மும்பை: 15 வயது மாணவியை தன் உறவுக்கார இளைஞனுக்காக கடத்த முயன்றதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் தான் எங்கும் ஓடிவிடவில்லை என்றும், தொடர்ந்து படப்பிடிப்பில் நடித்து வருவதாகவும் சனாகான் தெரிவித்தார்.
பிரபல நடிகை சனா கான், தன் உறவுக்கார இளைஞன் ஒருவன் காதலிக்கும் மைனர் பெண்ணை கடத்த துணை போனார் என மும்பை போலீசில் அப்பெண்ணின் தாயார் சார்பில் புகார் தரப்பட்டுள்ளது. இந்த வழக்கில் போலீசார் சனா கானை தேடுவதாகவும், அவர் தலைமறைவாக இருப்பதாகவும் கூறப்பட்டது.
ஆனால் சனா கான் இதனை மறுத்துள்ளார். அவர் கூறுகையில், "நான் போலீசுக்கு பயந்து தப்பி ஓடியதாகக் கூறப்படுவது தவறு. தொடர்ந்து படப்பிடிப்புகளில் பங்கேற்று வருகிறேன். பல்வேறு நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வருகிறேன். மைனர் பெண்ணை நான் கடத்த முயன்றதாகக் கூறப்படுவதில் உண்மையில்லை. அந்த பெண்ணின் தாய் எனது ரசிகை என்றனர். அவர் என்னை சந்திக்க விரும்புவதாகவும் கூறப்பட்டது.
அவள் பின்னால் வருவதாகச் சொன்னாள். நான் எனது உறவுக்கார இளைஞனை பார்க்க போனபோது அவர்தான் ஐஸ்கிரீம் பார்லரில் இருந்த அப்பெண்ணை சந்திக்கும்படி வற்புறுத்தினார். உறவுக்காரருக்கும் அந்த பெண்ணுக்கும் பிரச்சினை இருந்திருந்தால் அந்தப் பெண் ஏன் என்னைச் சந்திக்க வரவேண்டும்.
அந்த கட்டிடத்தில் உள்ள சிசி டி.வி. கேமராவில் இவை எல்லாம் பதிவாகி இருக்கும். இன்னொன்னு, பெண்ணைக் கடத்துவது என் வேலையல்ல.. அதற்கான அவசியமும் இல்லை," என்றார்.