தென் மேற்குப் பருவ மழை கேரளாவிலும், கர்நாடகத்திலும் தீவிரமடைந்துள்ளது. இதனால் தமிழகத்தின் சில பகுதிகளில் நல்ல மழை பெய்ய ஆரம்பித்துள்ளது.
தமிழகத்தில் இன்று அதிகபட்சமாக உத்திரமேரூர், திருத்தணியில் தலா 4 செமீ மழை பெய்தது. அதேபோல நீலகிரி மாவட்டம் தேவலா, தஞ்சாவூர் மாவட்டம் மதுக்கூர், வாணியம்பாடி, ஏற்காடு, சத்தியமங்கலம், வால்பாறை, உதகமண்டலம், நடுவட்டம், ஆலங்குடி, ஒட்டன்சத்திரம், திருமயம், கன்னியாகுமரி, நாகர்கோவில், காவேரிப்பாக்கம், சேலம், செங்கோட்டை, தென்காசி உள்ளிட்ட பகுதிகளிலும் நல்ல மழை பெய்தது.
நாகர்கோவிலில் சுமார் ஒரு மணி நேரம் மழை கொட்டித் தீர்த்தது. சென்னையில் இன்று மாலையில் மேகக் கூட்டம் திரண்டு நல்ல காற்றுடன் மழை பெய்தது. இதனால் சென்னையில் வெப்பம் தணிந்து குளுமை குடியேறியுள்ளது.
காவிரி நீர்பிடிப்புப் பகுதிகளில்
அதேபோல காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கடந்த 3 நாட்களாக மழை பெய்ததால் காவிரி ஆற்றில் நீர் வரத்து அதிகரித்தது.
கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை, அஞ்செட்டி, கெலமங்கலம். தளி மற்றும் பிலிகுண்டுலு ஆகிய பகுதிகளிலும், தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி, பாலக்கோடு, பெண்ணாகரம், பஞ்சப்பள்ளி, நாட்றாம் பாளையம் உள்ளிட்ட பகுதிகளிலும் கடந்த 3 நாட்களாக இரவு மற்றும் மாலை நேரத்தில் மழை பெய்து வருவதால் காவிரி ஆற்றில் நீர் வரத்து அதிகரித்து உள்ளது.
காவிரி ஆற்றில் நீர் வரத்து அதிகரித்து உள்ளதால் மேட்டூர் அணைக்கும் நீர் வரத்து அதிகரித்தது. நேற்று வினாடிக்கு 79 கன அடி தண்ணீர் மட்டுமே வந்தது. இன்று காலை 8 மணி நிலவரப்படி அணைக்கு நீர் வரத்து 222 கன அடியாக உயர்ந்தது.
ஜூன் 4ம் தேதி வரையிலான வானிலை முன்னறிவிப்பு - தமிழகத்தின் சில பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
சென்னை நகரைப் பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்தில் வானம் மேகமூட்டமாக காணப்படும். சில நேரங்களில், சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும். வெப்ப நிலை வெகுவாக குறையும்.