53-61: மாயிரும்பீலி ............ ஒருவாவாயின
(இதன்பொருள்) (55) நல்நுதால் - அழகிய நுதலையுடையோய்; மா இரும் பீலி மணி நிற மஞ்ஞை - கரிய பெரிய தோகையினையும் நீலமணிபோன்ற நிறத்தையும் உடைய மயில்கள்; நின் சாயற்கு இடைந்து தண் கான் அடையவும் - நின் சாயலுக்குத் தோற்று இழிந்த காட்டிடத்தே போய் ஒடுங்கா நிற்பவும்; அன்னம் மெல் நடைக்கு அழிந்து - அன்னங்கள் தாமும் நினது மெல்லிய நடையழகிற்குத் தோற்று; நல் நீர்ப்பண்ணை நளிமலர்ச் செறியவும் - தூய நீர் பொருந்தின கழனிகளிடத்தே அடர்ந்த தாமரை மலர்களினூடே புக் கொடுங்கா நிற்கவும்; மடநடைமாது - மடப்பங்கெழுமிய நடையினையுடைய மாதே!; சிறு பசுங்கிளிதாமே அளிய நின்னோடுறைகின்ற சிறிய இப்பசிய கிளிகள் மாத்திரமே நின்னால் அளிக்கற்பாலனவாயின காண்; எற்றுக்கெனின்; குழலும் யாழும் அமிழ்தும் குழைத்த நின் மழலைக் கிளவிக்கு வருந்தின ஆகியும் - வேய்ங் குழலின் இசையினிமையையும் யாழின் இசையினது இனிமையையும் அமிழ்தினது சுவைதரும் இனிமையையும் கலந்து குழைத்தா லொத்த இனிமையையுடைய நின் மழலை மொழியினைக் கேட்டு அவற்றைத் தாமும் கற்றற்குப் பெரிதும் விரும்பி, வருத்தமுடையனவாகியும்; நின் மலர்க்கையின் நீங்காது உடன் உறைவு மரீஇ ஒருவா ஆயின-நின்னுடைய செந்தாமரைபோன்ற அழகிய கையிலிருந்து விலகாமல் நின்னோடு வதிதலைப் பொருந்திப் பிரியாவாயின ஆதலாற்காண்! என்றான் என்க.
(விளக்கம்) மாயிரு என்பது கோயில் என்பதுபோல யகரவுடம்படு மெய் பெற்றது. இதனைப் புறனடைவிதியாலமைத்துக் கொள்க. மா - கருமை. இருமை - பெருமை. மணி - நீலமணி. சாயல் - மென்மை. அஃதாவது நாயும் பன்றியும் போலாது, மயிலும் குயிலும் போல்வதொரு தன்மை என்பர் இளம்பூரணர். இதனை, நாட்டிய மரபின் நெஞ்சு கொளின் அல்லது காட்டலாகாப் பொருள் என்பர் தொல்காப்பியனார் (பொருளியல்-51.) ஐம்பொறியால் நுகரும் மென்மை என்பர் நச்சினார்க்கினியர். ஐம்பொறியானும் நுகரப்படும் ஒண்டொடியார் பால் அஃது எஞ்சாமற் காணப்படும். இதற்கு மயில் ஒருபுடையே அவர்க்கு ஒப்பாகும் என்க. ஈண்டுக் கோவலன் ஐம்பொறியானும் கண்ணகியார்பால் நுகர்ந்த இன்பத்திற்கு வேறுவமையின்மையால், மயிலும் நின் சாயற்கு இடைந்தது என்கின்றான். தண்கான் என் புழித் தண்மை - இழிவு என்னும் பொருட்டு. அஃதப்பொருட்டாதல் பிங்கலந்தை (3607) யிற் காண்க. பண்ணை - கழனி. செறிதல் - புக் கொடுங்குதல். ஒடுங்க வேண்டுதலின் நளிமலர் எனல் வேண்டிற்று. நளி-செறிவு.
இனி குழலும் யாழும் அமிழ்துங்குழைத்த மழலைக் கிளவி என நிகழும் தொடரின்கண் தமிழ் மொழிக்குச் சிறப்பெழுத்தாகிய ழகர, வொலிமிக்கு மொழி யின்பம் பெரிதும் மிகுதலுணர்க. இஃது இல்பொருள் உவமை. கரும்புந் தேனு மமுதும் பாலுங்கலந்த தீஞ்சொல் எனத் திருத்தக்க தேவரும் ஓதுதல் (2438) உணர்க. இனி, குழல் முதலியவற்றைக் குழைத்த (வருத்திய) எனினுமாம். நன்னுதல், மாது என்பன விளி. இவை நன்னுதால் எனவும் மாதே எனவும் ஈற்றயல் நீண்டும் ஏகாரம் பெற்றும் விளியேற்கும்.
இனி, மயிலும் அன்னமும் இடைந்தும் அழிந்தும் தாமுய்யுமிடம் நாடிச் சென்றன. மற்று இச்சிறு கிளிகள் நின் மழலை கேட்டு அழுக்காறு கொள்ளாமல் அவற்றைக் கற்கும் பொருட்டு நின்பால் உடனுறைவு மரீஇ ஒருவா ஆயின; ஆகவே நின்னைப் புகலாகக் கொண்ட அவற்றை அளித்தல் நின்கடன் என்றவாறு. அளியகிளி தாமே என மாறி ஈற்றினின்ற ஏகாரம் பிரிநிலை என்க. தாம் அசைச்சொல். கிளிகள் தம்மனம் போனவாறு பறந்துதிரிதலை விட்டுக் கற்றற்பொருட்டு அடங்கியிருந்தலின் வருந்தினவாகியும் என்றான் என்க. என்னை? கல்வி தொங்குங் காற்றுன்பந் தருமியல்பிற் றென்பது முணர்க. இங்ஙனம் கூறாமல் மழலைக் கிளவிக்குத் தோன்றனவாயும் என்னும் அடியார்க்கு நல்லார் உரை அவை உடனுறைவுமரீஇ ஒருவா வாதற்குச் சிறவாமை நுண்ணுணர்வாற் கண்டுகொள்க. கண்ணகியார் வளர்க்குங் கிளி பலவாகலின் பன்மை கூறினான்.
62 - 64: நறுமலர் .......... எவன்கொல்
(இதன் பொருள்) நறுமலர்க் கோதை - நறுமணமுடைய மலர் மாலையையுடையோய்; நின் நலம் பாராட்டுநர் - நினது அழகுக்கு ஒப்பனையால் அழகு செய்கின்ற நின் வண்ணமகளிர்; மறு இல் மங்கல அணியே அன்றியும் - குற்றமற்ற நின்னுடைய இயற்கை யழகே அமைவதாகவும் அதனை யல்லாமலும்; பிறிது அணி அணியப் பெற்றதை எவன் கொல் - அவ்வழகை மறைக்கின்ற வேறு சில அணிகலன்களை நினக்கு அணிவதனாலே பெற்ற பயன்தான் யாதோ? என்றான் என்க.
(விளக்கம்) எனவே, அவர் பயனில செய்யும் பேதையரே ஆதல் வேண்டும் என்றான் என்க. இதனோடு,
அமிழிமைத் துணைகள் கண்ணுக் கணியென வமைக்குமா போல்
உமிழ்சுடர்க் கலன்க ணங்கை யுருவினை மறைப்ப தோரார்
அமிழ்தினைச் சுவைசெய் தென்ன வழகினுக் கழகு செய்தார்
இமிழ்திரைப் பரவை ஞாலம் ஏழைமை யுடைத்து மாதோ!
எனவரும் கம்பநாடர் செய்யுள் நினையற்பாலதாம். (கோலங் -3)
கோதை-விளி. மங்கலவணி-இயற்கையழகு. மாங்கலிய மென்பாருமுளர் என்பர் அடியார்க்கு நல்லார். எவன்-யாது.கொல்: அசை.
65 - 66 : பல்லிருங்கூந்தல் ................ என்னுற்றனர் கொல்
(இதன் பொருள்) பல் இருங்கூந்தல் சில் மலர் அன்றியும் - ஐம்பாலாகக் கை செய்யப்படும் நினது கரிய கூந்தலில் மங்கலங்கருதி அதற்குரிய மலர் சிலவற்றைப் பெய்தமையே அமைவதாக அவற்றை யல்லாமலும்; எல் அவிழ் மாலையொடு என் உற்றனர் கொல்-ஒளியோடு மலருகின்ற இந்த மலர்மாலைகள் அக் கூந்தலின்கண் நின்னிடைக்குப் பொறையாக அணிதற்கு அவற்றோடு அவர்கள் எத்தகைய உறவுடையரோ, அறிகின்றிலேன் என்றான் என்க.
(விளக்கம்) இம்மாலைகள் நினது கூந்தலின் இயற்கையழகை மறைப்பதோடல்லாமல் நின் சிற்றிடைக்குப் பெரும் பொறையுமாம் என்பது நினையாமல் நின்றலையின்மேல் அவற்றை ஏற்றுதலால் அவற்றோடு அவர்க்கு உறவுண்டு போலும் என்றவாறு. என்னை? உறவினரை மேலேற்றி வைத்தல் உலகியல்பாகலின் அங்ஙனம் வினவினன் என்க.
சில்மலர் என்றது மங்கலமாக மகளிர் அணியும் கற்புமுல்லை முதலியவை. சீவக சிந்தாமணியில் தேந்தாமம் என்று தொடங்குஞ் செய்யுளில் (680) முல்லைப் பூந்தாமக் கொம்பு என்பதற்கு ஆசிரியர் நச்சினார்க்கினியர் முல்லை கற்பிற்குச் சூட்டிற்று எனவும் சீவக செய்யுள் 624-ல் முல்லைச் சூட்டுவேய்ந்தார் என்பதற்கு முல்லைச் சூட்டைக் கற்பிற்குத் தலையிலே சூட்டி என்றும் உரை கூறுதலுமுணர்க. சின்மலர் - அருச்சனை மலருமாம் என்பர் அடியார்க்கு நல்லார்.
67-68: நான ............. எவன்கொல்
(இதன் பொருள்) நானம் நல் அகில் நறும்புகை அன்றியும் - அவ்வண்ணமகளிர் நினது பல்லிருங்கூந்தலுக்கு நெய்யையுடைய சிறந்த அகிற்புகையை ஊட்டுதலே அமைவதாகவும் அதனை யல்லாமலும்; மான்மதச் சாந்தொடு வந்ததை எவன்கொல் - கத்தூரியையும் அணிதற்கு அதன்பால் அவர்க்கு உண்டான கண்ணோட்டத்திற்குக் காரணம் யாதோ? என்றான் என்க.
(விளக்கம்) நானம் - நாற்றமுமாம்; திருந்து தகரச் செந்நெருப்பில் தேன் தோய்த்து அமிர்தம் கொளவுயிர்க்கும் கருங்காழ் அகிலின் நறும்புகை என்பான் (சிந்தா - 346) நல்லகில் நறும்புகை என்றான். அதற்குப் பொறையின்மையின் அஃது அமையும் என்பது கருத்து. மான்மதம்-கத்தூரி. வந்ததை என்புழி ஐகாரம் சாரியை. மான்மதத்தைச் சிறந்த இடத்தில் வைத்தலால் வந்தது என்னும் வினையாலணையும் பெயர் கண்ணோட்டம் என்பது தகுதியாற் கொள்ளப்பட்டது.
69-70 : திருமுலை ............ எவன்கொல்
(இதன்பொருள்) திருமுலைத் தடத்திடைத் தொய்யில் அன்றியும் - அவர்தாம், நினது அழகிய முலைப்பரப்பின் மேல் தொய்யில் எழுதுதலே மிகையாகவும் அதனை யல்லாமலும்; முத்தம் ஒரு காழொடு உற்றதை எவன்கொல் - முத்தாலியன்ற தனி வடத்தையும் பூட்டிவிட்டமைக்கு அதனோடு அவர்க்குண்டான உரிமைதான் யாதோ? என்றான் என்க.
(விளக்கம்) திரு என்பதற்கு அடியார்க்கு நல்லார் முலைமேல் தோன்றும் வீற்றுத் தெய்வம், எனப் பொருள் கொண்டனர். சிந்தாமணியில் (171) ஆமணங்கு குடியிருந்தஞ்சுணங்கு பரந்தனவே எனத் திருத்தக்க தேவர் ஓதுதலும், அதற்கு ஆசிரியர் நச்சினார்க்கினியர் தம் மேலுறையும் வீற்றுத் தெய்வம் இருப்பிடமாக விருக்கப்பட்டுச் சுணங்கு பரந்தன என உரை விரித்தலும் காண்க. அஃதாவது வேறொன்றற் கில்லாத கவர்ச்சியையுடைய அழகைத் தருவதொரு தெய்வம் என்றுணர்க. காழ்-வடம்.
71-72: திங்கள் ......... என்னுற்றனர் கொல்
(இதன் பொருள்) திங்கள் முத்து அரும்பவும் சிறுகு இடை வருந்தவும்- அந்தோ நின்னுடைய பிறைபோன்ற நுதலின்கண் வியர்வைத் துளிமுத்துக்கள் போன்று அரும்பா நிற்பவும் நுண்ணிடை வருந்தா நிற்பவும் இங்கு இவை அணிந்தனர் - இங்குக் கூறப்பட்ட பிறிதணி முதலிய இவற்றைப் பொறையின் மேல் பொறையாக அணிந்துவிட்ட அவ்வண்ணமகளிர்; என் உற்றனர் கொல் - என்ன பேய் கொண்டனரோ? என்றான் என்க.
(விளக்கம்) திங்கள், முத்து என்பன சொல்லுவான் குறிப்பினால் முகம் என்றும் வியர்வென்றும் பொருள்படுதலால் இவற்றைக் குறிப்புவமை என்ப; இவற்றைப் பிற்காலத்தார் உருவகம் என்று வழங்குப.
மங்கல வணியும் சின்மலரும் அகிற்புகையும் தொய்யிலும் ஆகிய, இவையே பொறையாக இவற்றைச் சுமக்கலாற்றாது திங்கள் முத்தரும்பவும் இங்கு இவைகண்டு வைத்தும் மேலும் பொறையாகப் பிறிதணியும் மாலையும் சாந்தும் முத்தும் அணிந்தாராகலின் அவர் பேயேறப் பெற்றவரேயாதல் வேண்டும் என்பது கருத்து.
என்னுற்றனரோ என்பதற்கு என்ன பித்தேறினார் எனினுமாம்.
73-81 : மாசறுபொன்னே ............ பாராட்டி
(இதன் பொருள்) மாசு அறு பொன்னே - குற்றமற்ற பொன்னை ஒப்போய்! என்றும்; வலம்புரி முத்தே - வலம்புரிச் சங்கீன்ற முத்தை ஒப்போய்! என்றும்; காசு அறு விரையே - குற்றமற்ற நறுமணம் போல்வோய்! என்றும்; கரும்பே - கரும்பை ஒப்போய்! என்றும்; தேனே - தேன்போல்வோய்! என்றும்; அரும்பெறல் பாவாய்-பெறுதற்கரிய பாவை போல்வோய்! என்றும்; ஆர் உயிர் மருந்தே - மீட்டற்கரிய உயிரை மீட்டுத் தருகின்ற மருந்து போல்வோய்! என்றும்; பெருங்குடி வாணிகன் பெருமடமகளே - உயர்ந்த குடிப்பிறப்பாளனாய வாணிகர் பெருமகன் செய்தவத்தாற் பிறந்த மாண்புமிக்க இளமையுடைய நங்காய்! என்றும் (ஒருவாறு உவமை தேர்ந்து பாராட்டியவன்; பின்னர் அவள் நலத்திற்குவமை காணமாட்டாமல்) தாழ் இருங்கூந்தல் தையால் நின்னை-நீண்ட கரிய கூந்தலையுடைய தையலே நின்னை யான்; மலையிடைப் பிறவா மணியே என்கோ! மலையின் கட் பிறவாத மணி என்று புகழ்வேனோ? அலையிடைப் பிறவா அமிழ்தே என்கோ - அல்லது, திருப்பாற்கடலிலே பிறந்திலாத அமிழ்தமே என்று புகழ்வேனோ? யாழ் இடைப் பிறவா இசையே என்கோ - அல்லது, யாழின்கட் பிறந்திலாத இசையே என்று புகழ்வேனோ? என்று உலவாக் கட்டுரை பல பாராட்டி - எனச் சொல்லித் தொலையாத அக்கண்ணகியின் நலங்களைப் பொருள் பொதிந்த மொழிகள் பலவற்றாலே புகழ்ந்து என்க.
(விளக்கம்) (46) தீராக்காதலாலே முகம் நோக்கி, குறியாக் கட்டுரை கூறும் கோவலன் பெரியோன் தருக என்றும், உருவிலாளன் ஈக்க என்றும், அறுமுக வொருவன் ஈத்தது இறுமுறை காணும் இயல்பினின் அன்றே என்றும் மஞ்ஞை கான் அடையவும் அன்னம் மலர்ச் செறியவும் கிளி ஒருவா ஆயின ஆதலால் அளிய என்றும் கோதாய்! நின் நலம் பாராட்டுநர் பிறிதணியை அணியப் பெற்றதை எவன்? என்றும், மாலையொடு என்னுற்றனர் என்றும், சாந்தொடு வந்ததை எவன்? என்றும், முத்தொடுற்றதை எவன் என்றும், இவை அணிந்தனர் என்னுற்றனர் என்றும், பொன் முதலியன போல்வோய் என்றும், மகளே என்றும், மணியே என்கோ? அமிழ்தே என்கோ? இசையே என்கோ? எனவும், உலவாக் கட்டுரை பலவற்றானும் கண்ணகியின் நலத்தைப் பாராட்டி என்றியையும்.
இனி, (74) கண்ணுக்கு இனிமை பயத்தல் கருதி மாசறு பொன் என்றும், ஊற்றின்பம் கருதியும் மரபின் தூய்மை கருதியும் வலம்புரி முத்து என்றும், உயிர்ப்பின் இனிமை கருதி விரையென்றும், சுவையின்பங் கருதிக் கரும்பென்றும், மொழியின்பம் கருதித் தேன் என்றும் பாராட்டினன் எனவும், இவற்றாற் சொல்லியது ஒளியும் ஊறும் நாற்றமும் சுவையும் ஓசையுமாகலின் கண்டு கேட்டுண்டுயிர்த் துற்றறியும் ஐம்புலனும் ஒண்டொடி கண்ணே யுள (குறள்-1101) என நலம் பாராட்டப்பட்டன என்பது அடியார்க்கு நல்லார் கருத்தாகும்.
இனி, கண்ணகியின் பால் தானுகர்ந்த ஐம்புல வின்பங்களையும் கருதி அவற்றிற்குத் தனித்தனியே உவமை தேர்ந்து கூறியவன் அவற்றிற்கு அவ்வுவமைகள் உயர்ந்தன வாகாமல் தான் கூறும் பொருள்களே சிறந்தன என்னுங் கருத்தினால், பிறிதோராற்றால் அந்நலங்களைப் பாராட்டத் தொடங்கி அரும்பெறல் பாவாய் என்றும், ஆருயிர் மருந்து என்றும், பெருங்குடி வாணிகன் பெருமட மகளே என்றும், பாராட்டினன். இவற்றுள், கட்கினிமை பயத்தலின் முன்பு மாசறு பொன் என்றவன், காணுமளவிலே தன்னுள்ளம் மயக்குற்றமை கருதி அத்தன்மை பொன்னுக்கின்மையால் அங்ஙனம் மயக்குறுத்தும் கொல்லிப்பாவையே என்றான் என்க. அவ்வாறு மயங்கி அழியுமுயிரைத் தன்கண் களவு கொள்ளும் சிறு நோக்கினால் பெரிதும் தழைப்பித்தலின் ஆர் உயிர் மருந்தே என்றான், என்க. மருந்து மிருதசஞ்சீவினி என்பர், அடியார்க்கு நல்லார். கட்பொறிக்கேயன்றி ஏனைப்பொறிகட்கும் இன்பம் பயத்தலின் மலையிடைப் பிறவாமணி என்பேனோ என்றான் என்க. மணி குழையாமையின் அங்ஙனம் கூறினன் என்பர் அடியார்க்கு நல்லார். இனி, உண்டார்கண் அல்லது அலையிடைப் பிறக்கும் அமிழ்து கண்டார்க்கும் தீண்டினார்க்கும், கழிபேரின்பம் நல்குதலின்மையின் அதிற்பிறவா அமிழ்தே என்பேனோ என்றான் என்க. ஈண்டு உறுதோ றுயிர் தளிர்ப்பத் தீண்டலால் பேதைக்கு, அமிழ்தி னியன்றன தோள் எனவரும் திருக்குறளையும் (1106) அதற்கு ஆசிரியர் பரிமேலழகர் தோள்கள் தீண்டப்படுவதோர் அமிழ்தினாற் செய்யப்பட்டன என உரைகூறுதலும் காண்க. அமிழ்திற்கு வடிவின்மையின் இங்ஙனம் கூறினன் என்பாருமுளர்.