பாக்தாத்: கடந்த 15 வருடங்களாக தினம் ஒரு தேளை உயிரோடு கபளீகரம் செய்து வருகிறாராம் ஈராக் விவசாயி ஒருவர். கடந்த 15 வருடங்களாக வழக்கமாக சாப்பிட்டு வரும் இவரால் ஒருநாள் கூட தேள் சாப்பிடாமல் இருக்கமுடியாதாம்.
ஈராக்கை சேர்ந்த விவசாயி இஸ்மாயில் ஜசிம் முகமது (34). விவசாயம் செய்யும் சமயங்களில் பல பூச்சிகள் மற்றும் தேள்கள் இவரை கடித்ததுண்டாம். அவற்றை பழிவாங்கும் விதமாக அவற்றை பிடித்து இவரும் முதலில் கடிக்கத் துவங்கியுள்ளார். பின்னாளில் அதுவே வாடிக்கையாகி விட, இப்பழக்கத்திற்கு இஸ்மாயில் அடிமை ஆகி விட்டாராம்.
ஏறக்குறைய 15 வருடங்களாக தேள் சாப்பிட்டு வரும் இவரால், ஒரு நாள் கூட ‘தேள்' இல்லாமல் இருக்க முடியாதாம். தேள் கடியும் இவரை ஒன்றும் செய்தது இல்லையாம்.
இவர் தேளைக் கடித்தால், தேள் மட்டும் சும்மா விடுமா... அதுவும் பதிலுக்கு பலமுறை இவரது வாயை பதம் பார்த்துள்ளதாம். ஆனால், 'எனக்கு வலிக்கலியே' என வடிவேல் பாணியில் பதிலளிக்கிறார் இஸ்மாயில்.