(நிலைமண்டில ஆசிரியப்பா)
அஃதாவது - கண்ணகியும் கோவலனும் இல்லறம் நிகழ்த்தி வருங்காலத்தே புகார் நகரத்தே புகழ்மிக்க நாடகக் கணிகையாகிய மாதவி ஆடற்கலை பயின்று அரசன் முன்னிலையில் அரங்கேறிக் காட்டிய செய்தியையும் அவள் ஆடலினும் பாடலினும் அழகினு மயங்கிய கோவலன் அவளுடைய கேண்மையைப் பெற்ற செய்தியையும் கூறும் பகுதி என்றவாறு.
தெய்வ மால்வரைத் திருமுனி அருள
எய்திய சாபத்து இந்திர சிறுவனொடு
தலைக்கோல் தானத்துச் சாபம் நீங்கிய
மலைப்புஅருஞ் சிறப்பின் வானவர் மகளிர்
சிறப்பிற் குன்றாச் செய்கையொடு பொருந்திய 5
பிறப்பிற் குன்றாப் பெருந்தோள் மடந்தை
தாதுஅவிழ் புரிகுழல் மாதவி தன்னை
ஆடலும் பாடலும் அழகும் என்றுஇக்
கூறிய மூன்றின் ஒன்றுகுறை படாமல்
ஏழாண்டு இயற்றிஓர் ஈராறு ஆண்டில் 10
சூழ்கடல் மன்னற்குக் காட்டல் வேண்டி,
இருவகைக் கூத்தின் இலக்கணம் அறிந்து
பலவகைக் கூத்தும் விலக்கினிற் புணர்த்துப்
பதினோர் ஆடலும் பாட்டும் கொட்டும்
விதிமாண் கொள்கையின் விளங்க அறிந்துஆங்கு 15
ஆடலும் பாடலும் பாணியும் தூக்கும்
கூடிய நெறியின கொளுத்துங் காலைப்
பிண்டியும் பிணையலும் எழிற்கையும் தொழிற்கையும்
கொண்ட வகைஅறிந்து கூத்துவரு காலைக்
கூடை செய்தகை வாரத்துக் களைதலும் 20
வாரம் செய்தகை கூடையிற் களைதலும்
பிண்டி செய்தகை ஆடலிற் களைதலும்
ஆடல் செய்தகை பிண்டியிற் களைதலும்
குரவையும் வரியும் விரவல செலுத்தி
ஆடற்கு அமைந்த ஆசான் தன்னொடும், 25
யாழும் குழலும் சீரும் மிடறும்
தாழ்குரல் தண்ணுமை ஆடலொடு இவற்றின்
இசைந்த பாடல் இசையுடன் படுத்து
வரிக்கும் ஆடற்கும் உரிப்பொருள் இயக்கித்
தேசிகத் திருவின் ஓசை கடைப்பிடித்துத் 30
தேசிகத் திருவின் ஓசை எல்லாம்
ஆசுஇன்று உணர்ந்த அறிவினன் ஆகிக்
கவியது குறிப்பும் ஆடல் தொகுதியும்
பகுதிப் பாடலும் கொளுத்துங் காலை
வசைஅறு கேள்வி வகுத்தனன் விரிக்கும் 35
அசையா மரபின் இசையோன் தானும்,
இமிழ்கடல் வரைப்பில் தமிழகம் அறியத்
தமிழ்முழுது அறிந்த தன்மையன் ஆகி
வேத்தியல் பொதுவியல் என்றுஇரு திறத்தின்
நாட்டிய நன்னூல் நன்கு கடைப்பிடித்து 40
இசையோன் வக்கிரித் திட்டத்தை உணர்ந்துஆங்கு
அசையா மரபின் அதுபட வைத்து
மாற்றார் செய்த வசைமொழி அறிந்து
நாத்தொலைவு இல்லா நன்னூல் புலவனும்,
ஆடல் பாடல் இசையே தமிழே 45
பண்ணே பாணி தூக்கே முடமே
தேசிகம் என்றுஇவை ஆசின் உணர்ந்து
கூடை நிலத்தைக் குறைவுஇன்று மிகுத்துஆங்கு
வார நிலத்தை வாங்குபு வாங்கி
வாங்கிய வாரத்து யாழும் குழலும் 50
ஏங்கிய மிடறும் இசைவன கேட்பக்
கூர்உகிர்க் கரணம் குறிஅறிந்து சேர்த்தி
ஆக்கலும் அடக்கலும் மீத்திறம் படாமைச்
சித்திரக் கரணம் சிதைவுஇன்றி செலுத்தும்
அத்தகு தண்ணுமை அருந்தொழில் முதல்வனும், 55
சொல்லிய இயல்பினிற் சித்திர வஞ்சனை
புல்லிய அறிந்து புணர்ப்போன் பண்பின்
வர்த்தனை நான்கும் மயல்அறப் பெய்துஆங்கு
ஏற்றிய குரல்இளி என்றுஇரு நரம்பின்
ஒப்பக் கேட்கும் உணர்வினன் ஆகிப் 60
பண்அமை முழவின் கண்ணெறி அறிந்து
தண்ணுமை முதல்வன் தன்னொடு பொருந்தி
வண்ணப் பட்டடை யாழ்மேல் வைத்துஆங்கு
இசையோன் பாடிய இசையின் இயற்கை
வந்தது வளர்த்து வருவது ஒற்றி 65
இன்புற இயக்கி இசைபட வைத்து
வார நிலத்தைக் கேடுஇன்று வளர்த்துஆங்கு
ஈர நிலத்தின் எழுத்துஎழுத்து ஆக
வழுவின்று இசைக்கும் குழலோன் தானும்,
ஈர்ஏழ் தொடுத்த செம்முறைக் கேள்வியின் 70
ஓர்ஏழ் பாலை நிறுத்தல் வேண்டி
வன்மையிற் கிடந்த தார பாகமும்
மென்மையிற் கிடந்த குரலின் பாகமும்
மெய்க்கிளை நரம்பிற் கைக்கிளை கொள்ளக்
கைக்கிளை ஒழித்த பாகமும் பொற்புடைத் 75
தளராத் தாரம் விளரிக்கு ஈத்துக்
கிளைவழிப் பட்டனள், ஆங்கே கிளையும்
தன்கிளை அழிவுகண்டு அவள்வயிற் சேர
ஏனை மகளிரும் கிளைவழிச் சேர
மேலது உழையிளி கீழது கைக்கிளை 80
வம்புஉறு மரபின் செம்பாலை ஆயது
இறுதி ஆதி ஆக ஆங்குஅவை
பெறுமுறை வந்த பெற்றியின் நீங்காது
படுமலை செவ்வழி பகர்அரும் பாலைஎனக்
குரல்குரல் ஆகத் தற்கிழமை திரிந்தபின் 85
முன்னதன் வகையே முறைமையின் திரிந்துஆங்கு
இளிமுத லாகிய ஏர்படு கிழமையும்
கோடி விளரி மேற்செம் பாலைஎன
நீடிக் கிடந்த கேள்விக் கிடக்கையின்
இணைநரம்பு உடையன அணைவுறக் கொண்டுஆங்கு 90
யாழ்மேற் பாலை இடமுறை மெலியக்
குழல்மேற் கோடி வலமுறை மெலிய
வலிவும் மெலிவும் சமனும் எல்லாம்
பொலியக் கோத்த புலமை யோனுடன்,
எண்ணிய நூலோர் இயல்பினின் வழாஅது 95
மண்ணகம் ஒருவழி வகுத்தனர் கொண்டு
புண்ணிய நெடுவரைப் போகிய நெடுங்கழைக்
கண்ணிடை ஒருசாண் வளர்ந்தது கொண்டு
நூல்நெறி மரபின் அரங்கம் அளக்கும்
கோல்அளவு இருபத்து நால்விரல் ஆக 100
எழுகோல் அகலத்து எண்கோல் நீளத்து
ஒருகோல் உயரத்து உறுப்பினது ஆகி
உத்தரப் பலகையொடு அரங்கின் பலகை
வைத்த இடைநிலம் நாற்கோல் ஆக
ஏற்ற வாயில் இரண்டுடன் பொலியத் 105
தோற்றிய அரங்கில் தொழுதனர் ஏத்தப்
பூதரை எழுதி மேல்நிலை வைத்துத்
தூண்நிழல் புறப்பட மாண்விளக்கு எடுத்துஆங்கு
ஒருமுக எழினியும் பொருமுக எழினியும்
கரந்துவரல் எழினியும் புரிந்துடன் வகுத்துஆங்கு 110
ஓவிய விதானத்து உரைபெறு நித்திலத்து
மாலைத் தாமம் வளையுடன் நாற்றி
விருந்துபடக் கிடந்த அருந்தொழில் அரங்கத்துப்
பேர்இசை மன்னர் பெயர்ப்புறத்து எடுத்த
சீர்இயல் வெண்குடைக் காம்புநனி கொண்டு 115
கண்இடை நவமணி ஒழுக்கி மண்ணிய
நாவல்அம் பொலம்தகட்டு இடைநிலம் போக்கிக்
காவல் வெண்குடை மன்னவன் கோயில்
இந்திர சிறுவன் சயந்தன் ஆகென
வந்தனை செய்து வழிபடு தலைக்கோல் 120
புண்ணிய நன்னீர் பொற்குடத்து ஏந்தி
மண்ணிய பின்னர் மாலை அணிந்து
நலம்தரு நாளால் பொலம்பூண் ஓடை
அரசுஉவாத் தடக்கையில் பரசினர் கொண்டு
முரசுஎழுந்து இயம்பப் பல்இயம் ஆர்ப்ப 125
அரைசொடு பட்ட ஐம்பெருங் குழுவும்
தேர்வலம் செய்து கவிகைக் கொடுப்ப
ஊர்வலம் செய்து புகுந்துமுன் வைத்துஆங்கு,
இயல்பினின் வழாஅ இருக்கை முறைமையின்
குயிலுவ மாக்கள் நெறிப்பட நிற்ப, 130
வலக்கால் முன்மிதித்து ஏறி அரங்கத்து
வலத்தூண் சேர்தல் வழக்குஎனப் பொருந்தி
இந்நெறி வகையால் இடத்தூண் சேர்ந்த
தொல்நெறி இயற்கைத் தோரிய மகளிரும்
சீர்இயல் பொலிய நீர்அல நீங்க 135
வாரம் இரண்டும் வரிசையில் பாடப்
பாடிய வாரத்து ஈற்றில்நின்று இசைக்கும்
கூடிய குயிலுவக் கருவிகள் எல்லாம்
குழல்வழி நின்றது யாழே, யாழ்வழித்
தண்ணுமை நின்றது தகவே, தண்ணுமைப் 140
பின்வழி நின்றது முழவே, முழவொடு
கூடிநின்று இசைத்தது ஆமந் திரிகை
ஆமந் திரிகையொடு அந்தரம் இன்றிக்
கொட்டுஇரண்டு உடையதுஓர் மண்டிலம் ஆகக்
கட்டிய மண்டிலம் பதினொன்று போக்கி 145
வந்த முறையின் வழிமுறை வழாமல்
அந்தரக் கொட்டுடன் அடங்கிய பின்னர்,
மீத்திறம் படாமை வக்காணம் வகுத்துப்
பாற்பட நின்ற பாலைப் பண்மேல்
நான்கின் ஒரீஇய நன்கனம் அறிந்து 150
மூன்றுஅளந்து ஒன்று கொட்டி அதனை
ஐந்துமண் டிலத்தால் கூடை போக்கி
வந்தவா ரம்வழி மயங்கிய பின்றை,
ஆறும் நாலும் அம்முறை போக்கிக்
கூறிய ஐந்தின் கொள்கை போலப் 155
பின்னையும் அம்முறை பேரிய பின்றை,
பொன்இயல் பூங்கொடி புரிந்துடன் வகுத்தென
நாட்டிய நன்னூல் நன்குகடைப் பிடித்துக்
காட்டினள் ஆதலின், காவல் வேந்தன்
இலைப்பூங் கோதை இயல்பினில் வழாமைத் 160
தலைக்கோல் எய்தித் தலைஅரங்கு ஏறி
விதிமுறைக் கொள்கையின் ஆயிரத்து எண்கழஞ்சு
ஒருமுறை யாகப் பெற்றனள் அதுவே
நூறுபத்து அடுக்கி எட்டுக்கடை நிறுத்த
வீறுஉயர் பசும்பொன் பெறுவதுஇம் மாலை, 165
மாலை வாங்குநர் சாலும்நம் கொடிக்குஎன
மான்அமர் நோக்கிஓர் கூனிகைக் கொடுத்து
நகர நம்பியர் திரிதரு மறுகில்
பகர்வனர் போல்வதோர் பான்மையின் நிறுத்த,
மாமலர் நெடுங்கண் மாதவி மாலை 170
கோவலன் வாங்கிக் கூனி தன்னொடு
மணமனை புக்கு மாதவி தன்னொடு
அணைவுறு வைகலின் அயர்ந்தனன் மயங்கி
விடுதல் அறியா விருப்பினன் ஆயினன்.
வடுநீங்கு சிறப்பின்தன் மனையகம் மறந்துஎன். 175
(வெண்பா)
எண்ணும் எழுத்தும் இயல்ஐந்தும் பண்நான்கும்
பண்ணின்ற கூத்துப் பதினொன்றும் - மண்ணின்மேல்
போக்கினாள் பூம்புகார்ப் பொற்றொடி மாதவிதன்
வாக்கினால் ஆடரங்கில் வந்து.