அஃதாவது - பூம்புகார் நகரத்திருந்து முந்தை ஊழ்வினை கடைக்கூட்டுதலாலே கோவலன் கதிரவன் தோன்று முன்னமே கண்ணகியோடு இழந்த பொருளீட்டவெண்ணிப் புறப்பட்டவன் வழியிலே காவுந்தியடியைக் கண்டடிதொழுது, அவர் தம்மை வழித்துணையாகவும் பெற்று வருபவன், அந்நெறியில் ஏதந்தருவன இவை இவை என அறிவுறுத்திய கவுந்தியடிகளாரின் மொழி போற்றி, அவரோடும், தன் காதலியோடும் கழனிச் செந்நெற்கரும்பு சூழ் பழனத்தாமரைப் பைம்பூங் கானத்தே பறவைகள் பாடும் பாட்டும், கருங்கைவினைஞரும் களமரும் கூடி ஆரவாரிக்கும், ஆரவாரமும், சின்மொழிக் கடைசியர் கள்ளுண்டு களித்துப்பாடும் விருந்துறு பாடலும், ஏர்மங்கலப் பாட்டும், முகவைப் பாட்டும், கிணைஞர் செய்யும் இன்னிசைமுழ வொலியும், பிறவும் ஆங்காங்குக் கேட்டும் வழியில் அந்நாட்டின் கவினுறு வளம்பலவும் கண்டுமகிழ்ந்தும் மங்கலமறையோர் இருக்கையும், பிறவுமுடைய ஊரிடையிட்ட நாடுடன் கண்டு, நாட்கொரு காவதமன்றி நடவாமல் பன்னாட்டங்கிச் செல்பவன், உறையூர் புக்கு மறுநாள் அங்கிருந்து மதுரை நோக்கிச் செல்லும் காலத்தே அவ்வழியிற் கண்டனவும், அம் மதுரைமா நகரத்துப் புறஞ்சேரி புக்கதும், ஆங்கு இடைக்குல மடந்தை மாதரியின்பால் கவுந்தியடிகளார் கண்ணகியை அடைக்கல மீந்ததும், கோவலன் பின்பு மதுரைமூதூர் கண்டு மீண்டமையும், மறுநாள் கோவலன் சிலம்பு விற்கச்சென்று ஊழ்வினை உருத்து வந்தூட்டலாலே ஆங்குக் கள்வனெனப்பட்டுக் கொலையுண்டதும், அச் செய்தி கேட்டுக் கண்ணகி கொதித்தெழுந்து ஊர் சூழ்வந்து, அரசவை யேறி வழக்குரைத்ததும், அவ் வழக்கில் பாண்டியன் உயிர்நீத்ததும், அவன்றேவி உயிர்நீத்ததும், பின்னரும் கண்ணகி சினந்தணியாளாய், வஞ்சினம்கூறி மதுரை நகரந் தீயுண்ணச் செய்ததுவும், மதுரைமா தெய்வம் வந்து தோன்றி, கண்ணகிக்குக் கட்டுரை கூறித் தீவீடு செய்ததுவும், கண்ணகி மேற்றிசைவாயிலிற்புகுந்து வையையின் ஒருகரை வழியாக அத்திசை நோக்கிச் செல்வாள் நெடுவேள் குன்றத்தடிவைத்தேறி நின்ற பதினாலாம்நாளெல்லையில் அமரர் கோமான் தமர் அவளெதிர் வந்து, புகழ்ந்தேத்தி அவள் கணவனையும் காட்டி வரவேற்க வானவூர்தியில் ஏறிக் கோவலனோடு கண்ணகி விண்ணகம்புக்கதும் பிறவுமாகிய செய்தியைக் கூறும் பகுதியென்றவாறு.
இவையெல்லாம் மதுரையில் நிகழ்ந்தமையால் இது மதுரைக்காண்டம் என்னும் பெயர் பெற்றதென் றுணர்க.
இவையெல்லாம் மதுரையில் நிகழ்ந்தமையால் இது மதுரைக்காண்டம் என்னும் பெயர் பெற்றதென் றுணர்க.