சென்னை: எத்தனையோ பேர் இந்த சினிமாவில் பிரிந்திருக்கிறார்கள். சேர்ந்தோ சேராமலோ போயிருக்கிறார்கள்.
ஆனால் இந்த இருவரும் மீண்டும் சேர மாட்டார்களா என பல கோடி இசை ரசிகர்கள், சினிமா ஆர்வலர்கள் ஏங்கியது இளையராஜா - வைரமுத்து பிரிவுக்காகத்தான்!
பல நூறு தேன் சுவைப் பாடல்களைத் தந்த இந்த இசைக் கூட்டணியின் பிரிவு கிட்டத்தட்ட கால் நூற்றாண்டைக் கடந்து விட்ட நிலையில், இப்போது வேறு வகையில் ஒன்றுகூடியுள்ளது. வைரமுத்துவோடு இளையராஜா நேரடியாக இணையாவிட்டாலும், வைரமுத்து மகனும் இன்றைய முன்னணி பாடலாசிரியர்களுள் ஒருவருமான மதன் கார்க்கியுடன் இணைகிறார்.
மிஷ்கின் இயக்கும் ஓநாயும் ஆட்டுக்குட்டியும் படத்தில் இளையராஜா இசையில் பாடல்கள் எழுதும் வாய்ப்பைப் பெற்றுள்ளார் மதன் கார்க்கி. ஏற்கெனவே யுவன் சங்கர் ராஜா இசையில் பாடல் எழுதும் வாய்ப்பையும் பெற்றுள்ள மதன் கார்க்கிக்கு இது முற்றிலும் புதிய அனுபவமாக இருக்கும். இந்த புதிய கூட்டணி, பழைய கூட்டணியை திரும்ப உயிர்ப்பிக்கும் காரணியாக அமைய வாழ்த்துவோம்!