பழந்தமிழ்ப் பண்டிதர்கள் பெரும்பாலும் சிறுகதைகளைப் பற்றிக் கவலைப்படுவதில்லை. அவைகளை அவர்கள் இலக்கியம் என்று கூட எண்ணுவதில்லை. புதிதாக வெளிவரும் சிறுகதைகளை அவர்கள் படிப்பதுகூட இல்லை. சிறுகதைகள் எழுதுவோரை அவர்கள் பரிகாசக் கண்ணோடுதான் பார்த்து வந்தனர்.
சிறுகதைகளை அலட்சியம் செய்துவந்த காலம் இன்று மலையேறிவிட்டது. அவைகள் இலக்கியச் சோலையிலே வளர்ந்து நிலை பெற்று வருகின்றன. சிறுகதைகளை அலட்சியம் செய்தவர்கள் கூட இன்று அவைகளைப் படிக்க ஆர்வமுடன் முன் வருகின்றனர். இலக்கியப் பத்திரிகைகளிலே சிறுகதைப் பகுதி முதன்மையிடம் பெற்றுவிட்டது. நாம் இருக்கும் இக்காலத்தைச் ”சிறுகதையுகம்” என்று சொன்னால் இதை மறுப்போர் இல்லை.
மக்கள் மனப்போக்கை ஒட்டி வளர்வதே இலக்கியம். மக்கள் மனப்போக்கும், நடையுடைகளும் காலப்போக்கில் மாற்றம் அடைந்து வருவதைக் காண்கின்றோம். இதற்கு ஏற்றாற்போலவே இலக்கிய அமைப்பும் மாறிக் கொண்டுதான் வருகின்றது. இத்தகைய மாற்றந்தான் வளர்ச்சியாகும். மாற்றம் இன்றேல் வளர்ச்சியில்லை; மாற்றமும் வளர்ச்சியும் ஒன்றோடு ஒன்று இணைந்தவை. ஆதலால் இன்று வளர்ந்துவரும் சிறுகதை இலக்கிய வளர்ச்சியை யாரும் அலட்சியப்படுத்த முடியாது. இலக்கியத் துறையிலே இது ஒரு சிறந்த பகுதி என்பதை எவரும் மறுக்கவும் முடியாது.
சிறுகதைகளைப் படிப்பதிலே, எல்லாப்பகுதி மக்களுக்கும் ஆர்வம் இருக்கிறது. எழுத்தாளர்கள் பலரும் சிறுகதைகள் எழுதுவதிலே அக்கரை காட்டுகின்றனர். இப்பொழுது பத்திரிகைகள் மூலம் வீசிக்கொண்டிருக்கும் சிறுகதைத் தென்றல் தான் புதிய எழுத்தாளர்கள் பலரை எழுதத் தூண்டுகிறது. சிறப்பாக இளைஞர்கள் பலரை எழுத்துத் துறையிலே இழுப்பதற்குச் சிறுகதைகள்தாம் காரணம் என்று கூடச் சொல்லி விடலாம். இவ்வாறு, படிப்பதற்கும், எழுதுவதற்கும், சிறுகதைகள் உற்சாகம் ஊட்டுகின்றன என்பதில் ஐயமில்லை.
சிறுகதைகளை மிகுதியாகப் படிக்கின்ற ஆண்-பெண் இளைஞர்களிலே பலர் தாமும் சிறுகதைகள் எழுதவேண்டும் என்று ஆசைப்படுகின்றனர். ஆரம்பத்தில் தங்கள் உள்ளத்தில் தோன்றும் கற்பனைகளை வைத்துக்கெண்டு கதைகள் எழுதுகின்றனர். அல்லது தாங்கள் படித்த கதைகளில் அங்கொன்றும் இங்கொன்றும் அள்ளியெடுத்து ஒன்று சேர்த்து கதை உருவாக்குகின்றனர். கதை எழுதவேண்டும் ஆசை காரணமாக, ஏதோ காமாச்சோமாவென்று எழுதிவிடுகின்றனர். அவைகள் பத்திரிகைகளில் வெளிவர வேண்டுமென்று விரும்புகின்றனர். இத்தகைய ஆரம்ப எழுத்தாளர்களிலே பலர் சிறந்த சிறுககை எழுத்தாளர்களாக ஆகி விடுகின்றனர். ஆசையும், முயற்சியும், அறிவையும், ஆற்றலையும் வளர்க்கும் என்பதில் ஐயம் இல்லை.
சிறுகதை எழுதும் முறை முற்றிலும் கூட நமக்குப் புதிது. இது மேல்நாட்டிலிருந்து இறக்குமதி செய்துகொள்ளப்பட்ட சரக்கு. மேல் நாட்டு மொழிப் பயிற்சிக்குப் பிறகுதான் சிறுகதைகள் எழுதக் கற்றுக் கொண்டோம் என்று சிறுகதை இலக்கிய அறிஞர்கள் கூறுகின்றனர். பன்மொழிப் புலவர்கள் பலரும் ஒரு மனதாகக் கூறும் இந்த உண்மையை நாம் முழுவதும் மறுக்கவில்லை. சிறுகதைகளைத் தனி இலக்கியமாக விளங்கும் வகையில் வளர்த்தவர்கள், மேல்நாட்டினர்தாம் என்பதில் ஐயமில்லை.
ஒரு நிகழ்ச்சியை மட்டும் படிப்போர் உள்ளத்திலே பதியும்படி கூறுவதுதான் சிறுகதை என்று பொதுவாகக் கூறுகின்றனர். சிறுகதை என்பது உருவத்தைப் பொறுத்தது அன்று. சிறுகதை என்பது ஒரே பக்கத்திலும் அமையலாம். ஐம்பது பக்கங்களிலும்கூட அமையலாம். நிகழ்ச்சி மட்டும் ஒன்றே ஒன்றாக இருக்க வேண்டும். ஆனால் சிறுகதைகளுக்கு இலட்சியம் உண்டு என்பதே மறுப்பதற்கில்லை. பெருங்கதைக்கும் (நாவலுக்கும்) சிறுகதைக்கும் உள்ள வேறுபாட்டைப் புதுமைப்பித்தன் தெளிவாக எடுத்துக் கூறியிருக்கின்றார்.
”சிறுகதை வாழ்க்கையின் சாரம் என்றால் நாவல் வாழ்க்கையைப் பிரதிபலிக்கும் நிலைக்கண்ணாடி. வாழ்க்கையின் சிக்கல்களை, அதன் உயர்வை, அதன்சிறுமைகளை, உலாவும் பாத்திரங்களான மனிதக் கூட்டத்தின் சலனத்தில், அவற்றின் குண விஸ்தாரத்துடன் சிருஷ்டிப்பதுதான் நாவல், நாவலுக்குக் கால எல்லை கிடையாது. சென்ற காலம், நிகழ்காலம், வருங்காலம் இவற்றின் நிகழ்ச்சியை, மனோதர்மத்தால், சிருஷ்யின் மேதை குன்றாமல் கற்பனை செய்வதுதான் நாவல்”.
என்று நாவலைப்பற்றி எழுதியிருக்கின்றார். சிறு கதையைப் பற்றியும் அவர் கூறியிருக்கின்றார்.
சிறுகதை வாழ்க்கையின் ஒரு பகுதியை, மற்றவற்றின் கலப்பை மறந்து, ஏன், விட்டுவிட்டுக் கவனிக்கிறது என்று கூறுகின்றார். மேலும் சொல்லும்போது சிறுகதையின் லட்சியத்தையும் எடுத்துக் காட்டுகிறார்.
”கதையை வாசிப்பது, நமது சிந்தனையின் சலனத்தை ஊக்குவதற்கு ஒரு தூண்டுகோல். கதை முடிவடையும்போது அதைப்பற்றிய சிந்தனை முடிவடைந்து விடாது. இப்படிப்பட்ட கதைகள் முடிந்த பிறகுதான் ஆரம்பமாகின்றன என்று சொன்னால் விசித்திரவாதமாகத் தோன்றும். ஆனால் அதுதான் உண்மை”
இவை புதுமைப்பித்தன் மொழிகள். இவற்றிலிருந்து லட்சியத்தை அடிப்படையாகக் கொண்டதும், படித்தபின் அந்த லட்சியத்தைப் பற்றி சிந்திக்கச் செய்வதுமே சிறந்த சிறுகதைகள் என்பதை அறியலாம்.
புதுமைப்பித்தன் கதைகளிலே பல இத்தகைய லட்சியத்தை அடிப்படையாகக் கொண்டிருப்பதைக் காணலாம்.
துன்பக்கேணி, பொன்னகரம், மனித யந்திரம், மகா மசானம், மனக்குகை ஓவியங்கள், போன்ற கதைகள் படிக்கும் போதும் கருத்தைக் கவர்கின்றன. படித்தபின்னும் சிந்திக்கச் செய்கின்றன. இத்தகைய கதைகள் இலக்கிய உலகில் என்றும் நின்று நிலவக்கூடியனவே.
நாமும் முன்னோரும்
சிறுகதையின் அமைப்பு நமக்குப் புதிதாக இருக்கலாம். ஆனால் சிறுகதையும் அதன் கருத்தும் நமக்குப் புதிதல்ல என்பதே நமது எண்ணம். இதை ஒப்புக்கொள்ள மறுப்போர் உண்டு.
சிறுகதை கேட்கும் ஆர்வம்; சிறுகதை எழுதும் ஆசை இவை நமது நாட்டிலும் பண்டைக்காலத்தில் இருந்தன. ஆயினும் மேல்நாட்டு முறைபற்றிய சிறுகதை அமைப்பும் நமது நாட்டுப் பண்டைச் சிறுகதை அமைப்பும் வெவ்வேறு என்பதை நாம் மறுக்கவில்லை.
மேல்நாட்டினர் சிறுகதையை ஒரு தனிக்கலையாக இலக்கியமாக வளர்த்திருக்கின்றனர். நமது நாட்டில் அப்படியில்லை. நமது முன்னோர்கள் பெருங்கதைகளோடு சிறுகதை இணைத்துக் கூறினர். கருத்தை விளக்குவதற்கே சிறுகதைகளைக் கையாண்டனர். சிற்சில சிறுகதைத் தொகுதிகளையும் எழுதி வைத்திருக்கின்றனர்.
நமது நாட்டில் வழங்கும் சிறுகதைகள் லட்சியத்தைக் கருவாக கொண்டவைகள் என்பதில் ஐயம் இல்லை. ஆனால் புதுமைப்பித்தன் கூறுவதுபோல படித்தபின் சிந்தனையைத் தூண்டும் கதைகளாக அமையவில்லை என்பதை நான் ஒப்புக்கொண்டுதான் ஆகவேண்டும். கதை முடிந்தபிறகுதான் கதைதொடங்குகிறது என்ற தன்மையும் பண்டைச் சிறுகதைகளில் இல்லை என்பது உண்மை.
பாரதத்திலே பல சிறுகதைகள் உண்டு. இராமாயணத்திலே பல சிறுகதைகள் உண்டு. சிலப்பதிகாரம், மணிமேகலைகளில் பல சிறுகதைகள் இருக்கின்றன. ஆனால் இவைகள் பெருங்கதைகளோடு தொடர்பு கொண்டவை. இவற்றைக் கிளைக்கதைகள் என்பர்; இத்தகைய கிளைக் கதைகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு நீதியை -அல்லது கருத்தை வலியுறுத்தவே கூறப்பட்டுள்ளன.
பெரியபுராணம் என்னும் தமிழ் நூலை ஒரு சிறுகதைத்தொகுதி என்றே கூறிவிடலாம். ஆனால் இப்புராணத்தில் உள்ள சுந்தரர், அப்பர், சம்பந்தர் வரலாறுகளைச் சிறுகதைகளாக எண்ண முடியாது. இவர்கள் வரலாற்றிலே பல சம்பவங்கள் வருகின்றன. ஆதலால் இவைகள் பெருங்கதைகளாகத்தான் இருக்கின்றன. ஏனைய நாயன் மார்களின் கதைகள் சிறுகதைகள் போலவே யிருக்கின்றன. பக்தியின் பொருட்டு எதையும் தியாகம் செய்பவரே அடியார்கள் என்ற ஒரே கருத்தை அடிப்படையாகக் கொண்டவைகள்தான் பெரும்பான்மையான நாயன்மார்களின் கதைகள்.
நமது நாட்டில் வழங்கும் பஞ்சதந்திரக் கதையை ஒருசிறுகதைத் தொகுதி என்று கூறலாம். விக்கிரமாதித்தன் கதையையும் ஒரு சிறுகதைத் தொகுதியென்று சொல்லலாம்.
ஆனால், பெரியபுராணத்திற்கும், இவைகளுக்கும் ஒரு வேற்றுமையுண்டு. பெரிய புராணக் கதைகள் தனித்தனிக் கதைகளாகவே அமைந்திருக்கின்றன. பஞ்சதந்திரக் கதைகளும், விக்கிரமாதித்தன் கதைகளும் ஒன்றோடொன்று பிணைக்கப்பட்டிருந்த கதைகள். திருவிளையாடல் புராணம் என்பதைப் பற்றியும் பலர் அறிந்திருக்கலாம். இதையும் சிறுகதைத் தொகுதியென்றே கூறிவிடலாம். இதில் உள்ள கதைகளும் தனித்தனிக் கதைகளாகவே அமைந்திருக்கின்றன.
இவைகளைத் தவிர நமது நாட்டில் எழுதாமல் சொல்வழக்கில் வழங்கும் சிறுகதைகள் பலவுண்டு. இக்கதைகளை இன்றும் நமது பாட்டிமார்களும் பாட்டன்மார்களும் சொல்லக் கேட்கலாம். இவ்வாறு வழங்கும் சிறுகதைகளை பாட்டிக்கதைகள் என்று வழங்குகின்றனர்.
இவ்வாறு கதைகள் கூறும் முதியோர்களை இன்றும் நாட்டுப் புறங்களிலே காணலாம். இக்கதைகளுக்குக் கர்ணபரம்பரைக் கதைகள் என்று பெயர். இப்படி வழங்கிவரும் ககைகளில் பல இன்று மறைந்து வருகின்றன. நாட்டுப் பாடல்களிலே பல, மறைந்து விட்டதைப் போலவே, நாட்டுக் கதைகளிலே பல மறைந்து விட்டன என்று கூறலாம்.
ஆனால் இன்று சிறுகதை இலக்கியம் வளர்ந்து வருவதைப்போல பண்டைக்காலத்தில் சிறுகதை இலக்கியங்கள் வளர்ந்து வரவில்லை. அமைப்பிலே இன்றைய சிறுகதைக்கும் பண்டைக்காலச் சிறுகதைக்கும் வேற்றுமை உண்டு. இவ்வுண்மையை நாம் ஒப்புக்கொண்டுதான் தீரவேண்டும். ஆனால் சிறுகதைகள் கேட்பதிலே ஆசை, படிப்பதிலே ஆசை, எழுதுவதிலே ஆசை, நமது முன்னோர்களுக்கும் இருந்ததென்ற உண்மையை மறுப்பதற்கில்லை.
வரவேற்கத்தக்க கதைகள்
மற்றொரு செய்தியை நாம் மறந்து விடக்கூடாது. பண்டைக்காலக் கதைகள், இன்றைய சிறுகதை இலக்கியத் தன்மையைப் பெற்றிருக்கவில்லை என்பது உண்மையாக இருக்கலாம். ஆனால் அக்காலக் குட்டிகதைகளிலே பல பாட்டிக்கதைகளிலே பல-புராணக் கதைகளிலே பல-இன்றும் மக்களால் உற்சாகத்துடன் கேட்கப்படுகின்றன. இதற்குக்காரணம் அவைகளிலே
குறிக்கோள் அல்லாது இலட்சியம் அமைந்திருப்பதுதான் இதனை எவரும் மறுப்பதற்கில்லை.
இன்று எழுதப்படும் சிறுகதைகளும் இலட்சியத்தை அடிப்படையாகக் கொண்டிருந்தால்தான் அவைகள் நீண்ட காலம் நிலைத்து நிற்கும்; இலக்கிய வரிசையிலே இடம் பெறும். இவ்வுண்மையை மறவாத சிறுகதை எழுத்தாளர்களே உண்மையில் தங்கள் இலக்கியப் படைப்பின் மூலம் பொதுமக்கள் வாழ்வுக்கு வழிகாட்டிகளாகவும் இருப்பார்கள்.
இன்றைய இலக்கியப் படைப்பாளர்கள் பழமையை அடியோடு வெறுக்காமல் அங்கேயும் சென்று கொஞ்சம் நிதானித்துப் பார்க்க வேண்டும். இவ்வாறு பார்த்தவர்கள். தாம் பார்த்தவற்றே மனதிற் கொண்டு புதியபடைப்புகளை ஆக்குவார்களாயின், அவைசிறந்து விளங்கும் என்பது உறுதி.
எழுத்தாளன் என்பவன், தான் இருக்கும் நாட்டையும், தன்னைச் சூழ்ந்திருக்கும் மக்களையும் மறந்து விடுவானாயின் அவனையும் மக்கள் மறந்து விடுவார்கள். இந்த உண்மையை மறவாத எழுத்தாளர்களே மக்கள் மனதில் குடியேறுவார்கள். தம்மைச்சுற்றியுள்ள மக்கள் நிலையைப் பரிதாபக் கண்களுடன் பார்க்கும் எழுத்தாளர்கள் எழுதுகிற சிறுகதைகளே சிறந்த இலக்கியங்களாக விளங்கும் என்பது எமது கருத்து. உங்கள் கருத்து இதற்கு மாறாக இருந்தால் அதில் நாம் குறுக்கிட விரும்பலில்லை. எதுசரியென்பதை மக்கள் முடிவுசெய்யட்டும்.
தாமரை 7.10.1959.
-டாக்டர் மு.வெங்கடாஜலபதி பி.எச்.டி.
நன்றி: சாமிசிதம்பரனாரின் இலக்கியச்சோலை