ஆந்திர மாநிலம் ரங்காரெட்டி மாவட்டம் அமீர்பேட் ரியல் எஸ்டேட் நிறுவனத்தில் வேலை செய்தவர் ரிஸா (17) (பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது) இவரை சேலத்தைச் சேர்ந்த ஆஷா என்பவர் சினிமாவில் நடிக்க வைப்பதாகக் கூறி சேலத்திற்கு அழைத்து வந்துள்ளார்.
திருச்சி வந்ததும் சினிமாவில் நடிக்க வைப்பதாகக் கூறி ரிஸாவை மூன்று பேருக்கு அறிமுகம் செய்து வைத்தார். பின்பு கருமண்டபம் நியூ செல்வ நகரில் உள்ள ஒரு வீட்டில் ரிஸாவை அடைத்து வைத்து அந்த மூன்று பேரும் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். அவர்களிடம் இருந்து தப்பி அருகில் உள்ள ஒரு காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்தார் ரிஸா.
இதனையடுத்து இந்த சம்பவத்திற்கு காரணமாக இருந்த திருச்சி மாவட்டம் துறையூர் ஒன்றிய குழு தலைவரும், அதிமுக ஒன்றிய செயலாளருமான பொன்.காமராஜ் உள்ளிட்ட சிலர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். அதன் பேரில் போலீசார் நள்ளிரவு நேரத்தில் பொன்.காமராஜை கைது செய்தனர்.
பலாத்கார வழக்கில் கைது செய்யப்பட்டதால் பொன்.காமராஜை கட்சியில் இருந்து நீக்கி அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். மேலும், இந்த வழக்கில் தொடர்புடைய ஆஷா (24), வாழப்பாடியை சேர்ந்த கவிதா (20), திருப்பூர் அங்கேரிபாளையத்தை சேர்ந்த பிரபு (31), சக்திவேல் (34) மற்றும் வங்கதேசத்தை சேர்ந்த முகமது சபீதுல் (30) ஆகியோரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.