Do not have a Cplus account?  Create an account

Log In

Stay logged in.
Can not access your account?

Google+

Sign in and start sharing with Google+

Only shared with the right people

Share some things with friends, others with some families but do not share anything to your boss!

Make your conversations come alive

Hangout make conversations come alive stockings photos, emoticons even group video calls for free!

Make your photos look better than ever

Automatic backup, organize, and improve your photos!

Do you know?

You can sign in to your Google+ account using your existing Google?

Results for keyword ""

Sign Up
Hangouts

மணல் கூரை

மணல் கூரை | தமிழ் பண்பாட்டுக் கூரை!

GO TO TOP


You are not connected. Please login or register

View previous topic View next topic Go down  Message [Page 1 of 1]

1இலக்கியங்கள் ஏன்? Empty இலக்கியங்கள் ஏன்? Wed May 22, 2013 3:56 pm

மணல் கூரை

மணல் கூரை
மணல் கூரை

மணல் கூரை

பதிவுகள் : 378

பதிவின் தரம் : 376

பதிவு விருப்பம் : 268

இணைந்தது : 06/04/2013


V.I.P MEMBER

V.I.P MEMBER
”கொள்கைகளை வலியுறுத்துவதற்காக எழுதப்படுவது இலக்கியம் அன்று; இலக்கியம் பிரசாரத்தை அடிப்படையாகக் கொண்டிருக்கக்கூடாது; பொழுது போக்குக்காகப் பயன்படும் வகையிலே மக்கள் படித்துச் சுவைப்பதற்காக மட்டுமே இலக்கியங்கள் எழுதப்படவேண்டும்; இம்மாதிரி எக்கருத்தையும், எக்கொள்கையையும் பின் பற்றாமல், வெறும் சொல்லலங்காரங்களைக் கொண்டிருப்பதே இலக்கியங்கள்” என்போர் உண்டு.

இக்கருத்து எப்பொழுது பிறந்தது? எதற்காகப் பிறந்தது? என்பதே நமக்குப் புரியவில்லை. இக்கருத்துப் பொருத்தமுள்ளதுதானா? இலக்கியம் தோன்றுவதற்கு, வளர்வதற்கு இக்கருத்து ஏற்றதுதானா? இன்று இலக்கியம் என்று போற்றப்படும் நூல்களிலே இக்கருத்தை அடிப்படையாகக் கொண்ட நூல்கள் மக்களால் விரும்பிப் படிக்கப்படுகின்றனவா? என்பவைகளைப் பற்றி எண்ணிப் பார்க்கத்தான் வேண்டும்.

தமிழைப் பொறுத்த வரையிலும் கருத்தோ கொள்கையோ இல்லா நூல்கள் ஒன்றும் இல்லை; புதிய நூல்களும் இல்லை. கருத்தும் கொள்கைகளும் அடங்கிய பழந்தமிழ் நூல்கள்தாம் இன்னும் மக்களால் போற்றப்படுகின்றன; சிறந்த இலக்கியங்கள் என்று பாரட்டப்படுகின்றன.

புறநானூறு

சங்க இலக்கியங்களிலே சிறந்து விளங்கும் புறநானூற்றை எடுத்துக் கொள்வோம். அதுஒரு தனிப் பாடல்களின் திரட்டுத்தான். பழந்தமிழ்ப் புலவர்களின் தொகுதி அது. அப்பாடல்களிலே அரசியல் முறைகளைக் காணலாம். அரசியல் நீதிகளைக் காணலாம்.. மக்கள் வாழ வழி காட்டும் அறவுரைகளைக் காணலாம். உலக நிலையை எடுத்துக் காட்டி உண்மை வழி இதுதான் என்று கூறும் வேதாந்தக் கருத்துக்களைக் காணலாம்; மக்கள் சமுதாயம் ஒன்றுபட்டு இன்பமாக வாழ்வதற்கு வழி கூறும் பாடல்களைக் காணலாம்.

புறநானூற்றுப் பாடல்கள் பெரும்பாலும் கருத்தையும் கொள்கையையும் அடிப்படையாகக் கொண்டவைகளாக இருப்பதை அவற்றைப் படிப்போர் காண்பார்கள். இதற்கு எடுத்துக் காட்டாக ஒரு பாடலைப் பார்ப்போம்.

ஒரு சமயம், சேரன், பாண்டியன், சோழன் மூவேந்தர்களும் சமாதானமாக ஒன்றாகக் கூடியிருந்தனர். சேரமான் மாரிவெண்கோ, பாண்டியன் கானப்பேர் தந்த உக்கிரப் பெருவழுதி, சோழன் இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளி என்பவர்களே அம்மூவேந்தர்கள். அவர்கள் ஒன்றாக இருப்பதைக் கண்ட அவ்வையார் அவர்களுக்கு அறிவுரை கூறும் வகையிலே ஒரு பாடலைக் கூறினார். அப்பாடல் புறநானூற்றில் 367-வது பாடலாக அமைந்திருக்கின்றது. அப்பாடலின் பொருளைக் காண்போம்.

”தேவலோகம் போன்ற இன்பப் பகுதிகள் அமைந்த இந்த நாடு. தமது அரச பரம்பரைக்கு உரியதாக இருக்கலாம். ஆயினும், நல்லறங்களைச் செய்யாத அரசர்களுடன் கூடியிராது; அவர்களை விட்டு நீங்கிவிடும். அரச பரம்பரையில் பிறவாதவராயினும், தவம் புரிந்தவர்க்கு உரிமையாகி விடும். ஆதலால் அரச செல்வம் நிலையானது என்று மகிழ்ச்சியடையாதீர்கள். உங்களிடத்தில் செல்வம் இருக்கும்போதே. யாசிக்கின்ற-பல நூல்களையும் கற்றறிந்த அந்தணர்களுக்கு, குளிர்ந்த கை நிறையும்படி மலரும். பொன்னும் நீருடன் தாரை வார்த்துக் கொடுங்கள். பசுமையான பொன்னாபரணங்களை அணிந்த மகளிர் பொற்கிண்ணத்திலே ஊற்றிக் கொடுக்கின்ற பன்னாடையால் வடிகட்டப்பட்ட மதுவை அருந்திக் களிப்படையுங்கள்; வறுமையால் வாடி வந்து இரப்போர்க்கு இல்லையென்னாமல் சிறந்த பண்டங்களை வழங்குங்கள். உங்கள் வாழ்நாள் முழுவதும் இவ்வாறு நீங்கள் வாழ வேண்டும்”. இது அப்பாடலில் அடங்கியிருக்கும் அறிவுரை.

நாகத்து அன்ன பாஆர் மண்டிலம்

தமவே ஆயினும் தம்மொடு செல்லா

வேற்றோர் ஆயினும் நோற்றேர்க்கு ஒழியும்;

ஏற்ற பார்ப்பாருக்கு ஈர்ங்கை நிறையப்

பூவும் பொன்னும் புனல்படச் சொரிந்து,

பாசிழை மகளிர் பொலங்கலத்து ஏந்திய

தார்அரி தேறல் மாநதி மகிழ்சிறந்து,

இரவலர்க்கு அருங்கலம் அருகாது வீசி,

வாழ்தல் வேண்டும் இவண் வரைந்த வைகல்,

இதுவே மேலே காட்டிய பொருளை விளக்கும் பாடல் பகுதி. இப்பாடல் வாயிலாக அவ்வையார், மூன்று விஷயங்களை மூவேந்தர்களுக்கும் அறிவுறுத்தினார். அவை:-

நல்ல நூல்களையெல்லாம் கற்றறிந்து, உண்மையறிந்து, உலகினர்க்கு வாழ வழிகாட்டும். அறிஞர்களாகிய பார்ப்பார்களை ஆதரியுங்கள். நீங்கள் வீணாகப் போர் புரிந்து காலங் கழிக்காமல், சமாதானத்துடன் இருந்து உண்டு தின்று குடித்து மகிழுங்கள். வறுமையுள்ளோர் வாடாமல் அவர்களுக்கு உதவுங்கள்.

இவைகளே அவ்வையார் அரசர்களுக்கு எடுத்துக் கூறிய மூன்று செய்திகள். இப்பாடல் சிறந்த கருத்தும், கொள்கையும் கொண்டிருப்பதைக் காணலாம். இவை போலவே புறநானூற்றுப் பாடல்கள் பலவும் அமைந்திருக்கின்றன.

திருக்குறள்

அன்று முதல் இன்று வரை, மத, இன, மொழி வெறுப்பின்றி எல்லோராலும் போற்றப்படும் திருக்குறளை எடுத்துக் கொள்ளுவோம். திருக்குறள் ஒரு சிறந்த இலக்கியம். என்பதே பெரும் பாலார் கொள்கை; ஆதலால் அதை இலக்கியம் என்று வைத்துக் கொண்டே பார்ப்போம். அதில் கூறப்படும் அறங்கள் அனைத்தும் மக்கள் வாழ்வுக்கு வழிகாட்டுவதற்காகத்தான் என்பதை மறுப்பவர் யார்? திருக்குறளிலே சிறந்த கருத்துக்களும் கொள்கைகளும் அடங்கிக் கிடக்கின்றன என்பதில் ஐயம் இல்லை. அரிய கருத்துக்கள் பலவற்றை அள்ளி அள்ளித் தருவதனால்தான் திருக்குறள் உலகம் போற்றும் ஒப்பற்ற இலக்கியமாக விளங்குகின்றது.

திருக்குறளைப் பலரும் அறிவர். ஆதலால் அதிலிருந்து ஒரு உதாரணத்தை மட்டும் பார்ப்போம்.

ஆகுஆறு அளவுஇட்டிது ஆயினும் கேடில்லை

போகுஆறு அகலாக் கடை

”பொருள் வரும் வழிசிறியாக இருந்தாலும் பொருள் போகும் வழி அகலமாக இல்லாவிட்டால் அதனால் கெடுதியில்லை.”

இக்குறளிலே உள்ள கருத்து என்றும் அழியாமல் நிற்கும் உண்மையாகும். வருவாய் குறைவாக இருந்தாலும், செலவு மிகுதியாக இல்லா விட்டால் -”அதாவது வருவாய்க்குமேல் செலவாகா விட்டால் தீமை ஒன்றும் வந்து விடாது” என்பதுதான் இக்குறளின் கருத்து. வரவுக்குமேல் செலவு செய்யக் கூடாது என்று கூறும் இக்குறள் அறிவுரை கூறும் குறள் என்பதை யார் மறுக்க முடியும்? இவ்வாறே திருக்குறள் சிறந்த கருத்துக்களையும், கொள்கைகளையும் அறிவுறுத்துவதைக் காண்கிறோம்.

சிலப்பதிகாரம்

நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரத்தை எடுத்துக் கொள்ளுவோம். செந்தமிழ்ச் சிலப்பதிகாரம் சில கொள்கைகளை வலியுறுத்துவதற்காகவே தோன்றியது. அது நடந்த வரலாறா; கற்பனைக் கதையா? என்ற ஆராய்ச்சியைத் தள்ளி வைப்போம். அந்நூல் எழுதியதன் நோக்கத்தை மட்டும் காண்போம்.

சிலப்பதிகாரத்தில் பல கருத்துக்கள் காணப்படுகின்றன. பல அறிவுரைகள் அமைந்திருக்கின்றன. ஆயினும் முதன்மையாக, மூன்று கருத்துக்களை வலியுறுத்தவே அந்நூலை எழுதியதாகக் கூறப்படுகிறது.

அரசியலில் தவறு செய்த ஆட்சியாளர் தப்பித்துக் கொள்ள முடியாது; அறமே எமனாகத் தோன்றி அவரை அழிக்கும் என்பது ஒன்று. புகழ் பெற்ற பத்தினிப் பெண்டிரின் பெருமையை வானவர்களும் போற்றிக் கொண்டாடுவார்கள் என்பது இரண்டு.

பழவினையை மீற முடியாது; இதிலிருந்து தப்பித்துக் கொள்ள முடியாது. பழவினையென்னும் ஊழ்வினையானது முன்வந்து அதன் பயனை ஊட்டியே தீரும்; என்பது மூன்று.

இந்த மூன்று கருத்துக்களையும் வலியுறுத்தவே, சிலம்பு காரணமாக விளைந்த கதையைச் சிலப்பதிகாரம் என்ற பெயருடன் எழுதப்பட்டது. இந்த உண்மையைச் சிலப்பதிகாரப் பதிகத்திலேயே காணலாம்.

அரைசியல் பிழைத்தோர்க்கு

அறம் கூற்று ஆவதூஉம்,

உரைசால் பத்தினிக்கு

உயர்ந்தோர் ஏத்தலும்,

ஊழ்வினை உருத்துவந்து

ஊட்டும் என்பதூஉம்

சூழ்வினைச் சிலம்பு காரணமாங்

சிலப்பதிகாரம் என்னும்

பெயரால் நாட்டுதும் யாம் ஓர்

பாட்டு உளச் செய்யுள்

சிலப்பதிகார ஆசிரியர் இளங்கோவடிகளே பாடியதாக அமைந்திருக்கும் பதிகத்தில் உள்ள அடிகள் இவை.

ஆகவே, சிலப்பதிகாரம் சிலகொள்கைகளை கருத்துக்களை மக்களிடம் பரப்பத் தோன்றிய நூல் இலக்கியம் என்பதே மறுக்க முடியாது.

மணிமேகலை

மணிமேகலை என்னும் இலக்கியம் சிலப்பதிகாரத்தோடு கதைத் தொடர்புள்ளது. சிலம்பு பிறந்த காலத்திலேயே பிறந்தது. அதைப் படிப்போர் அது வலியுறுத்தும் கொள்கைகளைக் காண்பார்கள். புத்த தர்மத்தைப் போதிப்பதே மணி மேகலையின் நோக்கம்; எல்லா மதங்களையும் விட புத்த தர்மமே உயர்ந்தது என்பதை எடுத்துக் காட்டுவதே அதன் கொள்கை; இதை மணிமேகலையில் ஆதிமுதல் அந்தம் வரையிலும் காணலாம்.

”உலகில் உள்ள மக்கள் யாவரும் பட்டினி கிடத்தல் கூடாது; எல்லா மக்களும் உணவுண்டு இன்புற்று வாழவேண்டும்; மக்கள் யாரும் பட்டினிச் சாவுக்குப் பலியாகாமல் பாதுகாக்கப் படவேண்டும்; அறங்களிலே சிறந்தது பசியால் வாடுவோர்க்கு உணவளித்துப் பாதுகாப்பதுதான்; இக்கொள்கையை வலியுறுத்துகின்றது மணிமேகலை. அன்னதானம் என்னும் தர்மத்தின் பெருமையை விளக்கும் பல சிறு கதைகளும் மணிமேகலையில் காணப்படுகின்றன.

”மண்திணி ஞாலத்து வாழ்வோர்க்கெல்லாம்

உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே”

என்று புறநானூற்றில் கூறப்படும் அடிகளை அப்படியே மணிமேகலை ஆசிரியர் எடுத்துக் காட்டுகின்றார். இதன் மூலம், மக்களுக்கு உணவளித்துக் காத்தலே உலகைச் சமாதானத்துடன் வாழவைக்கும் வழி என்று வலியுறுத்துகின்றது மணிமேகலை. ஆகவே மணி மேகலையும், சிலப்பதிகாரத்தைப் போல கருத்துக்களையும், கொள்கைகளையும் அறிவுறுத்த எழுந்த இலக்கியந்தான் என்பதில் ஐயம் இல்லை.

கம்பராமாயணம்

இராமாயணத்தை எடுத்துக் கொள்ளுவோம்; கம்பன் காவியத்தைக் காண்போம். ”அறம் வெல்லும். பாவம் தோற்கும்” என்பது இராமாயணத்தின் மூலக் கொள்கை. இவ்வுண்மையை வலியுறுத்தவே இராமாயணம் எழுந்தது.

கம்பன் சந்தர்ப்பம் கிடைக்கும் இடங்களில் எல்லாம் தனது கருத்துக்களை வலியுறுத்திச் சொல்லுகின்றான். கம்பன் கவிச்சக்கரவர்த்தியென்பதில் யாருக்கும் கருத்து வேற்றுமையில்லை. கம்பராமாயணத்தைச் சுட்டுப் பொசுக்க வேண்டும் என்று சொல்லுகின்றவர்கள் கூட கம்பன் ஒப்பற்ற கவிஞன் என்பதை மறுப்பதில்லை.

”கள்வார் இலாமைப் பொருள்

காவலும் இல்லை யாதும்

கொள்வார் இலாமை

கொடுப்பார்களும் இல்லை

திருடர்களே இல்லை; ஆகையால் யாரும் தங்கள் செல்வங்களைப் பூட்டி வைத்துப் பாதுகாப்பதும் இல்லை. பிச்சை ஏற்பவர்கள் யாரும் இல்லை; ஆதலால் இரப்போர்க்கு ஈவாரும் இல்லை”.

”எல்லாரும் எல்லாப் பெரும்

செல்வமும் எய்தலாலே

இல்லாரும் இல்லை,

உடையார்களும் இல்லை”

எல்லா மக்களும் எல்லாப் பெரிய செல்வங்களையும் பெற்றிருக்கினர். ஆதலால் இல்லாத ஏழைகளும் இல்லை; செல்வம் படைத்த பணக்காரர்களும் இல்லை.

இவை நகரப்படலத்தில் கம்பன் சொல்லியிருப்பவை. அயோத்தியைக் கம்பன் கண்ணால் கண்டதில்லை. கம்பன் வாழ்ந்த காலத்தில் பாரத நாட்டின் எந்தப் பகுதியிலும் பொருளாதார சமத்துவம் இருந்ததில்லை. வர்க்க பேதமற்ற சமுதாயத்தில் தான் கம்பன் கூறும் நிலைமை இருக்க முடியும்., ஆதலால், கம்பன் தான் கொண்ட கருத்தை வலியுறுத்தவே இவ்வாறு கூறினான். பொருளாதாரத்தில் உயர்வுதாழ்வற்ற சமுதாயம் தோன்ற வேண்டும் என்பதே கம்பன் கருத்ததாகும்.

கம்பனைப் படிப்போர், இவ்வாறே அவன் பல இடங்களில் தன் கருத்தை வலியுறுத்திச் செல்வத்தைக் காண்பார்கள். ஒரு சிறந்த கவிஞன் தன்மையும் இதுதான்.

பக்திப் பாடல்கள்

தேவாரப் பாடல்களை எடுத்துக் கொண்டால் பக்தி மார்க்கத்தைப் பரப்புவதே அவற்றின் நோக்கம் என்பதைக் காணலாம். அறம் ஒன்றையே போதித்த புத்த சமணர்களின் போக்கை வெறுக்கும் பாடல்களையும், சிவ பெருமானைப் போற்றுவதாலேயே எல்லா இன்பங்களையும் பெறமுடியும் என்று வலியுறுத்தும் பாடல்களையும் தேவாரங்களிலே காணுகின்றோம். இலக்கியங்கள் என்று எண்ணப்படும் சைவ சமய நூல்கள் எல்லாம் சைவ சமயத்தைப் பரப்புவதையே குறிக்கோள்களாகக் கொண்டவை. தேவாரம், பெரியபுராணம் முதலியவைகளைப் படிப்போர் இவ்வுண்மையைக் காண்பர்.

இதைப்போலவே, பிரபந்தப் பாடல்களும் வைணவ சமயக் கொள்கைகளையும், திருமால் பக்தியையுமே மக்களுக்குக் கூறுகின்றன. வைணவ சமயத்தை வளர்ப்பதும், திருமாலைப் பணிந்து போற்றும்படி மக்களுக்கு அறிவுறுத்துவதுமே பிரபந்தப் பாடல்களின் அடிப்படைக் கருத்து.

உதாரணமாகப் பெரியாழ்வார் பாட்டு ஒன்றைக் காண்போம்.

மண்ணில் பிறந்து மண்ணாகும்

மானிடப்பேர் இட்டு அங்கு

எண்ணம் ஒன்று இன்றி

இருக்கும் ஏழை மனிசர்காள்

கண்ணுக்கு இனிய

கருமுகில் வண்ணன் நாமமே

நண்ணுமின் நராணன்தம்

அன்னை நரகம் புகான்.

என்பது பெரியாழ்வார் திருமொழி. ”குழந்தைகளுக்குக் கல், மண், மரம், பூ செடி, கொடிகளின் பெயர்களை வைக்க வேண்டாம்; தெய்வத்தின் பெயரை இட்டு அழையுங்கள்” இவ்வாறு தெய்வப் பெயர் வைத்துக் குழந்தைகளின் பெயரைச் சொல்லி அழைக்கும் அன்னை நரகம் புக மாட்டாள் என்று கூறுகிறது இச்செய்யுள்.

”தெய்வப் பெயர்களைச் சொல்லி அழைப்பதிலேயே நன்மையுண்டு. ஆதலால் குழந்தைகளுக்குத் தெய்வங்களின் பெயர்களை வைத்து அழையுங்கள்” என்று அறியுவுறுத்தும் கொள்கையும் அமைந்திருப்பதைக் காணுகின்றோம்.

இங்கே எடுத்துக்காட்டிய இச்சில உதாரணங்களே பண்டை இலக்கியங்களின் போக்கை அறியப்போதுமானவையாகும் பண்டைத் தமிழ் இலக்கியங்கள் எல்லாம் நம்மால் பாராட்டப்படும் பழந் தமிழ் நூல்கள் எல்லாம் கருத்தும் கொள்கையும் நிரம்பியிருப்பதனாலேயே சிறந்த இலக்கியங்களாக விளங்குகின்றன.

-டாக்டர் மு.வெங்கடாஜலபதி பி.எச்.டி.

நன்றி: சாமிசிதம்பரனாரின் இலக்கியச்சோலை

View previous topic View next topic Go down  Message [Page 1 of 1]

Permissions in this forum:
You cannot reply to topics in this forum

Style of Google. Code by SkinOne