ஆறேழு மாதங்களுக்கு முன்பாக இருக்கலாம். விஜய் தொலைக்காட்சியின் ‘நீயா, நானா' நிகழ்ச்சியில், நண்பர் கோபி, இளைஞர்களைப் பார்த்து ஒரு வினாவை முன்வைக்கின்றார். "நீங்கள் அறிந்த வாழும் தமிழ் எழுத்தாளர்கள் ஒரு சிலரின் பெயர்களைச் சொல்லுங்கள்". சில நொடிகள் அமைதியாய்க் கழிகின்றன.
எவரிடமிருந்தும் எந்த விடையும் வரவில்லை. "ஒரு எழுத்தாளர் பெயர் கூடவா, உங்கள் நினைவுக்கு வரவில்லை?" என்று திருப்பிக் கேட்டவுடன், ஓர் இளைஞர் கை உயர்த்துகின்றார். ஒலிவாங்கியைக் கையில் வாங்கி, "எழுத்தாளர் மு.வ." என்கிறார்.
அந்த அரங்கில் வேறு எந்த விடையும் வரவில்லை. மு.வ.வின் பெயரைக் குறிப்பிட்டதில் மிகுந்த மகிழ்ச்சிதான் என்றாலும், அவரும் ‘வாழும் எழுத்தாளர்' இல்லை. எனவே வெளிவந்த ஒரு விடையும் சரியானதாக இல்லை. அன்றைய நிகழ்ச்சியில் பங்கேற்ற, இளம்வயது ஆண்கள், பெண்கள் எவருக்கும் வாழும் தமிழ் எழுத்தாளர்களில் ஒருவரைக் கூடத் தெரியவில்லையா, அல்லது அந்த நிமிடத்தில் சட்டென்று தோன்றவில்லையா என்பதை உறுதியாகக் கூற முடியவில்லை.
மு.வ.வின் பெயரைக் குறிப்பிட்ட அந்த இளைஞரை நோக்கி, "நீங்கள் என்ன செய்து கொண்டிருக்கின்றீர்கள்?" என்று கோபி கேட்க, "நான் எம்.ஏ., தமிழ் படிக்கின்றேன்" என்றார் அவர். உண்மையாகவே நான் அதிர்ச்சியில் உறைந்து போனேன்.
தமிழ் எழுத்துகளிலிருந்து, இன்றைய இளைய தலைமுறை எவ்வளவு விலகி நிற்கிறது என்பதை அந்நிகழ்ச்சி உணர்த்தியது.
மிக அண்மையில், இன்னொரு அலைவரிசையில் ஒரு நிகழ்ச்சியைப் பார்த்தேன். புரட்சிக் கவிஞர் பாரதிதாசனின் பெரிய அளவிலான ஒரு படத்தை, ஒரு கல்லூரி வாயிலில் நின்று கொண்டிருக்கும் மாணவ, மாணவியர்களிடம் காட்டி, "இவர் யார் என்று தெரியுமா?" என்று கேட்கப்படுகின்றது. ஒவ்வொருவராக அந்தப் படத்தைப் பார்க்கின்றனர். சிரிக்கின்றனர். விடை சொல்ல வெட்கப்படுகின்றனர்.
"சார்லி சாப்ளின் மாதிரியே மீசை வச்சிருக்காரு. ஆனா அவரு இல்லே. வேறு யாருன்னும் தெரியலே" என்கிறார் ஒரு மாணவர்.
"எங்க தாத்தா மாதிரியே இருக்காரு" என்று ஒரு மாணவி சொல்ல, எல்லோரும் சிரிக்கின்றனர். வேறு விடைகள் வருமா என்று தொகுப்பாளர் ஒவ்வொருவரின் முகத்தையும் பார்த்துக் கொண்டே வருகின்றார். ஒரு மாணவர் சட்டென்று முன்வந்து, "எனக்குத் தெரியும், இது முத்துராமலிங்கத் தேவரின் படம்" என்கிறார். அவருக்கு முத்துராமலிங்கத் தேவரையும் தெரியவில்லை என்பது புரிந்தது.