61-62 : முடிகெழு...............என்றாற்கு
(இதன்பொருள்) முடிகெழு வேந்தர் மூவர்க்கும் உரியது-அது கேட்டுப் பெரிதும் மகிழ்ந்து தமிழ்நாட்டு மூவேந்தர்க்கும் பொதுவுரிமையுடையதாகும் அன்றோ அடிகள் செய்யக்கருதிய அவ்வனப்பு நூல்; ஆகவே ஆர்வமும் செற்றமும் அகலநீக்கிய அடிகட்கு அச்செயல் பெரிதும் பொருந்துவதேயாகும். ஆதலால்; அடிகள் நீரே அருளுக என்றாற்கு - வினையினீங்கி விளங்கிய அடிகளாராகிய நீவிரே அந்நூலைச் செய்து இவ்வுலகிற்கருளுக என்று வழி மொழிந்து வேண்டிய அத்தண்டமிழ் ஆசான் சாத்தனார்க்கு என்க.
(விளக்கம்) இந்நிகழ்ச்சி நிரலே சோழநாட்டினும் பாண்டியனாட்டினும் சேரநாட்டினும் நிகழ்ந்தமையின் அடிகளார் இந்நிகழ்ச்சியைப் பொருளாகக் கொண்டியற்றும் நூல் மூன்று தமிழ்நாட்டிற்கும் பொதுவுரிமையுடையதாம் என்பார் முடிகெழு வேந்தர் மூவர்க்கும் உரியது என்றார். எனவே, இவ்வேண்டுகோள் தம்நாடு பிறர்நாடு என்னும் வேற்றுமையின்றி யாதும் ஊரே யாவரும் கேளிர் என்னும் கொள்கையோடு ஆர்வமும் செற்றமும் அகல நீக்கிய மெய்யுணர்வுடைய அடிகளார் செய்யின் அவ்விலக்கியம் எல்லார்க்கும் பெரும்பயன் விளைக்கும். ஏனைய எம்போல்வார் செய்வது அத்துணைப் பயனுடையதாகாது. ஆதலால், அடிகளாரே செய்தருளுக என்று அப்புலவர் பெருமான் அடிகளாரை வழிமொழிந்து ஊக்கியபடியாம்.
இனி, இவ்வாறன்றி அடியார்க்கு நல்லார் (62) என்றாற்கு - தான் பாடக் கருதி வினாவின சாத்தற்கு; அங்ஙனம் கூறாது இங்ஙனம் கூறினாரென்க. என் சொல்லியவாறேவெனின், - இச்செய்கின்ற காப்பியம் மூவேந்தர்க்கும் உரியது என்பதனால், ஏனையோரை இவர் புகழ்ந்துரையாராகலின் யாம் காப்பியம் செய்யக் கடவேமென்பது கருதிநீரே? அருளுக என ஏகாரப் பொருண்மை தோன்ற இது கருதி இது சொன்னாற்கு (உள்ளொன்று வைத்து அப்பொருள் குறிப்பாகப் புலப்படப் புறமொன்று சொன்ன சாத்தற்கு) அவன்(ர்?) கருதிய பொருளிற்கு (குறிப்புப் பொருளிற்கு) உடன்படாது சொல்லிற்கு (வெளிப்படையாகத் தோன்றும் பொருளிற்கு) உடன்பட்டார் என்பதாயிற்று என வுரைத்தனர். இவ்வுரை, நனிநாகரிகத்திற் கொவ்வாமை நுண்ணுணர்வாற் கண்டு கொள்க.
ஈண்டு இனித் தாம் வகுத்துக் கொண்டதனைக் கூறுவார் எனவரும் அடியார்க்கு நல்லார் உரையில் தாம் என்னும் பொதுப் பெயர் அடிகளாரைக் கருதிக் கூறப்பட்டது. அது பொருந்தாமை முன்னும் காட்டினோம்.
62- 90 : அவர் ..............மரபென்
(இதன்பொருள்) அவர் - அக்கண்ணகி கோவலருடைய மணத்தில் மகளிர் வாழ்த்திய; மங்கல வாழ்த்துப் பாடலும்......வரந்தரு காதையொடு இவ் ஆறு ஐந்தும்-மங்கல வாழ்த்துப் பாடல்முதலாக வரந்தரு காதையீறாக ஈண்டுக் கூறப்பட்ட முப்பதுறுப்புக்களையு முடைய இப்பொருட் டொடர்நிலைச் செய்யுளிலக்கியத்தை; உரை இடையிட்ட பாட்டுடைச் செய்யுள் - உரையிடையிட்ட செய்யுளும் பாட்டிடையிட்ட செய்யுளுமாக; உரைசால் அடிகள் அருள - புகழமைந்த இளங்கோவடிகளார் திருவாய் மலர்ந்தருளா நிற்ப; மதுரைக் கூலவாணிகன் சாத்தன் கேட்டனன் - மதுரைக் கூலவாணிகனான தண்டமிழாசான் இனிதே கேட்டு மகிழ்ந்தனன்; இது-இந்நூற்குப் புறவுறுப்பாகக் கூறப்பட்ட இது; பால்வகை தெரிந்த பதிகத்தின் மரபு-சிலப்பதிகாரம் என்னும் இவ்வனப்பு நூலின் உட்பகுதிகளையும் நூலும் நுவலுவோனும் உள்ளிட்ட பிறவகைகளையும் தெரிதற்குக் காரணமான பாயிரத்தின் இலக்கணம் பற்றிச் செய்து நூன்முகத்தே வைக்கப்பட்டது என்க.
(விளக்கம்) (62) அவர் என்றது கண்ணகியும் கோவலனுமாகிய இருவரையும். மங்கலம்-திருமணம். மங்கலவாழ்த்துக்காதை என்னாது பாடல் என்றது, இஃது இசையொடு புணர்த்துப் பாடுதற்கியன்ற உரு என்றறிவித்தற்கு. இக்காப்பியத்தை ஓதத் தொடங்குவோர் இசையினால் வாழ்த்துப் பாடித் தொடங்கவேண்டும் என்பது அடிகளார் கருத்தாகும். எனவே, இஃது இசைத்தமிழ் என்பது பெற்றாம். இவ் வாழ்த்துப் பாடலிலேயே இக்காப்பியக் கதை தோற்றுவாய் செய்யப்படுகின்றது. இதில் கதை நிகழ்ச்சியில்லை என்று அடியார்க்கு நல்லார் கூறுவது பொருந்தாது. இதன்கண் கதை தோற்றுவாய் செய்யப்படினும் இறைவனையும் கற்புடைத் தெய்வமாகிய கண்ணகியையும் வாழ்த்துவதே குறிக்கோளாதல்பற்றி அச்சிறப்பு நோக்கிக் காதை என்னாது பாடல் என்றே குறியீடு செய்தனர். இசைத் தமிழுக்கேற்ற வாரநடையும் கூடைநடையும் திரள் நடையுமாக இதனை அடிகளார் மிக அருமையாக அதற்கியன்ற மயங்கிசைக் கொச்சகக் கலியால் யாத்துள்ளனர். இதற்கியைந்த பண்வகுத்து இசைக் கருவிகளோடு இசைவாணர்கள் இசையரங்குகளிலே பாடினால் இப்பாடல் பேரின்பம் பயக்கும் என்பது எமது துணிபாம்.
(63-4) குரவர் - தாய் தந்தையர். மனையறம் - மனைக்கண்ணிருந்து செய்யும் விருந்தோம்பல் முதலிய அறங்கள். அவற்றை,
அறவோர்க் களித்தலும் அந்தண ரோம்பலும்
துறவோர்க் கெதிர்தலும் தொல்லோர் சிறப்பின்
விருந்தெதிர் கோடலும் (சிலப் - 16 : 71 - 3)
எனவரும் கண்ணகியார் கூற்றானுமுணர்க.
(64-5) நடநவின் மங்கை மாதவி - ஆடற்கலையை ஐயாண்டிற்றண்டியம் பிடித்து ஏழாண்டு அக்கலையை நன்குபயின்று ஆடலும் பாடலும் நிரம்பி எஞ்சிய அழகு நிரம்புகின்ற மங்கைப் பருவமெய்திய மாதவி என்றவாறு.
(67) ஊர் இந்திரவிழவு எடுத்த காதை என்க. ஊர் - புகார் நகரம்.
(66) மடலவிழ் கானல் என்புழி மடலவிழ் என்பது கானலுக்கு இயற்கையடை. வரி-இசைப்பாட்டில் ஒருவகை. அதனியல்பு அக்கானல் வரியில் விளக்கப்படும். இக்காதைக்கு இவ்விசைப்பாடல் சிறப்பாய் நிற்றலின் அதுவே பெயராயிற்று.
கானல்வரியில் கதை நிகழாமை யுணர்க என்னும் அடியார்க்கு நல்லார் உரை போலி.
(66-70) வேனில்....காதையும் என்பது வேனிற்காதை என்னும் பெயர்ப் பொருட்டாய் நின்றது.
(70-71) பின்னிகழும் தீங்கை யுணர்த்துதலையுடைய கனாத்திறம் என்க.
(71-2) வினாத்திறத்து நாடுகாண் காதை என்றது, அக்காதையின் கண் கண்ணகி மதுரை மூதூர் யாதென வினவுதலும் கவுந்தியடிகள் என்னோ? இங்ஙனம் கருதியது என வினவுதலும், வறுமொழியாளன் கவுந்தியடிகளாரை நொசிதவத்தீருடன் ஆற்று வழிப்பட்டோர் ஆர்? என வினவுதலும், மீண்டும் உடன்வயிற்றோர்கள் ஒருங்குடன் வாழ்க்கை கடவது முண்டோ? என்று வினவுதலும் எனப் பல்வேறு வினாக்களை யுடைமையைக் கருதி என்க.
(73) வேட்டுவ வரி - வேட்டுவ மகளாகிய சாலினி கொற்றவை கோலங்கொண்டு ஆடிய வரிக்கூத்தும் என்க. இதனைக் கோலச்சாரி என்பர் அடியார்க்குநல்லார். இது கூத்தாற் பெற்ற பெயர்.
(73-4) தோட்டலர் - தோட்டையுடைய அலர். தோடலர் தோட்டலர் என விகாரமெய்திற்றெனினுமாம். தோட்டலர் கோதை-அன்மொழித் தொகையாய்க் கண்ணகி என்னும் பெயர் மாத்திரையாய் நின்றது.
இறுத்தல் - தங்குதல்.
(73-5) கறங்கிசையூர் பல்வேறு ஒலிகளும் ஒலிக்கும் மூதூராகிய மதுரை என்க. ஊர் காண்காதைக்கண் அடிகளார்(1) புறஞ்சிறைப்பொழிலும் என்பது தொடங்கி (14) காலை முரசங்கனைகுரலியம்ப என்னுந் துணையும், அந்நகரத்தில் உண்டாகின்ற இசைகளை விதந்தோதுதலை யுட்கொண்டு ஈண்டு, கறங்கிசையூர் என்று அடைதொடுத்தபடியாம்.
(75-6) சீர் - சிறப்பு; புகழ் எனினுமாம். ஈண்டுப் பாயிரமுடையார் அடைக்கலக் காதைக்கண் என்னொடு போந்த இளங்கொடி நங்கைதன்.. பத்தினிப் பெண்டிர் இருந்த நாடு எனக் கவுந்தியடிகளார் கண்ணகியின் சிறப்பெல்லாம் மாதவிக்கு எடுத்தோதியதனையும் அவரே இளங்கொடி நங்கை எனக் கண்ணகியைச் சுட்டியதனையும் கருதிச் சீர்சால் நங்கை என்றோதினர். சீர் - அழகு என்னும் பொருட்டு எனினும் ஈண்டு ஆசிரியர் கருதியது அப்பொருளன்று என்க.
(77) ஆய்ச்சியர் - ஆயர்க்குப் பெண்பாற் கிளவி. ஈண்டு மாதரி முதலிய இடைக்குல மகளிர். இக்காதையும் கதை நிகழ்ச்சிக்குறுப்பாகவே நின்றது. ஆயினும் குரவைக்கூத்தே சிறந்து நிற்றலின், ஆய்ச்சியர் குரவை என்றார். எனவே, இது கூத்தாற் பெற்ற பெயர். குரவைக் கூத்தாவது
குரவை யென்பது கூறுங் காலைச்
செய்தோர் செய்த காமமும் விறலும்
எய்த வுரைக்கு மியல்பிற் றென்ப
எனவும்
குரவை யென்ப தெழுவர் மங்கையர்
செந்நிலை மண்டலக் கடகக் கைகோத்
தந்நிலைக் கொட்பநின் றாட லாகும் (அடியார்க் - மேற்கோள்)
எனவும் வரும் நூற்பாவானுணர்க. ஈண்டு ஆய்ச்சியரிடத்து நிகழ்தலின் ஆய்ச்சியர் குரவை எனப்பட்டது. மேலே குன்றத்தின்கண் நிகழ்ந்தது குன்றக் குரவை எனப்படுதலு முணர்க.
(77-
தீத்திறம் - தீய தன்மையுடையசொல். கேட்டது என்றதனாற் சொல் என்பது பெற்றாம். துன்பமாலை - துன்பத்தின் இயல்பு. மாலை - இயல்பு. இது தன்மையாற் பெற் பெயர்.
(78-9) நண்பகல் நடுங்கிய வூர் சூழ்வரியும் - இக்காதையை அடிகளார் பெரும்பான்மையும் நாடக வழக்கத்தாற் செய்திருத்தலின் இதுவும் கூத்தாற்பெற்ற பெயர் என்க. நடுங்கிய வூர் எனப் பெயரெச்சம் எனினும் அமையும். என்னை? கண்ணகியின் நிலைகண்டு அந்நகரமே நடுங்கியதாகலான் என்க.
(78-80) சீர்சால் வேந்தன் என்றார், தான் செய்த தவறு கண்டுழியே உயிர்விட்டான் ஆகலின். சீர் - ஈண்டு மானம் போற்றிய சிறப்பு என்க. இதனாலன்றோ அடிகளாரும்,
அரைசர் பெருமான் அடுபோர்ச் செழியன்
வளைகோல் இழுக்கத் துயிர்ஆணி கொடுத்தாங்கு
இருநில மடந்தைக்குச் செங்கோல் காட்டப்
புரைதீர் கற்பின் தேவி தன்னுடன்
அரைசு கட்டிலின் துஞ்சியது அறியார்
என அழற்படுகாதையில் உளமாரப் பாராட்டி யோதிய தூஉம் என்க.
(80) வஞ்சினமாலை-அஃதாவது : கண்ணகியார் பாண்டியன் முன் சென்று வழக்குரைத்த பொழுது அம்மன்னவன் வழக்கும் ஆருயிரும் ஒருங்கே தோற்ற பின்னரும் சினந்தணியப் பெறாமல் அம்மன்னவன் தேவியை நோக்கிக் கண்ணகி சூள் மொழிந்த தன்மையும் என்றவாறு. வஞ்சினமாவது இன்னது செய்யேனேல் இன்னவாறாகுவல் என்று இயம்புவது. இதுவும் தன்மையாற் பெற்ற பெயர்.
(81) அருந்தெய்வம் தோன்றி என்றது - மக்கள் காண்டற்கரிய இயல்புடைய மதுராபதி யென்னும் மாதெய்வம் கண்ணகியாரை இரந்து அழல் வீடு பெறுதற்பொருட்டு அவர் கண்காண எளிவந்து என்பதுபட நின்றது.
(82-3) மட்டு - தேன். கோதையர் ஈண்டுக் குறத்தியர். குன்றக்குரவை - குன்றத்துத் தெய்வமாகிய முருகவேளை நோக்கி ஆடிய குரவைக்கூத்து. மட்டலர் கோதை குன்றக் குரவை என்று பாட மோதிக் கோதை கண்ணகியெனக் கொண்டு கோதைக்குக் குன்றக் குறத்தியர் எடுத்த குரவை எனினுமாம். இதுவும் கூத்தாற் பெற்ற பெயர்.
(83) என்றிவை யனைத்துடன் என இவ்விருபத்து நான்கும் கண்ணகியார் வரலாறாகலின் ஒருகூறாக வகுத்தனர். மேல்வருவன சேரன் செங்குட்டுவன் செயலாகலின் அவற்றை வேறுபட வோதினர்.
(84-85) காட்சி கால்கோள் நீர்ப்படை நடுகல் வாழ்த்து வரந்தரு காதை எனவரும் ஆறு காதைகளுள் வைத்து இறுதியினின்ற வரந்தரு காதை ஒழிய ஏனைய காட்சி முதலிய ஐந்து காதைகளும் இளங்கோவடிகளார் பண்டைத் தமிழ்ச்சான்றோர் பொருணெறி மரபு பற்றி அந்நெறியிற் சிறிதும் பிறழாதவாறு செய்துள்ளனர். காட்சி முதலிய ஐந்தும் புறத்திணை ஏழனுக்கும் பொதுவாகிய துறைகளாம். இவற்றை, ஆசிரியர் தொல்காப்பியனார் புறத்திணையியலுள் (5) வெறியறி சிறப்பின் எனத் தொடங்கும் நூற்பாவின்கண்,
காட்சி கால்கோள் நீர்ப்படை நடுகல்
சீர்த்தகு சிறப்பிற் பெரும்படை வாழ்த்தலென்
றிருமூன்று வகையிற் கல்லொடு புணரச்
சொல்லப் பட்ட வெழுமூன்று துறைத்தே
என்றோதுத லறிக. இதற்கு, ஆசிரியர் நச்சினார்க்கினியர் இது.... .... புறத்திணைக்கெல்லாம் பொதுவாகிய வழுவேழும் உணர்த்துதல் நுதலிற்று என்று விளக்குதலும் உணர்க.
ஆசிரியர் தொல்காப்பியனார் போர்க்களத்தே அவிப்பலி செய்தல் விழுப்புண் பட்டுவீழ்தல் முதலியவற்றால் அறங்காத்தற் பொருட்டு உயிர்நீத்த மறவர்க்குக் கூறிய இத்துறைகள் கற்பென்னும் பேரறத்தி லொழுகி அதன் தெய்வத்தன்மையால் பாண்டியன் அரசவையேறி அவனொடு சொற்போர் தொடுத்து அரசனை வென்று நகர்தீமடுத்து விண்ணகம்புக்க கண்ணகியார்க்கும் நன்கு பொருந்துமென் றுட் கொண்டு இவற்றிற்கு அத்துறைப் பெயர்களையே நிறுவினர் என்றுணர்க.
இவற்றுள் காட்சி ஈண்டுக் கண்ணகித் தெய்வத்திற்குப் படிவம் செய்தற்குத் தகுந்த கல் இஃதாம் என்று ஆராய்ந்து கண்டது என்க.
அடியார்க்கு நல்லார், கற்காட்சியும் குறவர் பாகுடக் காட்சியும் என்க என்பர். ஈண்டுப் பாகுபடம் என்பது அரசிறை என்னும் பொருட்டு; கையுறை எனினுமாம். குறவர் கொணர்ந்த கையுறை அல்லது அரசிறை இக்காப்பியத்திற்குப் பொருளன்மையானும் ஏனைய துறைப்பெயரே யாதலானும் அப்பொருள் மிகைபடக் கூறலென்றொழிக. கற்காட்சி எனல் வேண்டியது கல் என்னும் சொல் தொக்கது. ஏனையவற்றிற்கும் இஃதொக்கும்.
(84) கால் கோள் - கல்லின்கண் படிவம் சமைக்கத் தொடங்குதல். ஈண்டுக் கால் கோள் என்பதற்குத் தொடங்குதல் என்னும் பொருளே கொள்க அடியார்க்கு நல்லார், கற்கோள் கால்கோள் என விகாரம் என்பர். இளங்கோவடிகளார் கற்கால் கோள் எனப் பல விடத்தும் வழங்குதலின் அவர் கருத்து அஃதன்றென்பது விளங்கும். ஆசிரியர் நச்சினார்க்கினியரும் கால்கோள் என்பதற்கு (தொல் புறத் 5) கல்லுறுத்து இயற்றுதற்குக் கால் கோடலும் எனவும், இது நட்டுக் கால் கொண்டது எனவும் ஓதுதலின் அவர் கருத்தும் அஃதன்றென்பது புலனாம்.
நீர்ப்படை - படிவமாகவைத்த கல்லை நீரில் மூழ்குவித்தல். இஃதொரு சடங்கு, குடமுழுக்குப் போன்று.
நடுதல் என்பது நடுகல் எனவும் நடுதற்காதை என்பது நடுகற் காதை எனவும் ஏடெழுதுவோராற் பிறழ எழுதப்பட்டன என நினைத்தற்கிடனுளது. ஆசிரியர் இளங்கோவடிகளார் கருத்தும் நடுதற் காதை என்பதற்கே பொருந்தும். பழைய உரையாசிரியர் இருவரும் நடுதற்காதை என்றே பாடங் கொண்டனர் என்று கருதவும் இடனுளது. தொல்காப்பியத்தில் நடுதல் என்றும், நடுகல் என்றும் பாட வேறுபாடு காணப்படுதலும் உணர்க.
எனவே, ஏனைய நான்கினும் கல் என்னும் சொல் தொக்கு நின்றாற் போலவே இதனினும் கல்நடுதல் என்பதில் அச் சொல் தொக்கு நின்றதாகக் கோடலே முறையாம். ஆராய்ந்து கொள்க.
(85) வாழ்த்து-கற்படிவமமைத்து நன்கலம் முழுவதும் பூட்டிப் பூப்பலி செய்து காப்புக் கடைநிறுத்தி வேள்வியும் விழாவும் நாள்தோறும் வகுத்துக் கடவுண் மங்கலம் செய்யப்பட்ட கண்ணகித் தெய்வம் விண்ணிடத்தே மின்னுக் கொடிபோல் கடவுள் நல்லணி காட்டிச் செங்குட்டுவனையும் நெடுஞ்செழியனையும் ஆங்கு வந்திருந்த ஏனைய அரசரையும் வாழ்த்தியது என்க. அடியார்க்குநல்லார் பெருங் கிள்ளியையும் என்பர். இஃது ஆராய்ச்சிக்குரியது.
(85) வரந்தருகாதை - அங்ஙனம் வாழ்த்திய தெய்வம் செங்குட்டுவன் முதலியோர்க்கு வரமருளிய காதையோடே என்க.
(86) மேலே (83) இவையனைத்துடன் ஈண்டுக் கூறப்பட்ட காட்சி முதலியனவும் வரந்தருகாதையோடு கூடிய (89) இவ்வாறைந்தும்- முப்பதும் என்றபடியாம்.
(87) உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுள் - நாடக வழக்கத்தால் உரைச் செய்யுள்களை இடையிடையே கொண்டுள்ளதும் நாடகத்திற்கும் இசைக்கும் உரிய பாடல்களையும் இயற்றமிழ்க்கேயுரிய செய்யுள்களையுமுடைய இக்காப்பியத்தை என்க.
(88) உரைசால் அடிகள் - புகழமைந்த அவ்விளங் கோவடிகளார் என்க.
(89) மதுரைக் கூலவாணிகன் சாத்தன் - இவர் மணிமேகலையென்னும் பெருங்காப்பியம் செய்த பெரும் புகழுடைய புலவராவார்.
இவரைச் சங்க நூல்களிற் காணப்படுகின்ற சீத்தலைச்சாத்தனார் என்பாரும் அவர் வேறு இவர் வேறு என்பாரும் இருதிறத்தார் உளர்.
(90) இது என்றது இதுகாறுங் கூறிய இப்பகுதி என்றவாறு. அஃதாவது நூன்முகத்தே நின்ற இவ்வுறுப்பு என்றவாறு.
பதிகத்தின் மரபினாற்செய்யப்பட்டது என்றவாறு. இப்பதிகம் அடிகளாரை யாண்டும் படர்க்கையிலேயே கூறுவதனால் இதனைச் செய்த சான்றோர் பிறர் என்பது தேற்றம். அவர் பெயர் முதலியன தெரிந்தில. அடிகளாரே இதனையும் செய்தவர் என்னும் கருத்தால் அடியார்க்கு நல்லார் கூறும் உரை பொருந்தா என்பது முன்னுங் கூறினாம், கடைப்பிடிக்க.
இனி, இதனை, சேரற்கும் அடிகட்கும் குறவர் குழீஇ வந்து வணங்கி போயது இறும்பூது இதனை நீ அறிந்தருள் என்று அரசனுக்குக் கூற அவனுழை யிருந்த சாத்தன் உரைப்போன் இவனென; வினைவிளைவு யாது என அரசன் வினவச் சாத்தன் விறலோய் கேட்டனன் யான் என ஆங்கு இவற்றைக் கேட்டிருந்த அடிகள் சாத்தனை நோக்கி யாம் இவற்றை உள்ளுறையாக்கிச் சிலப்பதிகாரம் என்னும் பெயரால் ஓர் பாட்டுடைச் செய்யுள் நாட்டுதும் எனச் சாத்தன் அடிகள் நீரே அருளுக என்றாற்கு மங்கல வாழ்த்து முதலாக வரந்தரு காதை யீறாகக் கிடந்த இவ்வாறைந்தும் அடிகள் அருளச் சாத்தன் கேட்டனன் இது பதிகம் என இயைத்திடுக.
இனி இதன்கண் - பதிகத்தின் மரபு வருமாறு:-
பொதுவும் சிறப்பும் எனப் பாயிரம் இருவகைப்படும் என்ப. அவற்றுள் இஃது இந்நூற்கேயுரிய சிறப்புப் பாயிரமாம். பாயிரம் பதிகம் ஒருபொருட் கிளவிகள்.
ஆக்கியோன் பெயரே வழியே எல்லை
நூற்பெயர் யாப்பே நுதலிய பொருளே
கேட்போர் பயனோ டாயெண் பொருளும்
வாய்ப்பக் காட்டல் பாயிரத் தியல்பே
எனவும்,
காலங் களனே காரணம் என்றிம்
மூவகை யேற்றி மொழிநரும் உளரே
எனவும் வரும் நன்னூற் சூத்திரங்களால் இப்பதிகத்தின் மரபு இவை என்றுணர்க.
இனி, இதனுள் நிரலே, குணவாயிற் கோட்டத்து அரசு துறந்திருந்த இளங்கோவடிகட்கு என்பதனால், இந்நூலாசிரியரின் சிறப்பும், பெயரும்; குன்றக் குறவர் கூடி... இறும்பூது போலும் அறிந்தருணீயென, அரசனுக்கு அறிவிப்ப அவனுழையிருந்த தண்டமிழ் ஆசான் சாத்தன் உரைப்போன்... கட்டுரை கேட்டனன் யானென அது கேட்ட அடிகள் அருள என்றதனால் வழியும் முடிகெழு மூவேந்தர்க்கும் உரியது என்றதனால் எல்லையும் சிலப்பதிகாரம் என்னும் பெயரால் என்றதனால் நூற்பெயரும் உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுள் என்றமையான் இம்முத்தமிழுக்குமுரிய இலக்கண முணர்வோர் இந்நூல் கேட்டற்குரியார் என யாப்பும் கேட்போரும் அரைசியல் பிழைத்தோர்க் கறங் கூற்றாவதூஉம் உரைசால் பத்தினிக்கு உயர்ந்தோர் ஏத்தலும், ஊழ்வினை உருத்து வந்தூட்டும் என்பதூஉம் என்றதனால் நுதலிய பொருளும் இம்மூன்று வாய்மைகளையும் இந்நூலின் வாயிலாய்த் தெரிவுறக் கேட்ட திருத்தகு நல்லோர், உள நாள் வரையாது ஒல்லுவ தொழியாது செல்லுந்தேயத்துக் குறுதுணை தேடுதல் தேற்றமாதல், யாமோர் பாட்டுடைச் செய்யுள் நாட்டுதும் என்று அடிகளார் கூறுதலாற் போதருதலின் பயனும், சேரல் இளங்கோ அடிகட்கு எனவே, அவ்வரசன் காலமே இந்நூல் தோன்றிய காலம் எனக் காலமும், நாட்டுதும் என்பதற்கு உலகிற்குப் பயன்படச் செய்து நிறுத்துவேம் என்பது பொருளாகலின் அடிகளார் மக்கள்பால் வைத்த அருளே இது செய்தற்குக் காரணம் எனக் காரணமும், அடிகள் அருளக் கூலவாணிகன் சாத்தன் கேட்டனன் என்றதனால் அத்தண்டமிழாசான் தலைமை வகித்த சான்றோர் அவைக்களமே இந்நூல் அரங்கேறிய களம் எனக் களமும் ஆகிய பாயிரப் பொருள் பதினொன்றும் போந்தமையுணர்க.
செய்யுள்-சூட்டச் செந்தூக்கு: (அஃதாவது இடையிடையே குறளடியும் சிந்தடியும் விரவி ஈற்றயலடி மூச்சீர்த்தாய் முடிந்த ஆசிரியப்பா என்றவாறு.)
பதிகம் முற்றிற்று.