குட்டிப்புலி படத்தின் பாடல் வெளியீட்டு விழா சன் டிவி ஒளிபரப்பானது. இந்த நிகழ்ச்சியில் குட்டிப்புலி படத்தில் நடித்த நடிகர்கள் சசிகுமார், லட்சுமி மேனன், சரண்யா பொன்வண்ணன், இயக்குநர் முத்தையா ஆகியோர் பங்கேற்றனர்.
பாடல் வெளியீட்டு விழாவில் சில சுவாரஸ்ய சம்பவங்கள் நடைபெற்றன. நடிகர்களுக்கு தாரை தப்பட்டையோடு வரவேற்பு கொடுத்து அசத்தியதோடு சுவாரஸ்யமாக கொண்டு சென்றனர் விழா குழுவினர்.
காதல் பரிசு:
படத்தின் சிறப்பை பற்றி பேசிய இயக்குநர் முத்தையா இந்தப் படம் காதலர்களுக்கான பரிசு என்றார். பாடல்களும் அசத்தலாய் வந்திருக்கிறது என்றார்
பாடி அசத்திய லட்சுமி மேனன்:
படம் வெளியாகும் முன்பே பாடல்கள் வெளியாகி ஹிட் ஆவது இயல்பு. அதே போல அருவாக்கார... பாடலைப் பாடி அசத்தினார் லட்சுமி மேனன்.
தப்பாட்டம் போட்ட சசி:
பாடல் வெளியீட்டு விழாவாக மட்டுமல்லாது ஆட்டம் பாட்டம் என அமர்களப்பட்டது. படத்தில் இடம் பெறும் தப்பாட்டத்தை மேடையில் ஆடி அசத்தினர். சசிகுமாரும், லட்சுமி மேனனும் உற்சாகமாய் தப்பு வாசித்தனர். அதோடு ஒரு குத்தாட்டமும் இடம் பெற்றது.
அம்மாவிற்கு மரியாதை:
அம்மாவாக நடித்த சரண்யா, படத்தில் தனக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளதாக கூறினார். என்னுடைய உண்மையான புள்ளை சசிகுமார் என்று நெகிழ்ந்தார்.
ஐஸ்வர்யா சென்டிமென்ட்:
திரைப்படத்தின் பாடல் வெளியீட்டு விழாவை தொகுப்பாளினி ஐஸ்வர்யான தொகுத்து வழங்கினால் கண்டிப்பாக சூப்பர் ஹிட் ஆகும் என்ற நம்பிக்கை இருக்கிறது. குட்டிப்புலி படத்தினையும் ஐஸ்வர்யா தொகுத்து வழங்கினார். அதோடு லட்சுமி மேனனுடன் அடுத்தடுத்து நடிப்பது ஏன் என்றும் கேட்டார்.
காதல் இல்லை காவல்:
இதற்கு பதில் சொன்ன சசிகுமார், லட்சுமி மேனன் மட்டுமல்ல சுவாதி, அனன்யா, அபிநயா போன்ற நாயகிகளுடன் இரண்டு படங்களில் நடித்திருக்கிறேன். என்னுடைய கதாநாயகிகள் நடிக்கும் போது பாதுகாப்பாக உணர்கிறார்கள். அடுத்தடுத்து ஒரே நாயகியுடன் இரண்டு படங்களில் நடிப்பது காதலில்லை காவல் என்றார். அதைக் கேட்டு சிரித்தார் லட்சுமி மேனன்.
பொறாமைப் பட்ட தனுஷ்:
குட்டிப்புலி படத்தின் ஆடியோவை நடிகர் தனுஷ் வெளியிட குட்டீஸ்கள் பெற்றுக் கொண்டனர். படத்தின் ட்ரெயிலரும் ஒளிபரப்பானது. அதைப் பார்க்கும் போது எனக்கு பொறாமையா இருக்கு என்றார் தனுஷ். ஜிப்ரானின் இசை அசத்தலாக இருக்கிறது என்றதோடு தரமான கமர்சியல் படம் என்று பாராட்டினார்.
பஞ்ச் டயலாக் சசி:
புலியண்ணே மதுரை வீரன் மட்டுமில்ல... இனி மதுரைக்கே வீரன்... வைராக்கியத்துக்கு பொறந்தவன்டா போன்ற பஞ்ச் டயலாக்கும் படத்தில் இடம்பெற்றுள்ளது. மீசையை நல்லா முறுக்குறீங்க சசி. படமும் அதே மாதிரி இருக்குமா என்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பு.
ஐஸ்வர்யா - லட்சுமி மேனன் நடனம்:
இறுதியில் லட்சுமி மேனன், தொகுப்பாளினி ஐஸ்வர்யா செம ஆட்டம் போட்டு நிறைவு செய்தனர். அடடா நிகழ்ச்சி சீக்கிரம் முடிஞ்சு போச்சே ஏன்? என்று நேயர்கள் கேட்டனர்.