதும் ஐயுறாநின்றது; அக்கனவுதான் யாதோவெனின், என் கைப்பீடித்தனன் போய் ஓர் பெரும்பதியுள் பட்டேம் - என் கணவன் என்னை விரும்பிவந்து அன்புடன் என் கையைப் பற்றினன், பின்னர் யாங்கள் இருவேரும் சென்று யாதோவொரு பெரிய நகரத்தின்கட் புகுந்தேம்; பட்ட பதியில் ஊரார் படாதது ஒரு வார்த்தை என்றன்மேல் இடுதேள் இட்டுக் கோவலற்கு உற்றது ஓர் தீங்கு என்றது கேட்டு - புகுந்த அவ்விடத்தே அவ்வூர் வாழும் மாந்தர் எமக்குப் பொருந்தாததொரு படிற்றுரையை இடுதேள் இடுமாறுபோல என்மேலிட்டுப் பின்னரும் அவரிடப்பட்ட அப்படிறு காரணமாகக் கோவலனுக்கும் ஒரு தீங்குற்றது என்று சிலர் கூறக்கேட்டு; யான் காவலன் முன் கட்டுரைத்தேன் - அது பொறாமல் பிற ஆடவர்முன் செல்லாத யான் அந்நகரத்து அரசன் முன்னர்ச் சென்று பிறர்முன் யாதொன்றும் உரைத்தறியாதேன் வழக்குரைத்தேன்; காவலனோடு ஊர்க்கு உற்ற தீங்கும் ஒன்று உண்டு ஆல் - அதனால் தீங்குற்ற அவ்வரசனோடன்றி அவ்வூருக்கு உற்ற தீங்கும் ஒன்றுண்டு; தீக்குற்றம் போலும் - அவ்வூர்க்குற்ற தீங்கு யான் செய்த கொடிய குற்றத்தின் பயன்போல் தோன்றுகின்றது ஆதலால்; உரையாடேன் - அதனை யான் நினக்குக் கூறுவேனல்லேன்; தீக்குற்றம் உற்றேனொடு உற்ற உறுவனோடு யான் உற்ற நல்திறம் கேட்கின் நகையாகும் - இவ்வாறு கொடிய குற்றம் எய்திய என்னோடு பொருந்திய பெருந்தகையானோடு யான் பெற்ற நன்மைகளின் இயல்பை நீ கேட்பாயானால் அது நினக்கு நகைப்பையே உண்டாக்கும் ஆதலால் அவற்றையும் கூறேன்காண்! என்று கூறாநிற்ப; என்க.

(விளக்கம்) 44. கணவனோடு நீ வாழ்வு பெறுக ! என்று தேவந்தி வாழ்த்தினளாகலின் - நீதான் தூயையாகலின் நின் வாழ்த்துப் பொய்யாது ஆகலின் யான் அங்ஙனம் பெறுகேன் என்று கூறி அவ்வாழ்த்தினைக் கண்ணகி நல்லாள் ஆர்வத்துடன் ஏற்றுக் கொண்டபடியாம். இதனால் கண்ணகி தேவந்தியின் பால் வைத்துள்ள நன்மதிப்பு விளங்குவதாயிற்று. நின்வாழ்த்தும் என் கனவும் முரணுதலின் யான் ஐயுறுகின்றேன் என்பாள், கனவினால் என்னெஞ்சம் கடுக்கும் என்றாள். 45. கடுக்கும் - ஐயுறும். கடியென்னும் உரிச் சொல்லடியாகப் பிறந்த முற்றுச் சொல்.

கடியென்கிளவி ............ ஐயமும் கரிப்பும் ஆகலும் உரித்தே என்பது தொல்காப்பியம் (உரி - 85 - 6).

தேவந்தி கணவனோடு பெறுக என்றமையால், அவன் வந்து என் கைப்பிடித்தனன். ஆனால், அது கனவு எனச் சிறிது நகையாடியவாறுமாம். அதனைத் தொடர்ந்து கண்ணகி தன் கனாத்திறம் கூறுகின்றாள் என்க. அவன் வந்து கைப்பிடித்தனன் எனவும் 44 - யாம் போய் ஓர் பெரும்பதியுட்பட்டேம் என்றும் வருவித்துரைக்க. முன்னர் அறிந்திலாத பதி என்பாள் ஓர் பெரும்பதி என்றாள். 47. படாதது - எமக்குப் பொருந்தாதது. உரையார் இழிதக்க காணிற் கனா என்பது பற்றிப் பொதுவாகப் படாத தொரு வார்த்தை என்றொழிந்தாள். இடு தேளிட்டென எனல் வேண்டிய உவமவுருபு செய்யுள் விகாரத்தாற் றொக்கது. இடுதேளிடுதலாவது, தேள் இடப் படுவார் காணாமே தேளல்லாத தொன்றை மறையக் கொணர்ந்து அவர் மேலே போகட்டுத் தேள் என்று சொல்லி அவரைக் கலங்கச் செய்தல். நகைப் பொருட்டாக இங்ஙனம் இடுதேளிடும் வழக்கம் இற்றை நாளினும் இருக்கின்றது. கணவன் எனத் தான் என வேறாகக் கருதாது அவன் மேலிட்ட பழியையே என் மேலிட்டனர் என்கின்றாள். என்றன் மேலென்புழி தன் அசைச்சொல்.

கோவலற் குற்றதோர் தீங்கென்றது கேட்டு யான் காவலன் முன்னர்க் கட்டுரைத்தேன். அதனால் காவலனும் தீங்குற்றான் எனக் கூறவந்தவள் அதனைக் கூறாது விடுத்து அப்பொருள் தோன்ற, காவலனோடு ஊர்க்குற்ற தீங்கும் ஒன்றுண்டு என உடனிகழ்ச்சிக்குரிய ஒடுவுருபானும் இறந்தது தழீஇய எச்சவும்மையானும் குறிப்பாக அறிவுறுத்தாள். அவற்றைக் கூறாமைக்குக் காரணம் கூறுவாள் அவை - யான் செய்த தீக் குற்றம் போலும் என்றிரங்கினாள். அவையாவன அரசன் உயிர் நீத்தமையும் மதுரை தீயுண்டமையுமாம். கண்ணகியார் இச் செயல்களைத் தாம் செய்த தீவினைகளாகவே கருதினர் என்பதனை, கட்டுரைக் காதைக்கண்,

அவுணரைக் கடந்த சுடரிலை நெடுவேல்
நெடுவேள் குன்றம் அடிவைத் தேறிப்
பூத்த வேங்கைப் பொங்கர்க் கீழோர்
தீத்தொழி லாட்டியேன் யானென் றிரங்கி

என அடிகளார் அறிவுறுத்துதலானும், மணிமேகலையில் சாத்தனார் கண்ணகி கூற்றாக,

உம்மை வினைவந் துருத்தல் ஒழியாதெனும்
மெய்ம்மைக் கிளவி விளம்பிய பின்னும்
சீற்றங் கொண்டு செழுநகர் சிதைத்தேன்
.......... .............. ............ ............
அவ்வினை யிறுதியி னடுசினப் பாவம்
எவ்வகை யானும் எய்துதல் ஒழியாது (26 : 32-7)

என்றோதுதலானும் உணர்க. எனவே, ஈண்டுக் கண்ணகியார் கனவிற் கண் தாமே தீவினை செய்ததாகக் காண்டலின் இவ்விழிதகவினை நினக்குரையாடேன் என்கின்றனர். மீண்டுந் தீக்குற்றம் உற்றேனொடு உற்ற உறுவன் என்றோதுதலும் அவர் அதற்குப் பரிந்தமையை வலியுறுத்துதலு முணர்க. பிறரெல்லாம் இதற்கு இப் பொருள் காணாது தத்தம் வாய் வந்தன கூறினர். 53. உறுவன் - மிக்கோன் - தாம் வலவனே வா வானவூர்தியில் வானவர் எதிர்கொண்டழைப்பச் சென்றமைக்குக் காரணம் தன் கணவன் செய்த நல்வினையே என்பாள் அவனை உறுவன் என்றோதினள். நற்றிறம் என்றது இறந்த கணவனை உயிரொடு கொணர்ந்து காட்டுதலும் அவனும் தானும் வானவூர்தியில் விண்ணகம் புக்கதும் பிறவுமாம். இவை, நிகழவொண்ணா நிகழ்ச்சிகளாகலின் நகைதரும் என்றாள். இவை இழிதக்கவல்லன வாயினும் நகைதருவன ஆகலின் இவற்றையும் உரையாடேன் காண் என்பது குறிப்பெச்சம்.

7புகார்க் காண்டம் - கனாத்திறம் உரைத்த காதை Empty Re: புகார்க் காண்டம் - கனாத்திறம் உரைத்த காதை Wed May 08, 2013 5:07 am

மணல் கூரை

மணல் கூரை
மணல் கூரை

மணல் கூரை

பதிவுகள் : 378

பதிவின் தரம் : 376

பதிவு விருப்பம் : 268

இணைந்தது : 06/04/2013


V.I.P MEMBER

V.I.P MEMBER
கனாத் திறங்கேட்ட தேவந்தி கண்ணகிக்குக் கூறுதல்

54 - 64 : பொற்றொடீஇ .............. பின்னரே

(இதன்பொருள் Smile பொற்றொடீஇ - பொன் வளையலையுடைய தோழீ! நீ கண்ட இக்கனவினால் நெஞ்சம் கலங்காதே கொள்! கணவற்குக் கைத்தாயும் அல்லை - நீ தானும் நின் கணவனால் வெறுத்துக் கைவிடப்பட்டாயும் அல்லை; பழம் பிறப்பில் ஒரு நோன்பு பொய்த்தாய் - நீ நின்னுடைய முற்பிறப்பிலே மகளிர் கணவர் பொருட்டு மேற்கொள்ளுதற்குரிய ஒரு நோன்பின்கண் தவறு செய்துள்ளனை போலும்; அத்தவறு காரணமாகவே நீ இப்பிறப்பில் இங்ஙனம் கணவனைப் பிரிந்துறையலாயினை போலும்; போய்க் கெடுக - அத் தவறுதானும் இவ்வளவோடு தொலைந் தொழிவதாக! காவிரி உய்த்துச் சென்று கடலோடு அலைக்கும் முன்றில் - காவிரிப் பேரியாறு தன்னீரைக் கொண்டுசென்று கடலோடு எதிர்த்து அலைத்தற்கிடனான கூடலிடத்தின் அயலே; மடல் அவிழ் நெய்தல் அம் கானல் தடமுள - தாழைமலர் மடல் விரிந்து மணம் பரப்பும் நெய்தனிலத்துச் சோலையினூடே இரண்டு நீர்நிலைகள் உள; சோமகுண்டம் சூரியகுண்டம் துறை மூழ்கி - சோமகுண்டம் என்றும் சூரியகுண்டம் என்றும் கூறப்படுகின்ற அப்புண்ணிய தீர்த்தங்களின் துறைகளில் முழுகி; காமவேள் கோட்டந் தொழுதார் தையலார்தாம் - அங்குள்ள காமவேள் கோயிலிற் சென்று அதன்கண்ணுறையும் காமக் கடவுளைக் கைகூப்பி வணங்கும் மகளிர்தாம்; உலகத்து கணவரொடு இன்புறுவர் - இந்நிலவுலகத்தே இப்பிறப்பிலுள்ள நாளெல்லாம் தங் கணவரொடும் பிரிவின்றியிருந்து பேரின்ப மெய்தாநிற்பர்; போகம் செய்பூமியினும் போய்ப் பிறப்பர் - பின்னரும் ஆதியரிவஞ்சம் முதலிய போகபூமியினும் தங் கணவரொடு போய்த் தேவராய்ப் பிறந்து நீடூழிப் பேரின்ப நுகரா நிற்பர் என்பது உலகுரையாம்; யாம் ஒருநாள் ஆங்குச் சென்று அத்தீர்த்தங்களிலே ஆடுவேம் காண்! என்று வேண்டிய அத்தேவந்திக்கு; அவ் ஆயிழையாள் பீடு அன்று என இருந்த பின்னரே - அக் கண்ணகிதானும் அங்ஙனம் துறைமூழ்கித் தெய்வந் தொழுதல் எம்மனோர்க்கு இயல்பாகாது காண்! என்று கூறி மறுத்திருந்த பின் அப்பொழுதே; என்க.

(விளக்கம்) 55 - கணவற்குக் கைத்தாயும் அல்லை என மாறுக. கைத்தல் - அறுவகைச் சுவையினுள் ஒன்று. அஃது ஈண்டு அச்சுவையினாற் பிறக்கும் உள்ள நிகழ்ச்சியாகிய வெறுப்பின் மேனின்றது. ஆகவே, நீ நின் கணவனால் வெறுக்கப்பட்டு அவனால் கைவிடப்பட்டாயு மல்லை என்றாளாயிற்று. வெறுத்துக் கைவிடப் பட்டிருந்தால் அவனைப் பெறுதல் கூடாது. நீ மீண்டும் பெறுதல் கூடும் என்பது கருத்து இனி நின் கணவன் பிரிதற்குரிய பிழை இம்மையில் நின்பால் யான்கண்டிலேன். ஆகலின் அவன் பிரிதற்குக் காரணம் நின் பழவினையே ஆதல் தேற்றம். புண்ணிய தீர்த்தங்களில் முழுகித் தெய்வந் தொழுவதுவே அதற்குக் கழுவாயாகும் என்பாள், அத்துறைகளின் சிறப் பெடுத்தோதி யாமும் ஒரு நாள் ஆடுதும் என்கின்றாள். தேவந்தியும் கணவற் பிரிந்தவளே யாதலின் யானும் அத்தகைய பழவினையுடையே னல்லனோ யாமிருவேமும் ஆடுதும் எனத் தன்னையும் உளப்படுத் தோதினள்.

கற்புடை மகளிர்க்குக் கணவரே தெய்வமாதலின் அவர் பிறதெய்வம் தொழுதல் இழுக்காம். இதனை,

தெய்வந் தொழாஅள் கொழுநற் றொழுதெழுவாள்
பெய்யெனப் பெய்யும் மழை

எனவரும் திருக்குறளானும் (55) உணர்க.

54. பொற்றொடீஇ : அன்மொழித்தொகை. விளியேற்று நின்றது. காவிரி உய்த்துச் சென்று கடலொடு அலைக்கும் முன்றில் எனமாறுக. முன்றில் - ஈண்டுக் கூடல் முகம். அது முன்றில் போறலின் அங்ஙனம் கூறினர். சோமகுண்டத்துறை மூழ்குவார் இவ்வுலகத்தின் புறுவர் என்றும் சூரிய குண்டத்துறை மூழ்கினர் போக பூமியிற்பிறந்து இன்புறுவர் என்றும் நிரனிறையாகக் கொள்வாருமுளர். அங்ஙனம் கோடலிற் சிறப்பியாது மின்மையுணர்க. பட்டினப்பாலையில் இரு காமத்து இணையேரி, (39) எனக் கடியலூர் உருத்திரங் கண்ணனாரால் கூறப்பட்டவை இங்குக் கூறப்படும் இருவகைக் குண்டங்களே என்ப.

கோவலன் வருகை

64 - 66 : நீடிய ............. குற்றிளையாள்

(இதன்பொருள் Smile ஓர் குற்றிளையாள் கோவலன் வந்து நீடிய நம் நடைத்தலையான் காவலன் போலும் என்றாள்-ஒரு குற்றேவற் சிலதி விரைந்துவந்து கண்ணகியை நோக்கி அன்னாய் நம்பெருமானாகிய கோவலன் உதோ வந்து நெடிய நம் வாயிலிடத்தே வாயில் காப்பான் போலே நிற்கின்றனன் என்று அறிவித்தனள்; என்க.

(விளக்கம் ) ஈண்டுத் தூமொழித் தேவந்தி நீ நின் கணவனொடு வாழ்வு பெறுக! என்ற வாழ்த்தும் கண்ணகி வைகறையிற் கண்ட கனவும் ஒருங்கே பலித்தமை யுணர்க. நீடிய கடைத்தலையான் என ஒட்டுக, கோவலன் இல்லத்துத் தலைவன் போன்று உட்புகுதத் துணிவின்றி வாயிலிலேயே தயங்கி நிற்றலாலே கோவலன் வந்து காவலன் போலக் கடைத்தலையான் என்று அவனை இயற்பழித்துரைகின்றாள். குறும்புடைய அக்குற்றேவற் சிறுமி. அரசர் போல நிற்கின்றார் எனவும் ஒரு பொருள் தோன்றலும் உணர்க.

இனி, பழையவுரையாசிரியர்கள், தூரத்தே பார்த்து ஐயுற்று நம் காவலன் போலும் என்று அணுகினவிடத்து ஐயந்தீர்ந்து கோவலன் என்றாள் எனினும் அமையும் என்பர். தமியனாய்ப் புலம்பு கொண்டு வருகின்றவனை அவள் காவலன் என்று ஐயுற்று நோக்குதல் பொருந்தாமை யுணர்க. நம் கோவலன் நெடுங்காலம் காப்பான் போலே இரா நின்றான் என அவர் கூறும் உரையும் அவள் குற்றேவற் சிலதி யாதலின் பொருந்தாவுரை யேயாம்.

கோவலன் கண்ணகிக்குக் கூறுதல்

66 - 71 : கோவலனும் .............. தருமெனக்கென்ன

(இதன்பொருள் Smile கோவலனும் - தன்னெஞ்சமே தன்னைச் சுடுதலானே வாயிலிலே அங்ஙனம் தயங்கிநின்ற அக் கோவலன்றானும் அக் குற்றிளையாளே தன் வரவுணர்த்திருப்பள் என்னும் தனதுய்த்துணர்வே வாயிலாக; பாடு அமை சேக்கையுள் புக்கு - இல்லினுட் சென்று ஆங்குப் புற்கென்று கிடக்கும் அணைகள் பலவற்றை அடுக்கிய தனது சேக்கைப் பள்ளியுட் புகுந்து; தன் பைந்தொடி வாடிய மேனி வருத்தம் கண்டு - தன்னை முகமலர்ந்து வரவேற்பாளாய் அவனைத் தொடர்ந்துவந்து முன்னின்ற காதலியாகிய கண்ணகியினது திருமேனியினது வாட்டத்தையும் நெஞ்சினது வருத்தத்தையும் கண்கூடாகப் பார்த்து; யாவும் சலம்புணர் கொள்கைச் சலதியோடு ஆடி - எல்லாச் செயல்களிடத்தும் பொய்யை மெய்போலப் பொருந்துவித் தொழுகும் கோட்பாட்டையுடைய மாயத்தாளோடுங் கூடி ஆடிய எனது தீயொழுக்கங் காரணமாக; குலம் தரும் குன்றம் வான் பொருள் தொலைந்த இலம்பாடு எனக்கு நாணுத்தரும் என்ன - நங் குலத்து முன்னோர் தேடித்தந்த மலையளவிற்றாகிய சிறந்த பொருட்குவை யெல்லாம் தொலைந் தொழிந்தன அதனால் உண்டான நல்குரவு இப்பொழுது எனக்குப் பெரிதும் நாணைத் தருகின்றது காண் என்று கூறி இரங்க; என்க.

(விளக்கம்) 66 - கோவலனும் என்புழி உம்மை இழிவு சிறப்பு. பாடு அமை சேக்கை - அணைகளை அடுக்கிப் படுத்த சேக்கைக் கியன்ற பள்ளியறை 97 - தன் காதலியாகிய பசிய தொடியினையுடைய கண்ணகியின் வாடிய மேனி என்க. மேனியும் நெஞ்சத்து வருத்தமும் என உம்மை விரித்தோதுக. சலம் - பொய் - வஞ்சமுமாம் யாவும் எல்லாச் செயல்களிடத்தும், எல்லா வொழுக்கத்தினும் வஞ்சகத்தைப் புணர்த்தல் வேண்டும் என்பது அவள் மரபிற்கே ஒரு கோட்பாடு ஆகலின், சலம்புணர் கொள்கைச் சலதி என்றான். குலந்தரும் பொருள்வான் பொருள் எனத் தனித்தனி யியையும். தொன்று தொட்டுக் குல முன்னோர் அறத்தாற்றீட்டிய சிறந்த பொருள் என்பது கருத்து. பொருளின் மிகுதிக்குக் குன்றம் உவமை. சலதியோடு ஆடப் பொருட் குன்றம் தொலைந்த அதனால் உண்டான நல்குரவு நாணுத்தரும் என்றான் என்க. இலம்பாடு - நல்குரவு. நாணுத்தரும் என்றது கெட்டால் மதி தோன்றும் என்னும் வழக்கு.

கண்ணகி கோவலனுக்குக் கூறுதல்

72 - 73 : நலங்கேழ் ............. கொண்மென

(இதன்பொருள் Smile நலம் கேழ் நகைமுகம் முறுவல் காட்டி - கணவனுடைய கழிவிரக்க மொழிகளைக் கேட்ட அத்திருமாபத்தினி தானும் கணவன் கருத்தை யாவதும் மாற்றாத கொள்கையை யுடையாளாகலின் கோவலன் மாதவிக்குக் கொடுக்கும் பொருள் முட்டுப்பாட்டினாலே இங்ஙனம் கூறினானாகக் கருதி; அவனுடைய அத்துயர்துடைக்க வழி யாது எனத் தன்னெஞ்சத்துளாராய்ந்து ஒருவழி காணப்பெற்றமையாலே; மெய்யன்பென்னும் நலம் பொருந்துதலாலே புத்தொளி படைத்த தனது திருமுகத்திலே தோன்றிய புன்முறுவலைக் காட்டி; சிலம்பு உள கொண்ம் என - அன்புடையீர் இன்னும் என்பால் சிலம்பு ஓர் இணை உள அவையிற்றைக் கொண்மின் என்று கூறாநிற்ப; என்க.

(விளக்கம்) நலம் - அன்பாகிய நன்மை. அந்நலத்தின் மெய்ப் பாட்டினை நகை என்றார். நகை - ஒளி. இலம்பாடு நாணுத்தரும் என்பது அவன் குறையாகலின் அது தீர்த்தற்குத் தன்னுட் சிறிது சூழ்ந்து தான் அணியாதிருக்கும் பெருவிலைச் சிலம்புகள் இக்குறையை இப் பொழுதைக்குத் தீர்க்கப் போதியன வாகும் என்று அப்பெருந் தகையாள் அவற்றைக் கொண்மின் எனக் கூறும் இச்சிறப்பு அவளது ஒப்பற்ற கற்பினது மாண்பினை நன்கு விளக்கி நிற்றல் உணர்ந்துணர்ந்து மகிழற் பாலதாகும். இது கூறுங்கால் அவன் துயர்க்குத் தான் வாய்மையாகவே வருந்தி அன்பு மேலீட்டால் கூறுதலின் முகம் மலர்ந்து கூறுகின்றாள் என்றுணர்க. அவன் குறை தீர்க்கலாவது அப்பொழுது தன்பாலொன்றுளதாவதனை நினைவு கூர்ந்தவுடன் மகிழ்ச்சியால் அவள் முகமலர்ந்து புன்முறுவலும் தவழ்வதாயிற்று. இஃதியற்கையாம். சிலம்புள கொண்மின் எனவே இவை யொழிந்த அணிகலனெல்லாம் முன்னமே தொலைந்தமை பெற்றாம்.

8புகார்க் காண்டம் - கனாத்திறம் உரைத்த காதை Empty Re: புகார்க் காண்டம் - கனாத்திறம் உரைத்த காதை Wed May 08, 2013 5:08 am

மணல் கூரை

மணல் கூரை
மணல் கூரை

மணல் கூரை

பதிவுகள் : 378

பதிவின் தரம் : 376

பதிவு விருப்பம் : 268

இணைந்தது : 06/04/2013


V.I.P MEMBER

V.I.P MEMBER
கோவலன் கண்ணகியோடு மதுரைக்குப் போகத் துணிதல்

73-79 : சேயிழைகேள் ....... கால்சீயாமுன்

(இதன்பொருள்) சேயிழை கேள் - அதுகேட்ட கோவலன் பின்னரும் அவட்குப் பரிந்து சேயிழையே இப்பொழுது யான் கருதுவதனைக் கூறுவல் கேட்பாயாக! சிலம்பு முதல் ஆக - நீ சொன்ன அச்சிலம்பை யான் வாணிகத் தொழிலுக்கு முதற் பொருளாகக் கொண்டு; மலர்ந்த சீர் மாட மதுரை யகத்துச் சென்று - நாற்றிசையினும் விரிந்த புகழையுடைய மாடங்களாற் சிறந்த மதுரையென்னும் நகரிடத்தே சென்று அத்தொழிலைச் சிறப்பச் செய்து; சென்ற கலனோடு உலந்த பொருள் - யான் முன்பு நின்பால் வாங்கி அழித்த அணிகலன்களையும் என்னாற் றொலைக்கப்பட்ட பொருள்களையும்; ஈட்டுதல் உற்றேன் - தேடித் தொகுக்கத் துணிந்தேன்; ஏடு அலா கோதாய் - இதழ் விரிகின்ற மலர்மாலையையுடையோய்; ஈங்கு என்னோடு எழு என்று - அதற்கு நீ இப்பொழுதே இவ்விடத்தினின்றும் என்னோடு எழுந்து வருவாயாக! என்று சொல்லி; கனைசுடர் கங்குல் கால்சீயா முன் - கதிரவன் தனது மிக்க ஒளியால் உலகின் கண் செறிந்த இருளைப் போக்குதற்கு முற்பட்ட வைகறைப் பொழுதிலே; வினை நீடி கடைக்கூட்ட முற்பிறப்பில் தான் செய்த தீவினையானது பயன்றரும் செவ்வியுறுந்துணையும் தன் னெஞ்சத்துள் நெடிதிருந்து தன் நெஞ்சை ஒருப்படுத்துதலானே; வியம் கொண்டான் - செவ்வி வந்தெய்தினமையால் அவ்வினை தன்னெஞ்சத்துள் ஏவிய ஏவலை மேற்கொண்டாள் என்க.

(விளக்கம்) சீத்தல் - விலக்குதல்; அகற்றுதல். கனை சுடர் - ஞாயிறு. கால் சீத்தல் : ஒரு சொல் எனினுமாம். சுடர் கால் சீயா முன் எனவே வைகறையாமத்தே என்பதாயிற்று. ஒருவன் செய்த வினை, தனது பயனை விளைத்தற்குத் தகுந்த செவ்வி பெறுமளவும் அவனுடைய நெஞ்சத்தைப் பற்றுக் கோடாகக் கொண்டு கிடக்கும் என்பது தத்துவ நூல் வழக்கு. ஆதலின் வினை நீடிக் கடைக் கூட்ட என்றார். வியம் - ஏவல் - வினையினது ஏவல்.

பா-கலிவெண்பா

வெண்பாவுரை

காதலிகண்ட .......... சீயாமுன்

(இதன்பொருள்) காதலி கண்ட கனவு - கண்ணகி கண்ட கனவானது; கரு நெடுங்கண் மாதவி தன் சொல்லை வறிது ஆக்க- கரிய நெடிய கண்களையுடைய மாதவி வயந்தமாலைக்கு காலை காண்குவம் என்று கூறிய சொல்லைப் பயனிலாச் சொல்லாகக் செய்துவிட; மூதை வினை கடைக்கூட்ட - கோவலனுடைய பழவினை அவன் நெஞ்சை ஒருப்படுத்துதலானே; கனைசுடர் கங்குல் கால் சீயாமுன் - ஞாயிறு இருளைப் போக்குதற்குமுன்பே; வியங்கொண்டான் - அவன் அவ்வினையினது ஏவலை மேற்கொண்டனன்; என்க.

(விளக்கம்) அடிகளார் இதுகாறும் மாதவியை மாமலர் நெடுங்கண் மாதவி என்றே பலவிடங்களிலும் கூறிவந்து ஈண்டுக் கருநெடுங்கண் மாதவி எனக் கூறுவது கூர்ந்துணரற்பாலதாம். மாதவிக்கு இனி எஞ்ஞான்றும் கூட்டமின்மையால் இங்ஙனம் கூறினர். சொல்லை வறிதாக்குதலாவது பயன்படாமற் செய்தல்.

கனாத்திற முரைத்த காதை முற்றிற்று.

9புகார்க் காண்டம் - கனாத்திறம் உரைத்த காதை Empty Re: புகார்க் காண்டம் - கனாத்திறம் உரைத்த காதை

Sponsored content

Sponsored content


View previous topic View next topic Go down  Message [Page 1 of 1]

Permissions in this forum:
You cannot reply to topics in this forum

Style of Google. Code by SkinOne