Do not have a Cplus account?  Create an account

Log In

Stay logged in.
Can not access your account?

Google+

Sign in and start sharing with Google+

Only shared with the right people

Share some things with friends, others with some families but do not share anything to your boss!

Make your conversations come alive

Hangout make conversations come alive stockings photos, emoticons even group video calls for free!

Make your photos look better than ever

Automatic backup, organize, and improve your photos!

Do you know?

You can sign in to your Google+ account using your existing Google?

Results for keyword ""

Sign Up
Hangouts

மணல் கூரை

மணல் கூரை | தமிழ் பண்பாட்டுக் கூரை!

GO TO TOP


You are not connected. Please login or register

View previous topic View next topic Go down  Message [Page 1 of 1]

1பழங்காலத் தமிழகத்தின் தெய்வ நம்பிக்கை Empty பழங்காலத் தமிழகத்தின் தெய்வ நம்பிக்கை Sat May 25, 2013 6:18 pm

மணல் கூரை

மணல் கூரை
மணல் கூரை

மணல் கூரை

பதிவுகள் : 378

பதிவின் தரம் : 376

பதிவு விருப்பம் : 268

இணைந்தது : 06/04/2013


V.I.P MEMBER

V.I.P MEMBER
மனிதன் உணவுக்காக மிருகங்களை வேட்டையாடிக் காட்டு மிராண்டியாக வாழ்ந்த
காலகட்டத்தில் இடி, மழை, மின்னல், புயல், வெள்ளம் முதலிய இயற்கை
உற்பாதங்களைக் கண்டு பெரிதும் பயந்தான். அருவிகள், ஆறுகள், காடுகள்,
மரங்கள், மலைகள் முதலியவற்றைக் கண்டு அஞ்சினான். அவற்றால் தன் உயிருக்குத்
தீங்கு நேருமோ என அஞ்சிய அவன் “என்னை ஒன்றும் செய்து விடாதே; என்னைக்
காப்பாற்று” என்று அவற்றைத் தொழுது வணங்கினான். இவற்றை மட்டுமல்லாது,
ஆபத்து விளைவிக்கும் கொடிய காட்டு விலங்குகளான சிங்கம், புலி, யானை, கொடிய
நச்சுப் பாம்புகள் முதலியவற்றையும் அச்சத்தால் வணங்கினான்.

“கரந்து பாம்பொடுங்கும் பயம்பு மாருளவே

குறிக் கொண்டு மரங்ங் கொட்டி நோக்கிச்

செறிதொடி விறலியர் கைதொழுஉப் பழிச்ச

வறிது நெறி யொரீஇ வலஞ்செயாக் கழிமின்”

- மலைபடுகடாம் 199-202

(பரலையுடைய பள்ள நிலத்தின் பரப்பிலே பாம்புகள் மறைந்து கிடக்கும்
குழிகள் உள்ளன. அவற்றை மனத்தாலே குறித்துக் கொண்டு விலங்கிற்கு மரத்திலே
கொட்டிப் பார்த்து, செறிந்த வளையலையுடைய விறலியர் அப் பாம்பு மனம்
மகிழும்படி கையால் தொழுது வணங்கிப் போவீராக) என்ற பாணனின் கூற்று நம்
கவனத்துக் குரியதாகும்.

அச்சத்தை உண்டாக்கும் மலை முதலிய வற்றை யும் விலங்குகளையும் மனிதன்
தன்னினும் மேலான சக்தியாக எண்ணினான். கால வோட்டத் தில் அவற்றை தெய்வம்
என்று கருதி வணங் கினான்.

காட்டுமிராண்டி நிலையில் இருந்து வளர்ந்து முன்னேறி அநாகரிக நிலையை
அடைந்த கால கட்டத்தில் மனிதன் அருவிகள், ஆறுகள், கடல்கள், காடுகள்,
மரங்கள், மலைகள் முதலிய இடங்களில் தெய்வம் உறைவதாக நம்பி னான்”அணங் குடைச்
சிலம்பு, அணங்குடைச் சாரல், அணங்குடை நெடுங்கோடு, அணங்குடை நெடுவரை,
சூருடைச் சிலம்பு, சூர் உறை வெற்பு, பிறங்கு மலை மீமிசைக் கடவுள் முதலான
சங்க இலக்கியத் தொடர்கள் மலைகளில் தெய்வம் உறைவதாக மனிதன் நம்பியதைக்
கூறுகின்றன.

மலைகளில் மட்டுமல்லாது, மரங்களிலும் தெய்வம் உறைவதாக அவன் நம்பினான் என்ற செய்தியைச் சங்க இலக்கியங்கள் கூறுகின்றன.

“ஆலமர்கடவுள்; எரிமருள் வேங்கைக் கடவுள், கள்ளி நீழற்கடவுள், கடவுள்
மரத்த முள், கடவுள் முதுமரம், கடவுள் ஆலத்துத் தடவுச்சினை, கடம்பமர்
நெடுவேள், நெடுவீழ் இட்ட கடவுள் ஆலம், முதலான சங்க இலக்கியத் தொடர்கள்
மரங்களில் தெய்வம் உறைவதாக மனிதர்கள் நம்பியதைக் கூறுகின்றன.

மரங்கள், மலைகள் முதலியவற்றில் மட்டு மல்லாது, அருவிகள், ஆறுகள்,கடல்கள்
முதலிய நீர்த்துறைகளிலும் தெய்வம் உறையும் என்று மனிதன் நம்பினான்.
“அணங்குடை முந்நீர், கடல் கெழுசெல்வி, சூருடை நனந்தலைச் சுனை, நிலைத்துறைக்
கடவுள், நிறை சுனை உறையும் சூர்மகள்” முதலான சங்க இலக்கியத்தொடர்கள்
இதற்குச் சான்றளிக்கின்றன.

“பெருவரையடுக்கம் பொற்பச் சூர்மகள்

அருவி இன்னியத்து ஆடும்”

(பெரிய மலைச் சாரல்களில் வீழும் அருவியின் இசைக்கு ஏற்ப தெய்வமகளிர் ஆடுவர்) என்று நற்றிணை(34) கூறுகிறது.

“நம்படப்பைச்

சூருடைச் சிலம்பில் சுடர்ப்பூ வேய்ந்து

தாம்வேண்டு உருவில் அணங்குமார் வருமே”

(அச்சம் தரும் தெய்வம் உறைகின்ற மலையில் உள்ள பூக்களைச் சூடிக் கொண்டு
தெய்வமகளிர் நம் சோலையில் பலியுணவை ஏற்பதற்காக வருவார்கள்) என்று
அகநானூறு(158) கூறுகிறது.

காட்டுமிராண்டியாக வாழ்ந்த கால கட்டத்தில் அருவிகள், ஆறுகள், மலைகள்,
காடுகள் முதலியவற்றையே தெய்வமாகக் கருதி வணங்கிய மனிதன், காலவோட்டத்தில்
வளர்ந்து அநாகரிக நிலையை அடைந்த போது அவ்விடங்களில் தெய்வம் உறைகிறது என்று
நம்பினான்.

அணங்கு, அரமகளிர், ஆரரமகளிர், ஆரணங்கு, சூர், சூர்மகள், சூராமகளிர்,
தெய்வம், கடவுள் முதலிய பெயர்களால் தெய்வம் குறிக்கப் படுகிறது. எந்தத்
தனிப்பட்ட தெய்வத்தையும் இப்பெயர்கள் குறிப்பிடவில்லை. இப்பெயர்கள்
தெய்வங்களின் பொதுப் பெயர்களாகவே உள்ளன என்பது நம் சிந்தனைக்கு உரியதாகும்.

அந்தக் காலகட்டத்தில் நிலவிய சமூகம் ஆதிபொதுவுடைமைச் சமூகம் ஆகும். அச்ச
மூகத்தில் நிலம், கால்நடைகள் முதலிய அனைத்தும் சமூகம் முழுவதற்கும்
பொதுவாக இருந்தன. அவை இன்னும் தனியுடைமை ஆக வில்லை. வேட்டையில் கிடைத்த
விலங்காயினும் சரி; வெட்சிப் போரில் கவர்ந்து வந்த ஆநிரை ஆயினும் சரி;
தனக்குக் கிடைத்த எதனையும் மனிதன் சமூகத்தில் உள்ள அனைவருடனும் சமமாகப்
பங்கிட்டுக் கொண்டான். பங்கீட்டு உணர்வு அச்சமூகத்தின் இயல்பான பண்பாகவே
இருந்தது. எனவேதான் தெய்வங்களும் தனித்தனிப் பெயர் களால் குறிக்கப்படாமல்
அணங்கு, சூர் முதலான பொதுப் பெயர்களால் குறிக்கப்பட்டன. அதற்கு அந்தக் கால
கட்டத்தில் நிலவிய சமூக அமைப்பே காரணம் ஆகும். அது ஆதிப்பொதுவுடைமைச்
சமூகம் ஆகும்.

இப்பெயர்கள் அனைத்தும் பெண்பாற் பெயர்களாக உள்ளன என்பது நம் கவனத்துக்
குரியதாகும். ஆதி பொதுவுடைமைச் சமூகம் நிலவிய அந்தக் கட்டத்தில் சமூகம்
தாயின் தலைமையில் இயங்கியது. தாயே தலைவியாக இருந்து சமூகத்தை நிர்வகித்து
வந்தாள். தாய் வழியாகவே வம்சாவளி குறிக்கப்பட்டது. அக்காரணத்தால் தான்
தெய்வங்களின் பெயர்கள் அந்தக் கால கட்டத்தில் பெண்பாற்பெயர்களால்
குறிக்கப்பட்டன.

அணங்கு, சூர் என்னும் இப்பெயர்கள் துன்பம், அச்சம் என்னும் பொருள் தருவன
ஆகும். அணங்கு என்றால் துன்பம் தருபவள் என்று பொருள்; சூர் என்னும்
சொல்லுக்கு அச்சம் என்பது பொருள். ஆரணங்கு என்பது மிக்க துன்பத்தைத்
தருபவள் என்று பொருள்படும். சூரா மகள் என்னும் சொல்லுக்கு அச்சம் தரும்
தெய்வப் பெண் என்பது பொருளாகும்.

ஆண்களை அணங்கு, சூர் ஆகிய பெண் தெய்வங்கள் அச்சுறுத்தும் என்று சங்க
இலக் கியங்கள் கூறுகின்றன. இரவுக் குறியின்கண் தலைவியைக் காணத் தலைவன்
வரும் வழியின் ஏதம் குறித்துக் கூறும் தலைவி, புலி, பாம்பு, யாளி, கரடி,
பேய்கள், முதலைகள் முதலியவற்றுடன் சூர் என்னும் கொடிய பெண் தெய்வமும்
அவ்வழியின் கண் இருந்து தலைவனை அச்சுறுத்தும் என்று கவன்று கூறியதைக்
குறிஞ்சிப் பாட்டு கூறுகிறது.

அச்சம் தரும் பெண் தெய்வங்களான அணங்கு, சூர் முதலியவற்றுக்குப் பசு
முதலிய வற்றைப் பலியாகக் கொடுத்து அவற்றின் சினத்தைத் தணிக்க மனிதன்
முயன்றான்.

“தெய்வம் சேர்ந்த பராரை வேம்பிற்

கொழுப்பா எறிந்து குருதி தூஉய்ப்

புலவுப் புழுக்குண்ட வான்கண் அகலறை”

(பருத்த அடிப்பகுதியை உடைய வேம்பின் கண் உறையும் பெண் தெய்வத்துக்குக்
கொழுத்த பசுவைக் கொன்று அதன் குருதியைப் பலியாகத் தூவிய எயினர். அதன்
தசையைச் சூடேறிய பாறையில் பெய்து புழுக்கி உண்டனர்) என்று அகநானூறு
கூறுகிறது.

மழை குறைந்து அருவிகளிலும் ஆறுகளிலும் நீர் வற்றி வறட்சி ஏற்பட்ட
காலங்களில் நீரின் தேவைக்காக “மலையில் மழைபெய்வதாக” என்று மலைவாழ்
குறவர்கள் மலையுறை தெய்வத்தை வேண்டிக் கொண்டார்கள். மழை மிகுதியாக
பெய்ததும் “பெய்த மழை போதும்; மேகம் மேலே போவதாக” என்று வேண்டிக்
கொண்டார்கள். அதற்காக அவர்கள் அத்தெய்வத்துக்குப் பலிக்கடன்
செலுத்தினார்கள். இதனை,

மலைவான் கொள்கென உயர்பலி தூஉய்

மாரியான்று மழைமேக் குயர் கெனக்

கடவுட் பேணிய குறவர் மாக்கள்

பெயல்கண் மாறிய உவகையர்

புனத்தினை அயிலும்”

என்று புறநானூறு (143) கூறுகிறது.

ஆமான் மேல் அம்பெய்த கானவன் அம்புகுறி தப்பியதற்கு மலையுறை தெய்வத்தின்
சினமே காரணம் என்று கருதி அத்தெய்வத்தின் சினத்தைத் தணிப்பதற்காகப்
பலியிட்டு நீர் வளாவினான். இதனை,

“அமர்க்கண் ஆமான் அருநிறம் முள்காது

பணைந்த பகழி போக்கு நினைந்து கானவன்

அணங்கொடு நின்றது மலைவான்

கொள்கெனக்

கடவுள் ஒங்குவரை பேண்மார் வேட்டெழுந்து

கிளையொடு மகிழும்”

என்று நற்றிணை(165) கூறுகிறது.

இவ்வாறு தெய்வத்தின் சினத்தைத் தணிப் பதற்காக வேட்டுவர்
அத்தெய்வங்களுக்குப் பசு முதலியவற்றைப் பலியிட்டு வணங்கினர் என்ற
செய்தியைச் சங்க இலக்கியங்கள் கூறுகின்றன.

நெய்தல் நில மக்கள் சுறாமீனின் கொம்பை நட்டு அதனைத் தெய்வமாக வணங்கினர்.

“சினைச் சுறவின் கோடு நட்டு

மனைச் சேர்த்திய வல்லணங்கு”

என்று பட்டினப்பாலை இது குறித்து கூறுகிறது.

மேய்ச்சல் சமூகத்தவர் ஆன முல்லை நில மக்கள் பெண் எருமையின் கொம்பை நட்டு தெய்வமாக வணங்கினர் என்று முல்லைக் கலி(14) கூறுகிறது.

காலவோட்டத்தில் சமூக மாற்றம் படிப்படி யாக நிகழ்ந்தது. உணவுக்காக
விலங்குகளை வேட்டையாடித் திரிந்த மனிதன் தானிய சாகுபடி யில் ஈடுபட்டான் ;
கால்நடைகளை மந்தையாகத் திரட்டி மேய்த்தான். வேட்டைச் சமூகம் மேய்ச்சல்
சமூகமாக மாறியது. ஆணின் கடினமான உழைப் பாலும் முயற்சியாலும் உணவு
தானியங்களின் உற்பத்தி பெருகி உபரி நிலையை எட்டியது. தினை சாகுபடியிற்
போலவே கால்நடை வளர்ப்பிலும் ஆணின் பங்கு அதிகமாக இருந்தது. அதனால்
சமூகத்தில் கால்நடைச் செல்வம் பெருகியது. அதற்கு ஆணே காரணமாக இருந்தான்.
ஆணின் கையில் செல்வம் குவிந்தது.

கையில் செல்வம் குவிந்தநிலையில் ஆண் படிப்படியாக சமூகத்தின் தலைமை
இடத்துக்கு உயர்ந்தான். தலைமை இடத்தில் இருந்த பெண்ணை ஒதுக்கி விட்டு ஆண்
அந்த இடத்தை கைப்பற்றிக் கொண்டான். ஆணாதிக்கம் மேலோங்கிய நிலையில் பெண்
அடிமை நிலைக்குத் தள்ளப் பட்டாள்.

பெண்ணிடமிருந்து சமூகத்தின் தலைமை யிடத்தைக் கைப்பற்றிய ஆண்,சமயத்
துறையிலும் தன் ஆதிக்கத்தை நிலைநாட்டினான். இது வரையிலும் மலைகளிலும்
மரங்களிலும் உறைந் திருந்த பெண் தெய்வங்கள் ஆண்களை அச்சுறுத்தி வந்தன என்று
இலக்கியங்கள் கூறின. இந்நிலை யில், சமூகத்தின் தலைமையிடத்தைக் கைப்பற்றிய
ஆண், மலைகளிலும் மரங்களிலும் ஆண் தெய்வங்களைக் குடியேற்றினான். அவற்றில்
ஆண் தெய்வங்கள் உறைவதாகக் கூறினான். செவ்வேள், சேய், நெடுவேள், முருகன்
முதலிய ஆண்பாற் பெயர்களால் அத்தெய்வம் குறிக்கப்பட்டது. மலை யும் மலை
சார்ந்த இடமுமான குறிஞ்சி நிலத்தின் தெய்வமாக முருகன் கூறப்பட்டான்.

ஆணாதிக்கம் மேலோங்கிப் பெண்ணின் நிலை தாழ்ந்ததால், மலைகளில் உலவி ஆண்களை
அச்சுறுத்தி வந்ததாகக் கூறப்பட்ட அணங்கு, சூர் முதலிய பெண்தெய்வங்களின்
முக்கியத்துவம் குறைந்து மறைந்தது. சமூகத்தில் பெண்ணின் நிலை தாழ்ந்து
ஆணின் நிலை உயர்ந்தது போலவே, பெண் தெய்வங்களின் நிலை தாழ்ந்து ஆண்
தெய்வங்களின் நிலை உயர்ந்தது.

இரவுக் குறியிடத்தில் தலைவியைக் காண இரவு நேரத்தில் வந்த தலைவனைக்
காட்டு விலங்குகளான புலி, கரடி, யானை முதலிய வற்றுடன் அச்சம் பொருந்திய
பெண் தெய்வங் களும் துன்புறுத்தும் என்று தலைவி அஞ்சிக் கூறிய நிகழ்வுகளைச்
சங்க இலக்கியங்கள் கூறின. ஆனால் ஆணாதிக்கம் மேலோங்கிய நிலையில், தினைப்
புனக் காவலுக்குச் சென்ற தலைவியை ஆண் தெய்வமான முருகன் அச்சுறுத்தினான்.
அதனால் தலைவியின் மேனிநிறம் மாறு பட்டது; உடல் மெலிந்தது; நெற்றியில் பசலை
படர்ந்தது என்று தாய் கூறினாள். மகளின் மேனி மெலிவுக்கும்
நிறமாறுபாட்டுக்கும் முருகன் தலைவியை அச்சுறுத்தியதே காரணம் என்று கருதிய
தாய், முருகனின் சினத்தைத் தணித்துச் சாந்தி செய்வதற்காக வேலனை அழைத்து
வெறியாட்டு நிகழ்த்தச் செய்தாள் என்று சங்க இலக்கியங்கள் கூறலாயின.

குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் என நிலம் நான்காகப் பகுக்கப்பட்ட
போது, அந் நிலங்களுக்கு உரிய தெய்வங்களாக ஆண் தெய்வங் களே குறிக்கப்பட்டன.
அந்நிலங்களில் உலவி ஆடவரை அச்சுறுத்தி வந்ததாகக் கூறப்பட்ட. பெண்
தெய்வங்கள் முற்றிலும் புறக்கணிக்கப் பட்டன. மலையும் மலைசார்ந்த இடமுமான
குறிஞ்சி நிலத்தின் தெய்வமாக முருகன் கூறப் பட்டான். திருமால் முல்லை
நிலத்துக்குரிய தெய்வம் எனப்பட்டது. இந்திரன் மருத நிலத்துக் குரிய
தெய்வமாகக் கூறப்பட்டான். வருணன் நெய்தல் நிலத்துக்குரிய தெய்வம்
எனப்பட்டது. இவ்வாறு, ஆண் தெய்வங்களே நான்கு நிலங் களுக்கும் உரிய
தெய்வங்களாகக் கூறப்பட்டமை, சமூகத்தில் ஆணாதிக்கம் மேலோங்கியதன்
விளைவேயாகும். இத் தெய்வங்களில் முருகனைத் தவிர்த்த பிற தெய்வங் கள் ஆரியக்
கடவுளர் என்பது நம் கவனத்துக் குரியதாகும்.

கொற்றவை என்னும் பெண் தெய்வம் பாலை நிலத்துக்கு உரிய தெய்வமாகக் கூறப்
பட்டது. பாலை தனிநிலம் அன்று; மழையின்றி வறட்சி ஏற்பட்டு முதுவேனிற்
காலத்தில் முல்லை நிலமும், குறிஞ்சி நிலமும் தம் இயல்பில் திரிந்து பாலை
நிலமாக மாறும் :

“முல்லையும் குறிஞ்சியும் முறைமையில்

திரிந்து

நல்லியல்பு இழந்து நடுங்குதுயர் உறுத்துப்

பாலை என்பதோர் படிமம் கொள்ளும்”

என்று பாலைநிலம் உருவானது குறித்துச் சிலப்பதிகாரம் கூறுகிறது.
முக்கியத்துவம் இல்லாத இப்பாலை நிலத்துக்குரிய தெய்வமாகவே கொற்றவை என்னும்
பெண் தெய்வம் கூறப்பட்டது. இந்நிலை, சமூகத்தில் பெண்ணின் முக்கியத்துவம்
பறிக்கப்பட்டு விட்ட நிலையையே உணர்த்துகிறது.

திருமால், முருகன் முதலிய பெயர்கள் தெய்வங்களின் பொதுப்பெயர்களாக
அல்லாமல், ஒவ்வொரு பெயரும் ஒவ்வொரு தெய்வத்தைச் சுட்டுவதாக அமைந்துள்ளன.
அதற்கு, அந்தக்கால கட்டத்தில் தோன்றி நிலவிய சமூக அமைப்பே காரணம் ஆகும்.
சமூகத்தில் ஆணாதிக்கம் மேலோங்கித் தனிச் சொத்துடைமை பற்றிய சிந்தனை தலை
தூக்கி இருந்தது.

சமூகத்தின் பொதுச் சொத்துக்களாக இருந்த நிலம், கால்நடைகள் முதலிய
செல்வங்கள் சமூகத்தின் தலைவர்களாக இருந்த இனக்குழுத் தலைவர்கள் மற்றும்
ஆண்டைகளின் ஆக்கிரமிப் புக்கு உள்ளாகியிருந்தன. தனிச் சொத்துடைமை தோன்றி
விட்ட சமூகத்தில் தெய்வங்களின் பெயர்களும் கூட தனியுடைமை ஆகிவிட்டன!.

தினைப்புனக் காவலுக்குச் சென்றிருந்த பெண்களை அச்சுறுத்தி வந்ததாகக்
கூறப்பட்ட முருகன், ஆற்றல் மிக்க தெய்வமாகக் கூறப்பட்டது. அவனது ஆற்றல்
குறித்தும் அளப்பரிய சக்தி குறித்தும் திருமுருகாற்றுப்படை விரிவாகக்
கூறுகிறது. “உறுநர்த்தாங்கிய மதனுடை நோன்றாள்”

(தன்னைச் சேர்ந்தாரது தீவினைகளைப் போக்கி, அவரைத் தாங்கிய அறியாமையை உடைத்தற்குக் காரணமாகிய வலிமையுடைய கால்கள், என்றும்,

“செறுநர்த் தேய்த்த செல்லுறழ் தடக்கை”

(பகைவர்களை அழித்த இடியைப் போன்ற வலிமையுடைய கைகள்) என்றும் அவனுடைய கால்களும் கைகளும் புகழப்பட்டன.

வில்லும் வேலும் ஏந்தி இரவுக் குறியிடத்தில் காதலியைக் காணச் சென்று
கொண்டிருந்த வீரனை, மலைச் சாரல்களில் உலவித் திரிந்து அச்சுறுத்திக்
கொண்டிருந்த அணங்கும் சூரும் ஆன பெண் தெய்வங்கள், தற்போது
திருப்பரங்குன்றத்து மலைச்சாரலில் உள்ள சோலைகளில் தம் அச்சுறுத்தும் ஆற்றலை
இழந்து எளிய மானிட மகளிரைப் போல முருகனது சேவற்கொடியை வாழ்த்தியவாறு
விளையாடிக் கொண்டிருந் தார்கள்.

கோழியோங்கிய வென்றடு விறற் கொடி

வாழிய பெரிதென் றேத்திப் பலருடன்

சீர்திகழ் சிலம்பகம் சிலம்பப் பாடிச்

சூரரமகளிர் ஆடும் சோலை”

என்று திருமுருகாற்றுப்படை இது குறித்துக் கூறுகிறது.

இவ்வாறு, பேராற்றல் வாய்ந்த பெருந் தெய்வமாக முருகன் கூறப்பட்டதற்கும்,
ஆற்றல் மிக்கவையாகக் கூறப்பட்ட அணங்கும் சூருமான பெண் தெய்வங்கள் தம்
ஆற்றலை இழந்து முருகனது சேவற்கொடியை வாழ்த்திக் கொண் டிருந்தார்கள் என்று
கூறப்பட்டதற்கும் சமூகத்தில் மேலோங்கியிருந்த ஆணாதிக்க சிந்தனையே காரணம்
ஆகும் எனல் மிகையன்று.
– வெ.பெருமாள்சாமி

View previous topic View next topic Go down  Message [Page 1 of 1]

Permissions in this forum:
You cannot reply to topics in this forum

Style of Google. Code by SkinOne